மனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன? – மேட்டுப்பாளையத்தில் தகித்த சீமான்

74

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை இன்று 05-12-2019 நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

அன்றைய பொழுது துயரம் தோய்ந்த பொழுதாக முடிந்துவிட்டது. ஒரு மதில் சுவர் 17 உயிர்களைப் பலி எடுத்துவிட்டது. ஒரு தனிமனிதரின் பொறுப்பற்ற செயலால் விளைந்த துயர நிகழ்வு இது.

மதில் சுவர் கட்டுபவர்கள் ஆழமாகக் குழிப்பறித்து அடித்தளம் வலுவாக அமைத்து கட்ட வேண்டும். ஆனால் இந்த மதில் சுவர் வெறும் கற்களை அடுக்கி இடையில் சிமெண்ட் ஏதுமின்றிச் சுற்றிலும் மட்டும் சாந்து பூசி அதன்மேல் சுண்ணாம்பு அடித்து வைத்திருந்தனர்.
விழுந்த மதில் சுவர் எங்குமே சிறு துண்டுகளாக விழாமல் பெரிய பெரிய கற்களாக விழுந்ததிலிருந்தே இது முறையாகக் கட்டப்படவில்லை என்பது தெரிகிறது.

இதை ஒரு தீண்டாமை சுவராகத்தான் நான் பார்க்கிறேன்.

மதில் சுவரை கட்டியவர்கள் தங்கள் வீட்டின் கழிவுநீரினை, அதிகாரமற்ற குரல் கொடுக்க யாருமற்ற எளிய மக்கள் வசிக்கும் அந்தப் பகுதியிலேயே விழும்படி வைத்துள்ளார். அந்தத் தண்ணீர் தேங்கிதான் சுவர் ஈரப்பதத்தால் பலவீனமாகி இடிந்து விழுந்துள்ளது. இது எவ்வுளவு பெரிய பொறுப்பற்ற செயல் என்று பாருங்கள். உழைக்கும் எளிய மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் குடியிருப்பு என்றால் அவர்கள் உயிருக்கு ஒரு மதிப்பும் இல்லையா?

சுவர் விரிசலுற்றுள்ளது, விழுந்திருமோ என்று பயம் உள்ளது, அதைக் கொஞ்சம் பார்த்துக் கட்டுங்கள் என்று சொல்ல சென்றபோது சுவரை கட்டியவர், இங்கே ஏன் வந்தீர்கள்? உங்கள் முகத்தில் முழிக்கக் கூடாது என்றுதான் அவ்வுளவு பெரிய சுவரை கட்டினேன்.. வெளியே போங்கள் என்று கூறி நாயை அவிழ்த்து விட்டதாக அங்குச் சென்று வந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். எந்த நூற்றாண்டில் இத்தகைய மனப்பான்மையை ஒழிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.

உடைமைகளையும் உறவுகளையும் உறைவிடத்தையும் இழந்துவிட்டு நிற்கும் அந்த மக்களைக் காணும்போது மிகுந்த வலியை தருகிறது. இவர்களுடைய கதறலுக்கும் கண்ணீருக்கும் எவரிடமும் பதில் இல்லை. வீட்டை இழந்து நிற்கதியாய் நிற்கும் மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே அரசே மீண்டும் வீடுகட்டி கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் உள்ள படித்த பிள்ளைகளுக்கு அரசு வேலை வழங்கினால் அது அவர்களுக்கு நிரந்தர வாழ்வு பாதுகாப்பாக இருக்கும். அரசு வழங்கியுள்ள தொகை என்பது ஒரு தற்காலிக இழப்பீடாகத்தான் இருக்கிறது.

இந்தக் கொடிய நிகழ்வை கண்டித்துப் போராடிய அந்த மக்களின் பிள்ளைகள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்திருப்பது என்பது இதைவிடக் கொடுமையானது. அந்த வழக்குகளைத் திரும்பப் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டியது அரசின் பொறுப்பும் கடமையுமென நான் கருதுகிறேன். ஏனென்றால் ஏற்கனவே உறவுகளை இழந்து துயரில் இருக்கும் அந்த மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கும் செயலை அரசு செய்யக்கூடாது.

அதிலும் இறந்தவர்களின் உடல்களை அந்த மக்களிடம் ஒப்படைக்காமல் அரசே மிரட்டி கையெழுத்து வாங்கிக் கொண்டு எரித்து விட்டதாக அந்த மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். அரசு அவர்களுடைய உடல்களை அவரவர் உறவினர்களிடம் ஒப்படைத்திருந்தால் அந்த மக்களுக்குச் சிறு ஆறுதல் ஏற்பட்டிருக்கும்.

இதுபோன்ற துயர நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறக் கூடாது என்பதே நம்முடைய விருப்பம். இதன் அருகே இன்னொரு மதில் சுவர் உள்ளதை அரசு இடிக்கும்போது அதன் உரிமையாளர்கள் மதில் சுவரை இடிக்கவிடாமல் போராடி தடுக்கின்றனர்.

மனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன?

ஒருத்தரின் பொறுப்பற்ற செயலால் பதினேழு பேரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. அவர் இடத்தில் அவர் மதில் சுவர் கட்டியுள்ளார் சரி, அவர் இந்த மக்களின் முகத்தைப் பார்க்கவே கூடாது, அவர்கள் காற்று இவர்கள் மேல் படக்கூடாது என்று நினைத்து. அதிலெல்லாம் அவ்வளவு உறுதியாக இருந்தவர் மதில் சுவரை மட்டும் உறுதியாகக் கட்டாமல் இடிந்து விழும் அளவுக்குக் கட்டியது ஏன்?

அதிகாரம் கோபுரத்தில் உள்ளவர் பக்கமே வளைகிறது. குரலற்ற ஏழை எளிய மக்களின் குரல் அதன் காதில் விழுவதே இல்லை. இதுதான் இந்த நாட்டின் சனநாயகமாக இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சமத்துவச் சமுதாயம் படைக்கதான் எமக்கு முன்னால் இருந்தவர்களும் போராடினார்கள்.. நாங்களும் போராடிப் பார்க்கிறோம்.

அரசு அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள் காற்று, நீர், சூரிய ஒளிபோல எல்லா மக்களுக்கும் பொதுவானவராக நடந்தால்தான் நாடும், நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்று சீமான் தெரிவித்தார்

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொகுதி