மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை

14

மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை. இதன் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­வும் என்றோ ஒருநாள் சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் முன் நிற்க வேண்டிவரும் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்

நேற்று முன்தினம் ஏழாலை வடக்கில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது;

வட மாகாணத்தில் இராணுவத்தினரின் அட்டகாசமும் கெடுபிடிகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.  இன்று (நேற்று முன்தினம்) கொல்லங்கலட்டி பிள்ளையார் கோயில் திடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்தில் கலந்து கொள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை வேட்பாளருமான சித்தார்த்தன் மற்றும் கஜதீபன் ஆகியோர் அங்கு சென்றபோது கூட்டத்துக்கு வந்த மக்களை இராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி வீடுகளுக்குச் செல்லுமாறு கலைத்துள்ளனர்.

இந்த விடயம் உடனடியாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டது. தேர்தல் திணைக்கள அதிகாரிகள் வந்த போது இராணுவத்தினர் மறைந்து விட்டனர்.   இன்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் அரசியல் பிரச்சினையை தெருச்சண்டை போலாக்கிவிட்டனர்.

ஜனாதிபதியின் அனுசரணையுடன் இயங்கும் ஜாதிக யஹல உறுமய, பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் துவேசத்தைக் கக்குகின்றன.   தென்பகுதி மக்களை குழப்புபவர்கள் இவர்கள் தான்; நாமல்ல. எமது இளைஞர்களின் போராட்டத்தை தனித்து நின்று இவர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை.

இதனால் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகளிடம் உதவி பெற்றனர்.   விசேடமாக போர் முடிந்தவுடன் தமிழர்களின் பிரச்சினை களுக்கு நியாயமான தீர்வை ஏற்படுத்துவேன்.  13 ஆம் திருத்தத்துக்கு மேலான அதிகாரங்களை வழங்குவேன் என்று வாக்குறுதி அளித்தே சர்வதேச உதவிகளைப் பெற்று போராட்டத்தை மெளனிக்கச் செய்தனர்.

பின்னர் சர்வதே சத்தையே ஏமாற்றும் அளவுக்கு மஹிந்த அரசு செயற்படுகின்றது. இலங்கை அரசின் ஏமாற்று நடவடிக்கைகளை இப்போது சர்வதேசம் புரிந்து கொண்டுள்ளது. சர்வதேச சமூகம் வட மாகாணத்தில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும்.    அத்துடன் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஆனால் இராணுவத்தின் அடக்கு முறைகளும் அட்டகாசமும் ஓயவில்லை. ஜனாதிபதியோ தேர்தல் ஆணையாளரோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.   மனிதப்படு கொலைகள் செய்பவர்கள் எவரும் சர்வதேச விசாரணையில் இருந்து தப்ப முடியாது. சர்வதேசத்தின் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்த நிலை நமது ஜனாதிபதிக்கும் ஏற்படலாம்.

சர்வதேசத்துக்கு எமது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஓர் அரிய சந்தர்ப்பம் இந்த வடமாகாண சபைத் தேர்தல். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ எங்களுக்கோ வாக்கு அளிப்பதல்ல.  இது நமக்கு நாமே வாக்களிப்பது. நமது ஏகோபித்த தீர்ப்புத் தான் இந்தச் சிங்கள இராணுவத்தை நமது மண்ணில் இருந்து வெளியேற்ற உதவும் என்றார்.

முந்தைய செய்திதமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி சாகும்வரையில் உண்ணாவிரம் -சட்டவாளர் அங்கயற்கண்ணி!
அடுத்த செய்திஇலங்கை குறித்த பயண எச்சரிக்கையை நீடித்தது பிரித்தானியா!