மதுரை துணிக்கடை தீவிபத்து மீட்புப்பணியின்போது, இன்னுயிரை இழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தித் தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

202

மதுரை துணிக்கடை தீவிபத்து மீட்புப்பணியின்போது, இன்னுயிரை இழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தித் தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

இரு நாட்களுக்கு முன்பாக மதுரையிலுள்ள துணிக்கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், முன்கள வீரர்களாகத் தீயை அணைக்கப் போராடியபோது சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு தீயணைப்பு வீரர்களும் அவ்விபத்தில் சிக்குண்டு தங்கள் இன்னுயிரை இழந்தனர் எனும் செய்தி பெருந்துயரத்தைத் தந்தது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன். இவ்விபத்தில் சிக்குண்டு பலத்தக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சின்னக்கருப்பு, கல்யாணக்குமார் ஆகிய இருவரும் விரைந்து குணமடைந்து மீண்டு வரவேண்டுமென எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன். அதிகப்படியானப் பாதுகாப்பு குறைபாடுகள், தரமற்றப் பாதுகாப்பு உபகரணங்கள், மிதமிஞ்சிய பணிச்சுமை, வயதுக்கு மீறிய பணி போன்றவைகளே இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு முழுமுதற் காரணங்களாகின்றன. இதனால், இந்த ஆண்டில் மட்டும் 3 தீயணைப்பு வீரரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இவ்வகை உயிரிழப்புகள் இனி ஒருபோதும் தொடர்ந்திராத வண்ணம் முறையானப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தீயணைப்பு வீரர்களின் உயிர்காக்க தகுந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்திட வேண்டும்.

எவ்வுளவு நிதியளித்தாலும் அது ஓர் உயிருக்கு ஈடாகாதெனினும், பொதுமக்களின் நல்வாழ்விற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தங்கள் உயிரையே ஈகம் செய்யத்துணிந்து தன்னலமற்று, அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றும் காவல், இராணுவம், மருத்துவம், தூய்மைப்பொறியாளர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினருக்கு உயிரிழப்பின்போது அரசு வழங்கும் நிதியுதவியானது அவர்களது குடும்பத்தின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதாக இல்லை என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் கருத்தோட்டமாக உள்ளது. பொதுச்சேவையில் ஈடுபட்டு மக்கள் உயிர்காக்க தங்கள் உயிரை இழப்பவர்களுக்கு, அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என்பதே நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவருகிறது. அந்தவகையில், தங்கள் உயிரையே ஈகம் செய்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு அளித்துள்ள 25 இலட்ச ரூபாய் நிதியுதவியானது போதுமானதில்லை. ஆகவே, தற்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை 25 இலட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாயாகவும், காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் வீரர்களுக்கான நிதியுதவியை 3 இலட்சத்திலிருந்து 10 இலட்ச ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசிற்குக் கோரிக்கை விடுக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here