வீரமும் தீரமும் அறிவும் கொண்ட தமிழ் பெண்களின் சாட்சியாக விளங்கியவர் தமிழினி – சீமான் இரங்கல்

38

 

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு மகளிர் அணிப் பொறுப்பாளராக இருந்த தமிழினி ஞாயிறு அதிகாலை காலமானார். அதையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழீழ தேசிய ராணுவமான விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளீர் அணியின் அரசியல் பிரிவு பொறுப்பாளாராக இருந்த பெருமதிப்பிற்குரிய தமிழினி என்ற சிவகாமிஜெயக்குமரன் கடந்த 18-10-2015 ஞாயிறு அதிகாலை காலமானார் என்ற செய்தி எம் ஆழ் மனதில் மீளா பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது. தாம் கொண்டிருந்த மண்ணின் விடுதலை என்ற பற்றுறுதியில் இருந்து இறுதிவரை விலகாமல் இருந்த தமிழினி தமிழீழ தாயக விடுதலைப் போரில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் களத்திலும், அரசியல் பிரிவிலும் போராடியதன் அடையாளச்சின்னமாக விளங்குகிறார். இனவிடுதலை, பெண்விடுதலை, சமூகவிடுதலை என்ற புரட்சிக்கர கோட்பாட்டுத் தளங்களில் தாயக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த எமது தேசியத் தலைவர் மேதகு பி[dropcap][/dropcap]ரபாகரன் வழிகாட்டுதலில் ஆண்களுக்கு இணையாக பல்லாயிரக்கணக்கான பெண்களும் பங்குகொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் செழுமைப்படுத்தினார்கள். அவ்வரிசையில் கடந்த 1991 ஆம் ஆண்டு தேச விடுதலை உணர்வின் பாற் ஈர்க்கப்பட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தமிழினி 2009 மே மாதம் வரை மக்களோடு மக்களாக களத்தில் நின்று தமிழீழ மக்களையும், தாயக விடுதலையையும் தன் உயிருக்கு மேலாக நேசிக்கிற தனது உணர்வினை மெய்ப்பித்தார்.

29slide1
மக்களையும், மண்ணையும் உயிராக கடைசி வரை நேசித்து வாழ்ந்த தமிழினி மறைவு தமிழ்த் தேசிய இனத்தின் ஈடுசெய்ய முடியா இழப்பு. கடந்த 2009 ஈழப்போரின் முடிவிற்கு பின் தமிழினி சிங்கள பேரினவாத ராணுவத்தினால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு பல்வேறு சித்தரவதைகளுக்கு உள்ளாகி மனதும் உடலும் சுகவீனமாகி, திட்டமிட்ட தவறான சிகிச்சையால் உயிர்கொல்லி புற்றுநோய்க்கு ஆளாகி மறைந்திருப்பது சிங்கள பேரினவாதத்தின் கோர முகத்தை உலகிற்கு அம்பலப் படுத்தி இருக்கிறது. முள்ளிவாய்க்கால் போரினில் பிடிப்பட்ட, சரண் அடைந்த முன்னாள் போராளிகள் பலரும் இப்படியாக மர்மமான முறையில் மரணமடைந்து வருவது ஏற்கனவே எம்மைப் போன்ற தமிழ் அமைப்புகள் இனவாத சிங்கள பேரினவாத அரசின் மீது சுமத்தி வருகிற இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கிறது.
சிங்கள பௌத்த இனவாதிகளின் வன்முறைக்கு எதிராக முக்கியமாக தமிழ்ப்பெண்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புலிகள் கட்டமைத்த மக்கள் ராணுவத்தில் பங்கேற்று களத்தில் நின்ற பெண்களின் வீரத்திற்கும் தீரத்திற்கும் சாட்சியாக இருந்தவர் தமிழினி. வீரமும் தீரமும் மட்டுமல்லாது தனது மிகுந்த அறிவுத்திறனால் அரசியல் பிரிவு மகளிர் அணியில் தலைமை பொறுப்பாளராக உயர்ந்த நன்மதியாளர் தமிழினி. “தமிழினி ஒருபோதும் சிங்கள மக்களிடம் குரோத மனப்பான்மையுடன் இருக்கவில்லை” என்று சிங்கள பத்திரிக்கையாளர்களே பாராட்டும் வண்ணம் அரசியல் பிரிவில் மிகுந்த முதிர்ச்சியோடும் நுண்ணறிவோடும் செயல்பட்டவர்.

நான் ஈழம் சென்றிருந்த காலத்தில் பெருமதிப்பிற்குரிய தமிழினி அவர்களை சந்திக்கிற மகத்தான வாய்ப்பு எனக்கு வாய்த்தது. அச்சந்திப்பில் என் மீது அவர் காட்டிய அன்பும், அக்கறையும் என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாதவை. அவருடனான கலந்துரையாடலில் அவர் தமிழக அரசியலையும், உலக அரசியலையும் எந்த அளவிற்கு உள்வாங்கியிருந்தார் என்பதையும், உலக அரசியல் அறிவில் அவர் எத்தகைய நிபுணத்துவம் கொண்டிருந்தார் என்பதையும் நான் அறிந்தேன். ஆயிமாயிரம் மாவீரர்களின் இலட்சியக்கனவான தமிழீழ சோசலிச குடியரசு நாட்டினை உருவாக்குதலில் பெண்களின் கடமை குறித்து தனக்கென தனித்துவமான பார்வையை தமிழினி கொண்டிருந்தார். கனவும், இலட்சிய நோக்கும், புரட்சிக்கர சிந்தனையும், தலைமை மீது அளவுக்கடந்த பற்றுறுதியும் தமிழினி அவர்களை தனித்துவப்படுத்தின.
இறுதிக்காலங்களில் பேரினவாத சிங்களக் கரங்களில் அவர் சிக்குண்டு பட்டப் பாடுகள் அளவற்றவை. மிகச்சிறந்த குண இயல்புகளோடு, சித்தாந்த தெளிவோடு, உலகம் தழுவிய அரசியல் பார்வையோடு விளங்கிய பெருமதிப்பிற்குரிய போராளி தமிழினி சிங்கள பேரினவாதம் மிதித்துப் போட்ட எம் காந்தள் மலர்களில் ஒன்றாக திகழ்கிறார். விடுதலைப் போரில் தமிழ்த்தேசிய இனம் அடைந்த துயர்களில்,இழப்புகளில் ஒன்றாக தமிழினியின் இழப்பும் இருக்கிறது. எந்த இலட்சியத்திற்காக அவர் களத்தில் நின்றாரோ, அந்த இலட்சியம் நிறைவேறுவதற்கு உயிர் உள்ளளவும் உழைப்போம் என அவர் மறைந்த இந்த துயர்ப் பொழுதில் நாம் தமிழர் கட்சி உறுதியேற்கிறது.
பெருமதிப்பிற்குறிய போராளி தமிழினி அவர்களுக்கு எனது புரட்சிகர வீரவணக்கத்தினை நாம் தமிழர் கட்சி சார்பில் செலுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திதமிழ்நாடு நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு செந்தமிழன் சீமான் வரவேற்பு
அடுத்த செய்திஆலங்குளம் தொகுதி, மருதம்புத்தூரில் தெருமுனைக்கூட்டம்