ஹூகோ சாவேசுக்கு வீரவணக்கம்

8

புரட்சியாளன் ஹூகோ சாவேசுக்கு நாம் தமிழர் கட்சி வீர வணக்கம்

வெனிசுலா நாட்டு மக்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய ஜனநாயகப் புரட்சியாளன் ஹூகோ சாவேசின் மறைவு, வெனிசுலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, தென் அமெரிக்க நாடுகளின் உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும்.

வளமிக்க நாடாக இருந்தும், வெனிசுலா நாட்டின் எண்ணெய் உள்ளிட்ட வளங்களை அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பெரு நிறுவனங்கள் அங்கு ஒரு பொம்மை ஆட்சியை ஏற்படுத்தி, அந்நாட்டு வளங்களைச் சுரண்டி கொழுத்தன. ஆனால், வெனிசுலா நாட்டு மக்களோ வறுமையில் உழன்றுகொண்டிருந்தனர். அந்த நிலையை மாற்ற உள்நாட்டு புரட்சி செய்தார் சாவேஸ். அவருடைய புரட்சி தோற்றாலும், சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், அந்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மாபெரும் அரசியல் தலைவராக உயர்ந்தார். ஜனநாயக வழியில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த சாவேஸ் செய்த முதல் காரியம், தனது நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தை நாட்டுடமை ஆக்கினார். கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்த பல்லாயிரம் கோடிகளை மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழல்களை தொடங்கவும் அரசே முதலீடு செய்தது. இதனால், அந்நாட்டு மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்த நிலை படுவேகமாக மாறியது.

சாவேஸ் மேற்கொண்ட சீர்திருந்தங்களை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஜனநாயக சர்வாதிகரம் என்று சித்தரித்தன. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சாவேஸ், மக்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு நிறைவேற்றிய திட்டங்களால் குழந்தை பிறப்பில் இறக்கும் சதவீதமும், உடல் நலமும் பெரிதும் மேம்பட்டது. மூன்றாம் உலக நாடுகளிலேயே மிகச் சிறந்த வாழ்கை நலம் அளிக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய நாடாக வெனிசுலா மாறியது. தனது நாட்டில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலையை உணர்ந்த சாவேஸ், பொதுவுடமை நாடான கியூபாவில் இருந்து மருத்துவர்களைக் கொண்டு வந்து மக்கள் நல்வாழ்வை உறுதிப்படுத்தினார்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தை முதலாளித்துவ தொழில் மயக் கொள்கை மட்டுமே முன்னேற்றும் என்கிற மேற்கத்திய பொருளாதார ஆலோசனைகள் அடிப்படையற்றவை என்பதை சாவேஸ் தனது ஆட்சியின் மூலம் நிரூபணம் செய்தார். இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளின் வளத்தை உலகமயமாக்கல் என்ற பெயரில் உலகப் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நிலை நாளும் அதிகரித்து வரும் நிலையில், தனது நாட்டு மக்களின் நல்வாழ்வை மட்டுமே முன்னுரிமையாகக் கொண்டு சாவேஸ் கடைபிடித்த தேசப் பொருளாதாரக் கொள்கை மூன்றாம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக ஆகியுள்ளது.

ஒரு இளம் புரட்சியாளராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய சாவேஸ், தனது 14 ஆண்டுக்கால ஆட்சியின் மூலம் வெனிசுலா நாட்டை மதிப்பிற்குரிய நிலைக்கு உயர்த்தினார். லெனின், மாவோ, எர்னஸ்டோ சேகுவாரா, பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களின் வரிசையில் வரலாற்றில் நிலைத்து வாழும் பேரைப் பெற்று மறைந்துள்ளார் சாவேஸ். அந்த புரட்சியாளருக்கு நாம் தமிழர் கட்சி தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திஈரோடை மாவட்டத்தில் தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் நடைபெறவுள்ளது.
அடுத்த செய்திலயொலா கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் – அண்ணன் சீமான் நேரில் சென்று ஆதரவு!!