மோடி அரசின் திடீர் அறிவிப்பு இன்னொரு அவசரநிலை பிரகடனம். – சீமான் கண்டனம்!

20

நோட்டை மாற்றுவதால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடாது.. நாட்டை மாற்ற வேண்டும்.. மோடி அரசின் திடீர் அறிவிப்பு இன்னொரு அவசரநிலை பிரகடனம். – சீமான் கண்டனம்!
======================================================
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எவ்வித முன்னறிவிப்பும் இல்லாது ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் பணம் இனி செல்லாது எனத் திடீர் அறிவிப்புச் செய்திருக்கும் மோடி அரசின் இந்தச்செயல் பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது. கறுப்புப்பணத்தை மீட்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

அதேநேரத்தில், மோடி அரசின் இந்த நடவடிக்கை கறுப்புப்பணத்தை மீட்க எந்த வகையில் உதவும் என்பதுதான் நமக்குக் கேள்வியாக இருக்கிறது. ‘வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்புப்பணத்தை மீட்டெடுத்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் 15 இலட்சம் பணத்தைப் பகிர்ந்தளிப்போம்’ என்று பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வீராவேசம் காட்டிய மோடி, பின்னர் அதனை, ‘தேர்தலுக்காகச் சொல்லப்பட்ட தந்திரம்; அந்தப் பணம் வராது என மக்களுக்குத் தெரியும்’ என அந்தர்பல்டி அடித்த கதையை நாடறிந்ததே!

அப்பாவி மக்களின் நிலத்தைப் பிடுங்குவதற்கு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசரச்சட்டமாக மூன்று முறைக்கு மேல் இயற்றிவிட்டு, கறுப்புப்பணத்தை மீட்டெடுக்க எவ்வித அவசரச் சட்டத்தையும் இயற்றாது காலம் கடத்தியதும் நாம் நன்றாக உணர்ந்ததே!

மேலும், ‘நீங்கள் சேர்த்துவைத்த கறுப்புப்பணத்தில் பாதியைக் கொடுத்துவிடுங்கள். எந்த வழக்குமில்லாது விட்டுவிடுகிறோம்’ என்று ‘சிவாஜி’ பட பாணியில் கறுப்புப்பண முதலைகளுக்கு ஆதரவாக அவர்களிடமே பேரம் பேசி வரும் நிகழ்காலக் கொடுமையும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, கருப்புப்பண விவகாரத்தில் மோடி அரசு மீதான நம்பகத்தன்மையை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தருணமிது.

உள்நாட்டில் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் 45 விழுக்காடு அபராதம் செலுத்திவிட்டால் வழக்கு, தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் எனக் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு 4 மாதம் காலஅவகாசம் அளித்த மோடி அரசு, அப்பாவிப் பொதுமக்களுக்கு ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெறும் 4 மணிநேரத்துக்கு முன்பு சொல்லியிருப்பது நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த அறிவிப்பானது, அந்நியப் பணமாகவும், தங்கமாகவும், நிலமாகவும் தனது கறுப்புப்பணத்தைப் பதுக்கி வைத்துள்ள பணமுதலைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது; பிறகெப்படி கறுப்புப்பணத்தை மொத்தமாக மீட்க முடியும்? மேலும், இந்த அறிவிப்பின் மூலமாகப் போலி கணக்குகளைக் காட்டி பண முதலைகள் தப்பித்துக்கொள்வதை எப்படித் தடுக்க முடியும்?. வெறும் நான்கு மணிநேரத்திற்கு முன்பு ரூபாய் நோட்டுகளின் காலாவதி நேரத்தை அறிவித்த பிரதமர் மோடி, பெருமுதலாளிகளிடமிருந்து வர வேண்டிய வாராக்கடனை வசூலிக்க இப்படிபட்ட ‘கறார்’ நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்ற அடிப்படையான கேள்விகளுக்கே இன்னும் பதில் தெரியவில்லை.

