விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்த உத்தரவுக்கு மூன்று வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் – சென்னை உயர் நீதி மன்றம்.

30
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு கடந்த 14.5.2010 அன்று உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கை குறித்து விசாரிக்கும் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பாயம் விசாரணை நடத்தி விடுதலைப் புலிகள் இயக்கம் மீது மத்திய அரசு தடை விதித்தது சரியானதுதான் என்று கடந்த 12.11.2010ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நீதிபதி முன்பு நேரில் ஆஜராகி வாதிட்டார்.

மத்திய அரசின் அறிவிப்பு ஆணையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஆதரவாளர்கள், அனுதாபிகள் தீர்ப்பாய விசாரணையில் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிவில் உரிமை சட்டத்தின் கீழ் விசாரணையில் பங்கேற்க அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தேன். ஆனால் தீர்ப்பாயம் எனது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் மட்டுமே மனுதாக்கல் செய்ய முடியும் என தீர்ப்பாயம் கூறியது தவறு என்றார்.தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் குறுக்கிட்டு உங்களது மனுவை தீர்ப்பாயம் நிராகரித்ததை எதிர்த்து ஏன் வழக்கு தொடரவில்லை என்று கேட்டார். அதற்கு வைகோ தீர்ப்பாயம் விசாரணையில், எனது கருத்துக்களை தெரிவிக்க அனுமதித்து இருந்தது. ஆனால் அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய தீர்ப்பாயம் அனுமதிக்கவில்லை.

அப்போது மத்திய அரசு வழக்கறிஞர்  ரவீந்திரன் குறுக்கிட்டு தீர்ப்பாயம் உத்தரவால் யாரும் பாதிக்கப்பட்டால் மத்திய அரசிடம் முறையிடுவதற்கு சட்டவிரோத செயல்தடுப்பு சட்டத்தில் வழிவகை உள்ளது என்றார். அதற்கு வைகோ, இது சரியான நிவாரணம் அல்ல. மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுவது போலாகும். மத்திய அரசிடம் நீதி கிடைக்காததால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று கூறினார்.இதையடுத்து தலைமை நீதிபதி இக்பால் குறுக்கிட்டு, மத்திய அரசிடம் முறையிடலாம் என்று சட்டத்தில் கூறியிருப்பது சரியான தீர்வாகாது. எனவே இந்த மனுவுக்கு 3 வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முந்தைய செய்தி22.12.2010 தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
அடுத்த செய்திபுதுச்சேரி பெ.தி.க. தலைவர் லோகு. அய்யப்பன் அவர்களை சீமான் சிறையில் சந்தித்தார்