மாலத்தீவு, அந்தமான் தீவுகளில் சிக்கி ஊர்திரும்ப முடியாது தவிக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

55

மாலத்தீவு, அந்தமான் தீவுகளில் சிக்கி ஊர்திரும்ப முடியாது தவிக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

அதிகரித்து வரும் கொரோனோ நுண்மி நோய்ப்பரவல் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ள பிரதமர் மோடி, ஊரடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்படும் நிலையிலும்கூட வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சிக்கித்தவிக்கும் நாட்டின் குடிமக்களை அவர்களது சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பது குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடாதது அதிர்ச்சியளிக்கிறது.

தொடர்ந்து மத்திய , மாநில அரசுகள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதில் மிகுந்த மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பது அப்படிச் சிக்கியுள்ள மக்களுக்குக் கடுமையான உணவு மற்றும் பொருளாதாரச் சிக்கலையும், மன உளைச்சலையும் , உயிரச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. இதனைக் குறிப்பிட்டு, மராத்திய மாநிலத்தில் சிக்கியுள்ள 800 தமிழர்களை அழைத்துவர ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை நோக்கிக் கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும், கடந்த 15.04.2020 அன்று மாலத்தீவு நாட்டிலிருந்து தமிழகத்தைச் சார்ந்த மக்களை, கப்பல் மூலமாகத் தூத்துக்குடி துறைமுகம் அழைத்து வருவதற்கு, இந்தியத் தூதரகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நிலையில் தமிழக அரசு, கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்து சேருவதற்கான அனுமதியினை வழங்காமல் அலட்சியம் செய்த காரணத்தினால் 15.04.2020 அன்று தூத்துக்குடி வரவேண்டிய கப்பலை, கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்திற்கு மாற்றி அனுப்பியதுமன்றி, கேரளத்தைச் சார்ந்தவர்களை மட்டும் தான் அந்தக் கப்பலில் பயணிக்க அனுமதிப்பதாகவும், இந்திய தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதைக் கவனத்திலெடுத்து மாலத்தீவில் சிக்கியுள்ள தமிழர்களைத் தமிழகத்திற்குக் கொண்டுவர வேண்டிய அனைத்துப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு உடனடியாக முன்னின்று எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல, அந்தமானில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காகச் சென்ற தொழிலாளர்கள் தமிழகம் திரும்ப முடியாது அங்குப் பசி, பட்டினியோடு தவித்து வரும் செய்தி பெரும் மனவேதனையைத் தருகிறது. குடும்ப வறுமையைப் போக்குவதற்காக அங்குச் சென்ற அமைப்புசாரா தமிழகத் தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவினால் பணிகளின்றி, தங்களை அழைத்துச் சென்ற நிறுவனத்தின் உதவியுமின்றிச் செய்வதறியாது தவித்து வருகின்றனர். உணவுக்கே வழியில்லா நிலையில் பசி, பட்டினியோடு அத்தொழிலாளர்கள் ஒவ்வொருநாளும் திண்டாடி வருவது அவர்கள் குடும்பத்தினரையும் பெரும் மனக்கலக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அந்தத் தொழிலாளர்களது வருமானத்தையே நம்பியிருந்த அவர்களது குடும்பம் வறுமையில் வாடுவதோடு மட்டுமன்றி, தங்கள் குடும்பத்தினரை மீட்கவும் வழியின்றித் தத்தளித்து நிற்கின்றனர். எனவே, தமிழக அரசு அந்தமானில் சிக்கிண்டிருக்கும் தொழிலாளர்களையும் மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

கொரனோ நுண்மித்தாக்கம் தற்போதைக்குக் குறையாத சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்தியா மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாகத் தாய்த்தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டுவர வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே நிலமையின் தீவிரத்தை உணர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டுக்கொண்டுவருவதில் இனியும் அலட்சியமாகச் செயல்படாமல் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கும் நாங்குநேரி தொகுதி
அடுத்த செய்திஈரானில் சிக்கித்தவிக்கும் 650 தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசே பயணச்செலவை ஏற்கவேண்டும்! – சீமான் கோரிக்கை