பிரான் மலை கல் குவாரிக்காகவெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது. தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

157

பாரி வள்ளல் வாழ்ந்த பறம்பு மலை எனப் போற்றப்படும் பிரான் மலை கல் குவாரிக்காகவெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது. தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழரின் பெருமைக்குரிய அடையாளமும் கடையேழு வள்ளல்களில் முதன்மையானவருமான அரும்பெரும்பாட்டன் பாரி மன்னன் வாழ்ந்ததாக கூறி, தமிழ் இலக்கியச் சான்றுகளோடு ஆய்வறிஞர்களால் அடையாளப்படுத்தபட்ட பிரான் மலை எனப்படும் பறம்பு மலையில் ஆண்டுதோறும் பாரி விழாவினை தமிழ்ச் சான்றோர்கள் வெகு சிறப்பாக நடத்தி வந்தனர். அத்தகைய வரலாற்றுப் பெருமைக்குரிய பறம்பு மலையை இன்று மலை மணலுக்காகவும், கல் குவாரிக்காகவும் சிலர் சிதைத்து வருகின்றனர் என்று வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியையும் மனவலியையும் தருகிறது.

இதனைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி கடந்த சூலை-13 அன்று சிவகங்கை அரண்மனை வாயிலில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தது. ஆனால் போராடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய அரசு, பரம்பு மலை சிதைக்கப்படுவதைக் கண்டுக்கொள்ளவேயில்லை. எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணற் கொள்ளை தடுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து ‘பறம்பு மலை மீட்புக் குழு’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் பறம்பு மலை சிதைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முற்பட்டனர். இதற்காக மணற் கொள்ளை நடைபெறும் இடத்தை இன்று நேரில் ஆய்வு செய்ய சென்ற அக்குழுவினரை செல்லும் வழியிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு இத்தகைய வரலாற்றுப் பெரும்பிழை இனியும் தொடராமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

உலகெங்கும் இருநூறு, முந்நூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட தேசங்களே தங்களிடம் உள்ள பழைமை வாய்ந்த அடையாளங்களை கண்போல் போற்றி பாதுகாத்துவரும் வேளையில், ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பெருமைகள் பல கொண்ட நீண்ட நெடும் தொல் பேரினமான தமிழினம் தனது தொன்ம அடையாளங்கள், புகழ்வாய்ந்த முன்னோர்களின் நினைவிடங்கள், போற்றுதற்குரிய வரலாற்றுச் சின்னங்கள் யாவற்றையும் இழந்துவிட்டு கையறு நிலையில் நிற்கிறது.

இன்றைக்கும் எஞ்சி நிற்கும் தமிழ் இலக்கியங்கள் மட்டுமே தமிழர் அடையாளங்களை பாதுகாத்து வருகின்றது. இலக்கியங்கள் காட்டும் பெரும்பாலான தமிழ் மன்னர்கள், அவர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்களது வெற்றிக்கான அடையாளங்கள் என்று எவையும் நம்மிடத்தில் இன்று இல்லை. கல்லணை, தஞ்சை பெரிய கோயில் என்று காலத்தை வென்று மிஞ்சி நிற்கும் ஒன்றிரண்டை தவிர அனைத்தையும் நாம் இழந்துவிட்டோம்.

நமக்கான அடையாளங்களை நாம் இழக்கும்போது அழிந்து போவது அடையாளம் மட்டுமல்ல நம்முடைய வரலாறும்தான் என்பதை தமிழ்ப்பேரினம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். எஞ்சியுள்ள அடையாளங்களை இனியாவது போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது வரலாற்று கடமை, நம் இன முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.

அண்மைக் காலமாக தமிழகத்தில், இயற்கை வளங்களான மலைகள், ஆறுகள், ஏரிகள், காடுகள், விளைநிலங்கள் தொடர்ந்து கொள்ளை போக கூடிய சூழல் உருவாகுவதும் அதை எதிர்த்து நாம் போராடுவதுமே தொடர்கதையாகி விட்டது.

வளத்தைச் சுரண்டுவது எப்படி வளர்ச்சியாகும்? அதிலும் மனிதர்களால் உருவாக்கவே முடியாத இயற்கை அன்னையின் கொடைகளான மலைகள், ஆறுகள் போன்றவற்றை முற்றாக அழிக்கும் செயலில் ஈடுபடுவதும், ஈடுபடுவோரை அனுமதித்து அரசே வேடிக்கை பார்ப்பதென்பதும் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு நாம் செய்யும் பெருந்துரோகமாகும்.

இயற்கை வளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டு அடுத்த தலைமுறையின் நல்வாழ்விற்கு நாம் எதனை விட்டுச்செல்ல போகிறோம்?

கடந்த காலங்களில் கல் குவாரிகளுக்காகவும், மலை மணலுக்காகவும், கிரானைட் உள்ளிட்ட கனிம வளத்திற்காகவும் ஏராளமான மலைகள், குன்றுகள் வெட்டி எடுக்கப்பட்டுவிட்டன. அதை தடுக்க முடியாமற் போனதற்கு ஆற்றாமையால் இன்றளவும் உளமாற வருந்திக்கொண்டிருக்கின்றோம். சாதி-மதத்தைக் காப்பாற்றுவதற்கும் அதற்காகப் போராடுவதற்கும் இங்கு பல கட்சிகள், இயக்கங்கள் உண்டு; ஆனால் இயற்கை அன்னையை, பூமித் தாயைக் காப்பாற்ற எவரும் முன்வருவதில்லை. உண்மை ஒன்று தான், மண்புழு கூட நம்மை வாழவைக்கும்; ஆனால் சாதியும் மதமும் நம்மைக் காப்பாற்றாது; மாறாக சாகடிக்கும்!

இதனை உணர்ந்த பிள்ளைகள் நாம் தான், நமது பெரிய தகப்பன் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்கள் வழியில் போராடி பல இயற்கை வளங்கள் கொள்ளைபோகாமல் தடுத்துள்ளோம். அண்மையில் கூட மதுரையில் குவாரிக்காக ஆனை மலையையும், நியூட்ரினோ ஆய்வுக்காக தேனி மேற்கு தொடர்ச்சி மலையும் ஆக்கிரமிக்கப்பட முயன்றபோது எதிர்த்து போராடிய மக்களோடு நாமும் இணைந்து போராடித் தடுத்தோம்.

அதுபோல் பிரான் மலை அழிக்கப்படுவதை நாம் தடுத்து நிறுத்தாவிட்டால், அடையாளம் என்ற வகையில் நம்மின முன்னார்களுக்கு மட்டுமின்றி, இந்த மண்ணின் வளம் என்ற வகையில் நமக்கு பின்வரும் தலைமுறையினருக்கும் நாம் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

எனவே இதையெல்லாம் உணர்ந்து தமிழர்களின் போற்றுதற்குரிய அடையாளமாக விளங்க கூடிய பாட்டன் பாரி வள்ளலின் புகழ்கூறும் பிரான் மலை எனப்படும் பறம்பு மலை அழிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் எனவும், கைது செய்யப்பட்டுள்ள பறம்பு மலை மீட்புக் குழுவினர் அனைவரையும் வழக்கு ஏதுமின்றி விடுவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். மேலும் பறம்பு மலையில் பெரும்பாட்டன் பாரி வள்ளலுக்கு மணிமண்டபம் கட்டவேண்டுமெனவும், ஆண்டுதோறும் அங்கு நடைபெற்றுவந்த பாரி விழாவினை இனி அரசு விழாவாக கொண்டாட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவி முகாம்! – மாணவர் பாசறை