மீனவர்கள் மீது தேசத் துரோக வழக்கு – சீமான் கண்டனம்

34

அணு உலைக்கு எதிராகப் போராடினால் அது எப்படி தேசத் துரோகமாகும்? நாம் தமிழர் கட்சி வினா

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடிட வேண்டும் என்று கோரி கடலில் சென்று கறுப்புக் கொடி பிடித்துப் போராடிய மீனவர்கள் மீது நாட்டிற்கு எதிராக போர் தொடுத்துள்ளார்கள் என்றும், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தேசத் துரோகம் என்றும் அரசு வழக்குப் பதிவு செய்திருப்பது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கையாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்கினால், அதிலிருந்து வெளியேற்றப்பட்டும் நீரால் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும், அது தங்களுடை வாழ்வாதாரத்தை அழித்துவிடும் என்றுதான் அப்பகுதியில் போராடிவரும் மற்ற மக்களுடன் இணைந்து மீனவர்களும் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தின் ஒரு அங்கமாக சற்றேறக்குறைய 500 மீன் பிடி படகுகளில் கூடங்குளம் ஒட்டிய கடற் பரப்பிற்குச் சென்று படகில் இருந்தபடி கறுப்புக் கொடி பிடித்து அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

கடற்கரையில் இருந்து ஒரு கடல் மைல் தூரம், அதாவது 1.8 கி.மீ. தூரத்தில் படகை நிறுத்திக்கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அணு மின் நிலையத்திற்கு மிகவும் அருகில் வந்து போராட்டம் நடத்தியதாகக் கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் மிக முக்கியமாக, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 121இன் கீழ், நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தார்கள் என்றும், பிரிவு 124ஏ-இன் கீ்ழ் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்றும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இவைகள் பிணைய விடுதலைப் பெற முடியாத பிரிவுகள் ஆகும்.

கூடங்குளம் அணு மின் நிலையம் என்பது அரசே குறிப்பிடுவதுபோல் அது மின் உற்பத்தி செய்யப்படுவதற்கான தொழிற்சாலை மட்டுமே. அவ்வாறிருக்க அதனை தேசமாக சித்தரிப்பது கேலிக்கூத்தல்லவா? கூடங்குளம் அணு மின் நிலையம் தங்களின் வாழ்விற்கும், வாழ்வாதாரத்திற்கும், எதிர்காலமே இல்லாத அளவிற்கு அச்சுறுத்தலானது என்பதால்தான் எதிர்த்துப் போராடுகிறார்கள். அது அரசமைப்புச் சட்ட ரீதியிலானதுதான். அவ்வாறிருக்க, போராடிய மீனவர்கள் மீதும், போராட்டக் குழு உறுப்பினர்கள் சுப. உதயகுமார், புஷ்பராயன், பங்குத் தந்தை ஜெயக்குமார் ஆகியோர் மீதும் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்வது சட்டப்படி எப்படி நியாயமாக நடவடிக்கையாகும்?

போபால் விஷ வாயு வெளியேறி 30,000 பேர் கொல்லப்பட்டத்தற்குக் காரணமான நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை பத்திரமாக, பாதுகாப்பாக தப்பவிட்டது தேசத் துரோகமில்லையா? இந்த நாட்டின் குடிமக்களான தமிழக மீனவர்கள் 540 பேர் சிறிலங்கக் கடற்படையினரால் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்டனரே அது இந்த நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போரா? அல்லது தங்களது வாழ்வுரிமை பறிபோய்விடும் என்ற அச்சத்தில் எங்கள் மீனவர்கள் போராடுவது நாட்டிற்கு எதிரான போரா? இன்று வரை தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து சிறிலங்க கடற்படை நடத்திவரும் தாக்குதல் இந்த நாட்டின் மீது அறிவிக்கப்படாத போரில்லையா? இதற்கெல்லாம் மத்திய அரசு பதில் சொல்லட்டும்.

கூடங்குளம் போராட்டக் குழுவினர் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளிக்காமல், அது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்று காரணம் கூறி, மக்களின் அச்சங்களைப் போக்க முடியாத அரசு, இப்போது போராட்டத்தை ஒடுக்கும் நோக்குடன் செயல்படத் தொடங்கியுள்ளதையே இந்த வழக்குப் பதிவு வெளிப்படுத்துகிறது. கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டத்தினை சட்டத்தினை பயன்படுத்தி ஒடுக்கிவிடலாம் என்று அரசுகள் நினைத்தால், அந்தப் போராட்டம் மேலும் வலுமை பெறுமே தவிர, முடிந்தவிடாது.

முந்தைய செய்திவிலை உயர்வை திரும்பப் பெற்று, மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
அடுத்த செய்திமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையல்ல, தமிழனின் உரிமைப் பிரச்சனை: நாம் தமிழர் கட்சி