வட மாகாண தமிழ் மக்களுக்கு ஈ.என்.டி.எல்.எப். வாழ்த்துக்கள்! – சிங்கள இனவாத அரசுக்கு தமிழ் மக்கள் புகட்டிய பாடம் இது!

28

தமிழ் இன அழிப்பின் மூலம் அமைதியை ஏற்படுத்தி விட்டேன் என்று உலகை ஏமாற்றப் புறப்பட்ட சிங்கள அரசுக்கு தங்களது வாக்குகள் மூலம் வடக்கின் தமிழ் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கு ராஜபக்சே ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திய தமிழ் மக்களை பாராட்டுவதற்கு வார்த்தைகளே கிடையாது. இப்படியான ஓர் திருப்பத்தை ராஜபக்சேயும் ஏன் ரி.என்.ஏ கூட எதிர்பார்க்கவில்லை. மாகாண சபைக்கு எந்தவித அதிகாரமும் வழங்கமாட்டேன் என்று கூறிய பிறகும் ராஜபக்சேவுக்குப் பதிலடி கொடுத்தது தமிழ் மக்களின் உறுதியை உலகறியச் செய்துள்ளது.

ஓற்றுமையாய் வாக்களித்த எம் தமிழ் மக்களுக்கும், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்ல வேண்டும் என்பதற்கு அப்பால், சிங்களவரின் கைகளில் ஆட்சி போய்விடக்கூடாது என்பதற்காகவே வாக்களித்துள்ளார்கள்.

தாம் சிங்கள இனத்துடன் இணைந்து வாழ முடியாது என்பதை வடமாகாண சபைத் தேர்தல் மூலம் மீண்டும் ஒரு முறை சர்வதேசத்திற்கும் சிங்களத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, இந்தியாவும் உலக நாடுகளும் அதிகாரம் மிக்க ஐக்கிய நாடுகள் சபையும் தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது பொறுப்பும் கடமையுமாகும். குறிப்பாக இந்தியாவிற்கு மிக அதிகமான பொறுப்பும் கடமையும் உள்ளது என்பது உண்மையாகும்.

இந்த வெற்றியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய முறையில் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வினை எட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) கேட்டுக்கொள்கிறது.

அரசியல் பிரிவு,

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)

முந்தைய செய்திமாவீரர் துயிலும் இல்லங்கள் மீள அமைத்து புனிதமாக்கப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்
அடுத்த செய்திமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நிகழ்ந்த துரதிஸ்டம்