13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை

28

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றிவருவோரை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக மத்திய தொழிலாளர் ஆணையர் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் 4,200 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இந்த முடிவு ஏற்புடையதல்ல.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்லாண்டுக் காலமாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றிவரும் 13,000 பேரையும் நிரந்தரப் பணியாளர்களாக என்.எல்.சி. நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒன்றரை மாதக் காலமாக அனைத்துத் தொழிலாளர்களும் போராடி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் நிரந்தரப் பணியாளர்களாக ஏற்றுக்கொள்வோம் என்றே 2008ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் அமைச்சர் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஒப்புக்கொண்டதற்கு மாறாக, ஒப்பந்தத் தொழிலாளர் எவரையும் பணி நிரந்தரம் செய்யாமல் என்.எல்.சி. நிர்வாகம் ஏமாற்றியதால்தான் இப்போது போராட்டம் கடுமையாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், அவர்களில் மூன்றில் ஒரு பங்கினரை மட்டும் நிரந்தரம் செய்வோம் என்று என்.எல்.சி. நிர்வாகம் கூறுவது நியாயமற்றது என்பது மட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கும் எதிரானதாகும்.

இந்த நிலையை வலியுறுத்தியே நெய்வேலியில் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் நாம் தமிழர் கட்சி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இராஜஸ்தான் மாநிலத்தில் இயங்கிவரும் ஒரு நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கில் (வழக்கு எண்: 2585/ 2006) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாத், மார்கண்டேய கட்ஜூ ஆகியோர் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். “ஒப்பந்த முறையை கேடயமாகப் பயன்படுத்தி, ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பை பல கோடி ரூபாய்க்குத் திருடி வருகின்றனர். நாட்டின் வளர்ச்சி என்ற பெயரிலும், தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்பதை உள்ளடக்கிய புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரிலும் தொழிலாளர்களின் உழைப்பினைச் சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு நிறுவனமும் சட்டத்திற்கு மேலானது கிடையாது” என்று அத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியது.

ஒரு தொழிலாளி ஒரு ஆண்டில் 240 நாட்கள் பணியாற்றினாலே அவரை நிரந்தரமாக்க வேண்டும் என்று தொழிலாளர் சட்டம் கூறுகிறது. அவ்வாறிருக்க, 13,000 பேரில் மூன்றில் ஒரு பங்கினரை மட்டும் நிரந்தரமாக்குவோம் என்ற என்.எல்.சி. நிர்வாகத்தின் முடிவு சட்டத்திற்குப் புறம்பானதாகும். எனவே ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13,000 பேரையும் ஒரு கால வரையறைக்குப்பட்டு பணி நிரந்தரம் செய்யுமாறு தொழிலாளர் ஆணையர் என்.எல்.சி. நிர்வாகத்தை வற்புறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

என்.எல்.சி. நிறுவனம் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பால் ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் இலாபத்தில் இயங்கி வருகிறது. எனவே அனைவரையும் நிரந்தரமாக்குவதில் எந்த நிதிச் சிக்கலும் இல்லை என்பதையும் நாம் தமிழர் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

முந்தைய செய்திதமிழக அரசியல் இதழுக்கு மறுப்பு: செந்தமிழன் சீமான் அறிக்கை
அடுத்த செய்திதிருவள்ளூர் மாவட்டத்தில் 02.06.2012 மற்றும் 03.06.2012 அன்று நடைபெற்ற இலங்கையில் கொலைக்களம் திரையிடல் மற்றும் நாம் தமிழர் கொள்கை விளக்கக் கூட்டங்கள் – புகைப்படங்கள் இணைப்பு!!