விகடன் நிறுவனத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் மரணம் தமிழினத்தின் இணையற்ற இழப்பு. -சீமான் இரங்கல்

28
விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
பத்திரிகை உலகத்தின் பாரம்பரியப் பெருமை கொண்டவரும் அனுபவம் நிறைந்த அறிவுக் களஞ்சியமுமான அய்யா பாலசுப்பிரமணியம் அவர்களின் மரணச் செய்தி கேட்டு துடித்துப் போனேன். தமிழ் வாசகர்களை ரசனையாளர்களாகவும் நல்ல புரிதல் நிறைந்தவர்களாகவும் மாற்றிய பெருமை விகடன் குழுமத்துக்கு உண்டு. ஆள்வோர் தவறு செய்தாலும் அதனை நெஞ்சத் துணிவோடு சுட்டிக்காட்டவும், நிறை குறைகளை உரக்கச் சொல்லவும் அய்யா பாலசுப்பிரமணியம் அவர்கள் ஒருபோதுமே தயங்கியதில்லை. எம்.ஜிம்.ஆர் முதல்வராக இருந்தபோது ஒரு கருத்துப்படம் வெளியிட்டதற்காக சிறைக்குச் சென்று வந்த அய்யா பாலசுப்பிரமணியம் அவர்கள், அப்போதைய அரசாங்கத்தையே அபராதம் கட்ட வைத்த துணிச்சல்காரர். பத்திரிகைத் தர்மத்தின் ஆகச்சிறந்த உதாரணமாக தன்னை இறுதிக் காலம் வரை நிலை நிறுத்திக் கொண்டவர்.
பத்திரிகை துறையில் மட்டும் அல்லாது திரைப்படத் துறையிலும் அய்யா வாசனின் வாரிசாக நிறைய சாதித்தவர். விருப்பு வெறுப்பற்ற செய்திகளை நடுநிலை தவறாமல் அதேநேரம் வித்தியாசமான விதத்தில் வாசகர்களுக்கு வழங்கிய அய்யா பாலசுப்பிரமணியம் அவர்கள் நல்ல தமிழ் எழுத்தாளர்களை தன் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியவர். மதிப்புக்குரிய ஜெயகாந்தன், சுஜாதா உள்ளிட்ட எழுத்தாளர்கள் இன்றைக்கு தமிழின் அடையாளாமாக விளங்குகிறார்கள் என்றால், அவர்களின் எழுத்துப்புலமையை வெளியுலகுக்கு கொண்டுவந்த பெருமை அய்யாவையே சாரும்.
மகத்தான பத்திரிகை நிர்வாகியாகவும் ஆகச்சிறந்த ரசனையாளராகவும் எவரிடமும் காணாத பெருங்குணம் நிறைந்தவராகவும் விளங்கிய அய்யா அவர்களின் மறைவு, தமிழ் இனத்துக்கே ஏற்பட்ட மாபெரும் இழப்பு.
எத்தகைய சார்பும் கொள்ளாத, எத்தகைய வளைப்புகளுக்கும் ஆட்படாத நெஞ்சத்துணிவையும் படைப்பின் மூலமாக வாசகனின் தரத்தையும் சமூக மேப்பாட்டையும் உயர்த்தக்கூடிய புரட்சிகரத்தையும் அய்யா கற்பித்த பாடங்களாக இன்றைய தலைமுறையினர் ஏற்று நடப்பதே அவர் மறைவுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
அய்யா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரை இழந்து வாடும் கோடிக்கணக்கான தமிழ் வாசகர்களுக்கு ஆறுதலையும் நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அந்த இரங்கல் அறிக்கையில் செந்தமிழன் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய செய்திமகளிர் குழுக்களைக் கலைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்-நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திதர்மபுரியில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.