வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வு கொளத்தூர் மணி கைதிற்கு சீமான் கடும் கண்டனம்

27

வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வு  கொளத்தூர் மணி கைதிற்கு சீமான் கடும் கண்டனம்

கடந்த1-11-2013 அன்று  சேலம் வணிகவரித்துறை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் திராவிடர் விடுதலைக்கழகத்தலைவர் பெருமதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்களின் கைது செய்யப்பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. தங்கை இசைப்பிரியாவிற்கு சிங்கள பேரினாவாத இலங்கை அரசு இழைத்த கொடூரச்செயல்கள் காணொளி சாட்சியமாக இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டு இருப்பதை கண்டு உலகத் தமிழினம் கொதித்து,வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சூழலில் திரு. கொளத்தூர் மணி அவர்களை தமிழக காவல்துறை கைது செய்திருப்பது வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வாக அமைந்து விட்டது.

பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற வன்முறை செயல்களை நாம் ஒருபோதும்  ஆதரிக்கவில்லை.  ஆனால் தன் இனம் அழிந்து , தமிழீழம் சுடுகாடாக மாற்றப்பட்ட சூழலில், மனிதத்தன்மையற்ற கொடூரங்களை இழைத்த சிங்கள பேரினவாத அரசினை  நியாயப்படுத்தும்  முகமாக நடைபெறும்  பொதுநலவய மாநாட்டில் 8 கோடி தமிழர்கள் வாழும் இந்தியா கலந்துக் கொள்ள முடிவு எடுத்திருப்பதாக வருகின்ற செய்திகள் இளைய சமூகத்தினரை வன்முறை பாதையில் திருப்புவதற்கான அடிப்படையாக அமைகின்றன . தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சியினரும் ஒன்று சேர்ந்து கோரிக்கை விடுத்தும் கூட, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டும் கூட மத்திய காங்கிரசு அரசு தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியப்படுத்தி வருகிறது .   நாம் கத்தி கதறினாலும்  கேட்காத இந்திய நாட்டின் செவிட்டுச் செவிகளை வன்முறைப் பாதையில் தான் திறக்கலாம் என்று நம்புகிற அளவிற்கு தமிழின இளையோரை இந்தியப் பெருநாடு விரக்திக்கு ஆளாக்கி இருக்கிறது என்பதை ஆட்சியாளர்களும், தலைவர்களும் உணர்ந்துக் கொள்ள வேண்டிய தருணம் இது .

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர், பெருமதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்கள் நாடறிந்த தலைவர்.அவரை நட்டநடு இரவில் கைது செய்ய வேண்டிய அவசரமும் ,அவசியமும் என்ன என்பதை தமிழக காவல் துறை விளக்கவேண்டும். இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவய மாநாட்டிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் பெருமதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்களின் போராட்டங்களை முடக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் தான்  அவரை நள்ளிரவு  2  மணிக்கு  அவசர  அவசரமாக தமிழக காவல்துறை  கைது செய்து இருக்கிறது .  திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை கைது செய்திருக்கிற தமிழக அரசின்  நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாமன் வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளகூடது என்பதை வலியுறுத்தி 27-10-2013 காலை 10 மணிக்கு காந்திபுரம், தமிழ்நாடு உணவகம் முன்பு தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்…
அடுத்த செய்திதூத்துக்குடி மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.