போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் இச்சூழலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முன்வர வேண்டும்! – நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை

73

போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் இச்சூழலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முன்வர வேண்டும்! – நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை

‘நீட்’ தேர்வின் மூலம் விளைந்த மனநெருக்கடியினால் அடுத்தடுத்து மாணவப் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்கிற செய்தி நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே நாளில் மூன்று இளந்தளிர்கள் தங்களுயிரை மாய்த்துக்கொண்டு சாகிற அளவுக்கு ‘நீட்’ தேர்வு மாணவர்களின் மருத்துவக் கனவைக் கருக்கி, உயிரைக் குடிக்கும் கொலைக்கருவியாக மாறியிருப்பதைக் கண்கூடாக உணர்ந்தும் அலட்சியப்போக்கோடு அரசுகள் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மருத்துவப்படிப்பை மாற்றி, மருத்துவத்தை சேவைக் கண்கொண்டு பார்க்கிற மனநிலையைத் தகர்த்து வணிகமாக்கி, இலாபமீட்ட முயலும் ஆளும் வர்க்கத்தின் சதிச்செயலே ‘நீட்’ தேர்வு என்பதைத் தெளிவுபட உணர்ந்து, அதற்கெதிராக மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி, அத்தேர்வு முறையை அகற்றக்கோரி இன்றளவிலும் போராடி வரும் நிலையிலும் மத்திய, மாநில அரசுகள் ஆழ்ந்த அமைதி கொள்வது மிகப்பெரும் அரசப்பயங்கரவாதமாகும்.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கும்போதும் அதனைத் தனதாக்கிக் கொண்டு, அதில் ஆதிக்கம் செலுத்துவதும், மாநிலங்களின் கல்வியுரிமையைப் பறிப்பதும், ஒற்றைமயப்படுத்தித் தேர்வு முறைகளைப் புகுத்துவதுமான மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொடர் மக்கள் விரோதச் செயல்பாடுகள் யாவும் சனநாயகத்தைச் சிதைக்கும் எதேச்சதிகாரப்போக்காகும். தமிழக மக்கள் ‘நீட்’ தேர்வுக்கெதிராக ஒருமித்துக் குரலெழுப்பிய நிலையில் விளைந்த அரசியல் நெருக்கடி காரணமாக, ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து மூன்று ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தர மறுத்து வருவது தமிழர்களுக்கு இழைக்கப்படும் பச்சைத்துரோகமாகும்.

கல்வி என்பது மாணவர்களுக்குள் பொதிந்துக் கிடக்கும் தனித்திறனை வெளிக்காட்டி, அதனை மேம்படுத்தி வளர்த்து வார்த்தெடுத்து, வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான முதிர்ச்சியையும், மனவுறுதியையும், தன்னம்பிக்கையையும் ஊட்டுவதாக அமைய வேண்டும். கல்விக்கூடங்கள் என்பவை மாணவர்களுக்கு உற்சாகமும், உத்வேகமும் அளிக்கக்கூடிய உளவியல் பயிற்சிக்கூடங்களாக அமைய வேண்டும். தேர்வு முறைகள் என்பவை மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை, தாங்களே அளவிடுவதற்கான கருவியாக அமைய வேண்டும். ஆனால், இன்றைய கல்வி முறையும், கல்விக்கூடங்களும், தேர்வு முறைகளும் முழுக்க முழுக்க வணிகமயமாக்கப்பட்டு, பணம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டு மாணவர்களின் உளவியலைச் சிதைத்து, மனநெருக்கடிக்குள் தள்ளி அவர்களைச் சாகடித்து வருவது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

ஒரே நாளில் ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்யா, மோதிலால் என மூவர் நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்டிருப்பது தமிழ்ப் பேரினத்திற்கே ஏற்பட்ட கொடும் இழப்பாகும். ‘நீட்’ தேர்வினால் ஏற்பட்டுள்ள இந்நெருக்கடியான காலக்கட்டத்தில் மாணவச் செல்வங்கள் தன்னம்பிக்கையோடும், மனவுறுதியோடும் இருக்க வேண்டும். எச்சூழலிலும் நம்பிக்கையை இழக்காது அயர்ச்சிக்கும், தற்சோர்வுக்கும் ஆட்படாது போராடி வெற்றிபெறும் உத்வேகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். போர்க்குணமும், போராட்ட உணர்வும், வீரவுணர்ச்சியும், விவேகத்தோடு இயங்கும் ஆற்றலும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் மனம்தளராது இச்சூழலையும் எதிர்த்துப் போராட முன்வர வேண்டும். நாளைய உலகைப் படைக்கக் காத்திருக்கும் நவயுகச் சிற்பிகளான மாணவத் தம்பி, தங்கைகள் தன்னம்பிக்கையோடு இத்தருணத்தை எதிர்கொள்ள வேண்டும் என அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

‘நீட்’ தேர்வு எனும் மாணவர்களின் கனவைப் பொசுக்கும் சமூக அநீதிக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமையாகும். ஆகவே, நமது மாணவப் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, நலவாழ்வுக்காக, கல்வியுரிமைக்காக அநீதிக்கெதிராகக் கருத்தியல் பரப்புரையும், களப்போராட்டமும் செய்து சனநாயகப்போர் புரிய வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்.

 

இடும்பாவனம் கார்த்திக்

மாணவர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திமதுரையில் நீட் தேர்வின் அச்சம் காரணமாக தன்உயிரை மாய்த்து கொண்ட மாணவி ஜோதி துர்க்கா வின் உடலுக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அடுத்த செய்திநீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன போராட்டம