130 கோடிக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில் மொத்தமாக உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமென்றால், எவ்வளவு நாட்கள் தேவை, எத்தனை நாட்களுக்கு முன்பாக இதனை அறிவிக்க வேண்டும்? இந்தப் பணத்தை மாற்ற என்ன வழிமுறைகள் உள்ளது, எத்தனை வங்கிகள் இருக்கிறது? மொத்த மக்களும் குறிப்பிட்டு நாட்களுக்குள் பணத்தை மாற்றுவதென்பது சாத்தியமானதுதானா? அன்றாடம் பணிக்குச் செல்லும் அன்றாடங்காய்ச்சிகளும், மாதச்சம்பளத்திற்கு, வேலைசெய்யும் பணியாளர்களும் தங்களது பணிக்குச் செல்வார்களா, அல்லது ரூபாய் நோட்டை மாற்ற எத்தனிப்பார்களா? இந்தத் திடீர் அறிவிப்பை எதிர்பாராதிருந்த பொதுமக்கள் இவ்விரு நாட்களும் தங்களது அன்றாடத்தேவைக்கான பணத்திற்கு என்ன செய்வார்கள்?

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கும் குடும்பத்தினர் இந்தத் திடீர் நெருக்கடியை எப்படிச் சமாளிப்பார்கள்? கல்வியறிவிலும், பொருளாதார நிலையிலும் தன்னிறைவு பெறாத ஒரு நாட்டில் இதுபோன்ற திடீர் அறிவிப்புகள் எவ்வளவு பெரிய பீதியையும், தங்களது எதிர்காலம் குறித்த எப்பேர்ப்பட்ட பேரச்சத்தையும் உருவாக்கும் என்ற குறைந்தபட்ச அறிவற்று இதுபோன்ற தான்தோன்றித்தனமான அறிவுப்புகள் எவ்வகையில் பயன்படும்?

வங்கியில் பணம் செலுத்துவது, காசோலையை நிரப்புவது ஆகியவற்றை அறிந்திராத இந்நாட்டின் கோடானகோடி பாமர மக்கள் எப்படித் தங்களது பணத்தை வங்கியிலும், அஞ்சலகத்திலும் செலுத்துவார்கள்? நாடு முழுக்கப் பயணங்களில் இருக்கும் பொதுமக்கள் இந்த நெருக்கடிநிலையை எப்படி எதிர்கொள்வார்கள்? கையில் இருக்கும் பணம் செல்லாது என்றால், அவர்கள் எப்படித் தங்களது வாழ்விடத்தை நோக்கி திரும்ப முடியும்? கூட்டுறவு மருந்தகங்களில் மட்டும்தான் ஐநூறு, ஆயிரம் ரூபாய் பணங்கள் செல்லும்; தனியார் மருந்தகங்களில் செல்லாது எனும்போது நாடு முழுக்க இருக்கும் நோயாளிகள் எப்படி இந்த நிலையைச் சமாளிப்பார்கள்?

தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யப் பணம் கட்டியவர்களின் பணம் செல்லாது; அப்படியானால், அவர்கள் எப்படி அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும்? பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் கட்டுவோர், வீட்டு வாடகை கட்டுவோர், சில்லறை வியாபாரிகள், சிறு குறு வணிகர்கள், குடிசைத்தொழில் செய்வோர் என அனைத்துத் தரப்பினரும் இம்முடிவால் முடங்கியிருக்கிறார்கள். ஒற்றை அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட இத்தனை சொல்லொணாத் துயரங்களுக்கும், ‘சிரமத்திற்கு வருந்துகிறோம்’ என்ற ஒற்றைவரியில் பிரதமர் பதில்கூறிவிட்டால் சிக்கல்கள் தீர்ந்துவிடுமா? போன்ற எண்ணற்ற அடிப்படை கேள்விகள் நமக்கு எழுகிறது.

ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவிப்பதற்கு முன் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தி, அடிதட்டு மக்களிடம் சராசரியான புழங்கவிட்டபிறகு, அதனை வங்கிகளிலும், தானியங்கி எந்திரங்களிலும் (ATM) போதுமான அளவு கொண்டு சேர்த்துவிட்ட பிறகே அறிவித்திருக்க வேண்டும்.

ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாயாக மட்டும்தான் கறுப்புப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்று ஆரூடம் சொல்பவர்கள் எதற்காக இரண்டாயிரம் ரூபாய் தாளை அறிமுகம் செய்கிறார்கள்? மேலும், புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் இரண்டாயிரம் ரூபாய் தாளின் மாதிரியை அதிகாரப்பூர்வமாக ரிசர்வ் வங்கி வெளியிடும்முன்பே அதன் படம் இணையதளங்களில் வெளிவந்ததே அது எப்படிச் சாத்தியமாயிற்று?

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவை மத்திய அரசு நேற்று இரவு எடுத்திருக்க வாய்ப்பில்லை. ரூபாய் தாளின் படமே முன்கூட்டியே வெளியாகிருக்கும்போதும் அந்தத் தகவல் மட்டும் வெளியே கசியாமல் இருந்திருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

இராணுவ ரகசியங்கள் முதல் பாதுகாப்பு ரகசியங்கள்வரை பலவற்றைக் கசியவிட்டுவிட்டு, பின்னர் ‘அவற்றால் எவ்விதப் பாதிப்புமில்லை’ என ஆட்சியாளர்கள் விளக்கம் கொடுத்த நாடு இது. இந்தியக் கடற்படைக்கு 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பதற்காகப் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு, கப்பல் குறித்த இரகசிய ஆவணங்கள் ஆஸ்திரேலியப் பத்திரிக்கை ஒன்றில் வெளியானதும், ‘அதற்குக் கவலைப்படத் தேவையில்லை’ என அறிவித்த மனோகர் பாரிக்கர் போன்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்களை ஆளவைத்து அழகுபார்க்கும் நாடு இது.

எனவே, இவ்விவகாரத்தில் இந்த அரசின் நகர்வுகள் நமக்கு இன்னொரு பொருளாதார அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது போல் உள்ளது. நமக்கு எழும் கேள்விகளும், ஐயப்பாடுகளும் இந்நாட்டின் பிரதமரான மோடி தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்காது, மக்கள் படும் அல்லல்கள் குறித்துக் கவலையுறாது மனம்போன போக்கில் முடிவெடுத்திருக்கிறார் என்பதைத்தான் தெளிவாக உணர்த்துகிறது.

நாட்டுமக்களின் நலனைக் கருத்தில்கொள்ளாது ஒரு இரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது இன்னொரு ‘அவசரநிலை பிரகடனமாகவே’ நமக்கு இருக்கிறது.

கறுப்புப்பணத்தை ஒழிக்க வெறுமனே ரூபாய் நோட்டை மாற்றினால் மட்டும் போதாது, நாட்டையே ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். அதற்கான பொருளாதாரக்கொள்கையை உருவாக்க வேண்டும். தனியார் மய, தாராள மய, உலக மய பொருளாதாரக் கொள்கையை வைத்துக்கொண்டு, வெறும் நோட்டை மாற்றுவதால் எந்தப் பயனும் விளையாது.

மொத்தத்தில் மோடி அரசின் இந்தச் செயலானது கறுப்புப்பணத்தை மீட்டெடுப்பதற்கான முன்முயற்சியாக இல்லாமல், தனது சரிந்த பிம்பத்தை நிலைநாட்டும், உத்திரப்பிரதேசத் தேர்தலின் அரசியல் வெற்றிக்காகவும் செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
— சீமான்
https://www.facebook.com/senthamizhanseeman/
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் – சீமான் பரப்புரை பயணத்திட்டம்
அடுத்த செய்திதிருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை பயணத்திட்டம்