வாச்சாத்தி தீர்ப்பு: அடித்தட்டு மக்களுக்கு எதிரான அநீதிகள் ஒழியட்டும்

178

வாச்சாத்தி கிராமத்து மக்கள் மீது வன, காவல் அதிகாரிகள் புடைசூழ்ந்து நடத்திய அராஜகம் அப்பட்டமான கொடுஞ்செயல் என்பதை தருமபுரி அமர்வு நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக்கியுள்ளது என்றும், இதற்குமேலும் சமூகத்தின் அடித்தள மக்கள் மீது இப்படிப்பட்ட அரசு வன்முறை நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் அரசுகள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

வாச்சாத்தி தீர்ப்பு: அடித்தட்டு மக்களுக்கு எதிரான அநீதிகள்  ஒழியட்டும்

1992ஆம் ஆண்டு, தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் சந்தனக் கட்டைகள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது என்று கூறி, பெரும் படையுடன் சென்ற தமிழக வன, காவல் துறையினர், வருவாய் அதிகாரியின் துணையுடன் நடத்திய அராஜகத்திற்கு 19 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது.

தங்கள் உரிமைகள் இன்னதென்று அறியாத மக்கள் மீது ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தனது முழு பலத்துடன் அரங்கேற்றிய அராஜகமும், பாலியல் வன்முறையும் தமிழ்நாட்டையே தலை குனியச் செய்த கொடுஞ்செயலாகும். இதற்குக் காரணமான 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். ஏனெனில், வாச்சாத்தி மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அந்த அராஜகத்தில் படையாகச் சென்ற அனைவரின் முழு ஒத்துழைப்புடனேயே நடத்தப்பட்டது என்பது நீதிமன்றத் தீர்ப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த அராஜகத்திற்கு தலைமையேற்ற வனத் துறை உயர் அதிகாரிகள் (ரேஞ்சர்கள்) 4 பேரும், காவல் ஆய்வாளர்கள் இரண்டு பேரும், தாசில்தார் ஒருவரும், கிராம நிர்வாக அதிகாரி ஒருவரும் குற்றவாளிகளே என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

வாச்சாத்தித் தீர்ப்பின் முக்கியத்துவம், அனைத்துக் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டதில் மட்டுமே இல்லை. மாறாக, பழங்குடியினர் போன்று சமூகத்தின் அடித்தட்டில் வாழும் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் காலம் காலமாக அரசு இயந்திரங்களின் வன்முறை வெறியாட்டத்திற்கும், பாலியல் வன்முறைக்கும் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களில் எவரும் சட்டத்தின் உதவியை நாடியதில்லை. காரணம், சட்டத்தின் காவலர்களே இப்படிப்பட்ட அராஜகத்தில் ஈடுபட்டுவருவதான். மத்திய வன, சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்பாடு செய்த முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நமது நாட்டின் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பறிக்கவும், துன்புறுத்தவும் குற்ற – நீதி அமைப்பு எனும் பலமான கருவி பயன்படுத்தப்படுகிறது என்று கூறியது மட்டுமின்றி, வனச் சட்டம் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதை எடுத்துக்காட்டினார்.

இப்படிப்பட்ட சூழலை மாற்றியமைக்க வேண்டியது உடனடிக் கடமையாகும். இதற்கு மேலாவது பழங்குடியினர் உள்ளிட்ட சமூகத்தின் நலிவடைந்த மக்களை அநீதிக்கு உட்படுத்தும் அரசு இயந்திர அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவசியமானதாகும்.

இதற்கான நிரந்தரத் தீர்வு, உள்ளாட்சி அமைப்புகளை கட்சி அரசியல் பிடியில் இருந்து மீட்பதுதான். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை மக்களே தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நிர்வகிக்கும்போதுதான், தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படும். அதே நேரத்தில் தங்களையும், தங்கள் வாழ்விற்கு ஆதாரமாகவுள்ள நிலம், நீர், வளம் ஆகியவற்றை பாதுகாத்து தக்க வைக்க முடியும். எனவே, உண்மையான மக்களாட்சி மலர வேண்டுமெனில், அது முதலில் உருவாக வேண்டிய இடம் உள்ளாட்சிதான். இந்திய அரசமைப்பும், பஞ்சாயத்து ராஜ் சட்டமும் அளித்துள்ள இப்படிப்பட்ட ஜனநாயக உரிமைகளை உணர்ந்து மக்கள் கடமையாற்ற வேண்டும். அப்போதுதான் சமூக பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்துக்கொள்ள முடியும்.

முந்தைய செய்திஅணு உலைகள் பாதுகாப்பானது என்றால் விபத்து ஒத்திகை நடத்துவது எதற்கு?
அடுத்த செய்திதுப்பாக்கி சூட்டில் பலியான உறவுகளின் துயரத்தில் நாம் தமிழர் பங்கேற்ப்பு