2021 சட்டமன்றத்தேர்தல் யுத்தத்திற்குப் படையைக் கட்டி, இலக்கை நோக்கிப் பாய்வோம் – சீமான் பேரழைப்பு

949

                                                நாள்: 12.09.2020

அன்பின் உறவுகளுக்கு!

வணக்கம்.

‘அரசியல் என்பது ஆட்சி அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரமல்ல; அது மக்களுக்குப் புரியும் சேவை; மக்களின் நலவாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு’ என்கிறார் என்னுயிர் அண்ணன், நம்முயிர்த் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். எம் மொழியையும், இனத்தையும், மண்ணையும் காத்திட தமிழ்த்தேசிய இனத்திற்கான தூய அரசியலை இந்த மண்ணில் உருவாக்கக் கடந்த 11 ஆண்டுகளாக கடுமையான அடக்குமுறை, ஒடுக்குமுறைகள், ஊடகப் புறக்கணிப்புகளுக்கு மத்தியில் இன விடுதலைக் கருத்தியலை விதையாய் விதைத்து, வரலாற்றால் புறக்கணிக்கப்பட்டு தாழ்த்தி வீழ்த்தப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் மக்களை அரசியல்படுத்தி, அதிகாரப்படுத்தும் சனநாயகப் பெரும்போராக 2021ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் நமக்கு அமையவிருக்கிறது.

இந்நிலையில், நமது கட்டுக்கோப்பையும், கவனத்தையும் திசைதிருப்புகிற‌ பல வேலைகள் திட்டமிட்டு செயற்கையாக உண்டாக்கப்படுவதையும், அவதூறுகள் அள்ளி வீசப்படுவதையும் நாம் அறிகிறோம். இது அனைத்துமே 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான நமது பணிகளில் இருந்து நம்மை விலக்கித் திசை திருப்புவதற்கான ஏற்பாடுகள் என்பதை உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, இந்தச் சமயத்தில் நம்மை நோக்கி வருகிற எல்லாவிதமான அவதூறுகளுக்கும், விமர்சனங்களுக்கும் நாம் பதில் அளித்துக்கொண்டே இருப்பது தேவையற்ற நேர விரயத்தை ஏற்படுத்தி தேர்தலுக்கான நமது தயாரிப்புப் பணிகளைத் தாமதப்படுத்தும்.

எனவே, களச்செயற்பாடுகளிலும், சமூக வலைதளங்களிலும் இயங்கி வருகின்ற என்னுயிர் தம்பி, தங்கைகள் இதுபோன்ற திசைத்திருப்பல்களை பொருட்படுத்தாமல் எதிர்வினை என்ற பெயரில் பதிவுகளையோ, காணொளிகளையோ இனிமேலும் வெளியிட வேண்டாமென அறிவுறுத்துகிறேன்.

கட்சிப்பணிகள் குறித்தான செய்திகள், அமைப்பின் செயல்பாடுகள் குறித்தான தகவல்கள் ஆகியவற்றைப் பரப்பும் ஊடகங்களாக சமூக வலைதளங்களை தம்பி, தங்கைகள் பயன்படுத்த வேண்டும் எனவும், 2021 தேர்தல் யுத்தத்திற்கான வலிமையான நமது படையணியை தயாரிக்கின்ற மாபெரும் இன கடமைப் பணிகளில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும் எனவும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

புரட்சி வெல்லட்டும்!


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திபுலி கொடி ஏற்றும் விழா
அடுத்த செய்தி‘நீட்’ தேர்வை ரத்துசெய்யாது காலங்கடத்தி பிணக்குவியல் மேலே நாற்காலிப் போட்டு அமர்ந்திருக்கும் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்பட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும்! – சீமான் எச்சரிக்கை