வெளி மாநிலத்தில் உயிரிழந்த மாணவர்களின் தொடர் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் – – சீமான் வலியுறுத்தல்

134

அறிக்கை: வெளி மாநிலத்தில் உயிரிழந்த மாணவர்களின் தொடர் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும். வெளிமாநிலத்தில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

சண்டிகரில் மருத்துவம் பயின்று வந்த மருத்துவ கிருஷ்ணபிரசாத் மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சண்டிகரில் மருத்துவ மேற்படிப்பு பயின்று வந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணபிரசாத் மரணம் பெரும் அதிர்ச்சியினையும், ஆழ்ந்த மனத்துயரினையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவரது குடும்பத் துயரத்தில் பங்கேற்கிறேன்.

சீனா, ரஷ்யா என வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று வரும் தமிழக மாணவர்களெல்லாம் எவ்வித அச்சுறுத்தலுமில்லாது பாதுகாப்பாகத் திரும்புபோது வெளிமாநிலங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டும் மர்மமான முறையில் இறந்துபோவது இந்தியக் கட்டமைப்பையையே கேள்விக்குள்ளாக்குகிறது. திருப்பூர் சரவணன், சேலம் முத்துக்கிருஷ்ணன், திருப்பூர் சரத்பிரபு, இராமேஸ்வரம் கிருஷ்ணபிரசாத் என நீளும் இம்மரணங்கள் யாவும் எதேச்சையாக நடந்தது என்றுகூறி கடந்து சென்றுவிடக் கூடியதல்ல. அதிலும் கிருஷ்ணபிரசாத் மிக அதிக மதிப்பெண் எடுத்து முதல் நிலையில் இருந்த மாணவர். அவர் இந்தி தெரியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டார் என்பது அதிக சந்தேகங்களை வரவழைக்கிறது. தமிழக மாணவர்களின் மருத்துவ இடங்களுக்காக அவர்கள் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்கள் என்பதே இம்மரணங்கள் வாயிலாக நமக்குத் தெரிய வரும் செய்தியாகும்.

கடந்த 2016ஆம் ஆண்டு டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த தம்பி சரவணன் விஷ ஊசியைச் செலுத்திப் படுகொலை செய்யப்பட்டார். தொடக்கத்தில் அதனை தற்கொலை எனக்கூறி டெல்லி காவல்துறையினர் மூடி மறைத்ததும், பிறகு உடற்கூறு ஆய்வில் அது படுகொலை எனக் கண்டறியப்பட்டதும் நாடறிந்தது. ஆனால், இன்றைக்குவரை சரவணனைக் கொன்ற கொலையாளிகள் கைதுசெய்யப்படவில்லை என்பதிலிருந்தே வெளி மாநிலத்தில் வாழும் தமிழக மாணவர்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் கொண்டிருக்கிற அக்கறையின்மையும், அலட்சியமும் புலப்படும்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சேலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணமும் தற்கொலை என்றுகூறி முடித்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, இவ்வாண்டின் தொடக்கத்தில் டெல்லி யூ.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் இறந்தார். தற்போது அதன் நீட்சியாகவே சண்டிகரில் மாணவர் கிருஷ்ண பிரசாத் இறந்திருக்கிறார். இதனையும் தற்கொலை எனக்கூறி வழக்கை முடிக்கிற வேலையினைச் செய்துவிட்டார்கள். இம்மரணங்களை தற்கொலை எனக் கூறி முடித்துவிட முயலுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. வெளி மாநிலத்தில் வாழும் தமிழக மாணவர்கள் மர்மமான முறையில் தொடர்ந்து இறந்து போகிறபோது அதுகுறித்த விசாரணையை முடுக்கிவிடாது அவ்வழக்கினை முடிப்பதன் மூலம் ஆளும் அரசுகள் எதனையோ மூடிமறைக்க முயலுகின்றன என்கிற சந்தேகம் வலுக்கிறது.

எனவே, வெளி மாநிலத்தில் மரணித்த மாணவர்களின் மரணங்கள் குறித்து மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், தமிழக அரசானது உடனடியாக இவ்விவகாரத்தில் சீரிய முயற்சி எடுத்து வெளி மாநிலத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், உயிரிழந்த மாணவர் கிருஷ்ண பிரசாத் குடும்பத்திற்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திமதுரை மாணவி சித்ராதேவி படுகொலை: பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கடும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசென்னை சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு