திருச்சியில் இன்று பாஜகவின் இளந்தாமரை மாநாடு! – நரேந்திர மோடியைக் காண குவியும் மக்கள்.

3

பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருச்சி வருகிறார். கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சி மன்றக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் அவர் ஆதரவு திரட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

தமிழகத்தின் மைய நகரமாக இருப்பதால் முக்கிய அரசியல் கட்சிகளின் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் திருச்சியிலேயே அதிகமாக நடைபெறுகின்றன. பாஜகவுக்கும் திருச்சி புதிய இடமல்ல. காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ரங்கராஜன் குமாரமங்கலம், 1998 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.அவரது ஏற்பாட்டில், 1999-ஆம் ஆண்டு திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் பாஜகவின் 4வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வாஜ்பாய், அத்வானி, பிரமோத் மகாஜன் ஆகியோரோடு அப்போது பாஜக தேசியப் பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடியும் பங்கேற்றார். அதன்பிறகு 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திருச்சிக்கு வருகிறார் நரேந்திர மோடி.

கேரள மாநிலம், கொச்சியில் மாதா அமிர்தானந்த மயி தேவியின் 60வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கும் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு திருச்சி வருகிறார். விமான நிலையத்திலிருந்து நேராக மாநாட்டு மேடைக்கு வருகிறார்.மாநாடு நடைபெறும் ஜி கார்னர் மைதானத்தில் செங்கோட்டை வடிவில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 60 ஆயிரம் பேர் அமர்வதற்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளதாகவும், 2 லட்சத்துக்கும் அதிகமானோரின் வருகையை எதிர்பார்ப்பதாகவும் மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட்ட மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மோடியுடன் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருச்சியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள பாஜகவின் இளந்தாமரை மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை கூடுதல் தலைவர் (ஏடிஜிபி) ராஜேந்திரன் தலைமையில், ஒரு ஐஜி (மாநகரக் காவல் ஆணையர்), 5 டிஐஜிக்கள், 12 எஸ்பிக்கள் உள்ளிட்ட 4,000 போலீஸார் மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் பாஜகவின் இளந்தாமரை மாநாடு பொன்மலை ஜி.கார்னர் ரயில்வே திடலில்இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க தமிழக காவல்துறைத் தலைவர் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி வந்தார். தமிழக நுண்ணறிவுப் பிரிவு ஐஜி அம்ரேஷ் பூஜாரியும் அவருடன் வந்தார். இவர்கள் இருவரும், புதன்கிழமை காலை திருச்சியில் மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவ், மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ராமசுப்பிரமணி மற்றும் 5 டிஐஜிக்கள், 12 எஸ்பிக்களுடன் ஆலோசனை நடத்தினர்.இவர்களுடன் 4,000 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், குஜராத் மாநில காவல்துறையைச் சேர்ந்த ஒரு டிஐஜி, ஒரு எஸ்பி தலைமையில் 16 பேர் கொண்ட குழுவும் திருச்சி வந்துள்ளது.

குஜராத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கைலாஷ்நாதன், திருச்சியில் நரேந்திர மோடி பேசுவதற்கான உரையை தயாரித்து வருகிறார். தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் விவாதித்து மோடி பேசுவதற்கான தகவல்களை அவர் இறுதி செய்துள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். மோடியின் முக்கிய தளபதியாகச் செயல்படும் கைலாஷ்நாதன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.