மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா, மாநில அரசின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் படுபாதகச் செயல் – சீமான் கண்டனம்

111

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா, மாநில அரசின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் படுபாதகச் செயல் – சீமான் கண்டனம்

அணை பாதுகாப்பு மசோதா பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில் மாநில அரசின் உரிமைக்குப் பாதிப்பை என்ற மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பதிலுக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்தொழித்து அரசியலமைப்புச் சாசனம் வழிகாட்டும் கூட்டாட்சித் தத்துவத்தின் மாண்பைக் குலைத்து அதிகாரக் குவிப்பில் ஈடுபட்டு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, தற்போது அணை பாதுகாப்பு மசோதா எனும் பெயரில் அணைகள் மீதான மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்திட முயல்வது தன்னாட்சி அதிகாரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள பெரும் போராகும். ‘அணைகள் பாதுகாப்பு – 2018’ எனும் இம்மசோதாவை கடந்த 13-06-18 அன்று நிறைவேற்றியுள்ள மத்திய அமைச்சரவையானது, அதனை வருகிற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கான வேலைகளை முடுக்கிவிட்டிருப்பது எதேச்சதிகாரப் போக்கின் மூலம் மாநில உரிமையைப் பறிக்கும் படுபாதகச் செயலாகும்.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகளவிலான எண்ணிக்கையில் அணைகளைக் கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. நாடு முழுவதும் 5,254 பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக 4,47 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கொண்டு வரும் இப்புதிய மசோதாவின் மூலம் அணைகள், நீர்த்தேக்கங்கள் மீதான மாநிலங்களின் உரிமையும், கட்டுப்பாடும் முற்றிலும் பறிக்கப்பட்டு விடும்.

ஒரு மாநிலத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டு, மற்றொரு மாநிலத்திலுள்ள அணைகள் குறித்தான உரிமைகளும், கட்டுப்பாடுகளும் இம்மசோதா மூலம் மத்திய அரசிற்கு மாற்றப்பட்டு விடும் என்பதால் தமிழகத்தினால் நிர்வகிக்கப்பட்டுக் கேரளாவில் நிறுவப்பட்டிருக்கும் முல்லைப்பெரியாறு, பெருவாரிப்பள்ளம், பரம்பிக்குளம் போன்ற அணைகளின் மீதான நிர்வாக உரிமை தமிழகத்திடமிருந்து அபகரிக்கப்பட்டுவிடும் அபாயமிருக்கிறது. இரு மாநிலத்திற்கு இடையேயான நெடுநாள் ஒப்பந்தங்கள் யாவும் தள்ளுபடி செய்யும் வகையில் இம்மசோதா வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதன்மூலம் அண்டை மாநிலங்களுடான தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் மேலும் சிக்கலாகும்.

முல்லைப் பெரியாறு போன்ற 4 அணைகள் கேரளாவில் அமையப் பெற்றிருந்தாலும் அவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மேற்குத் தமிழகத்தில் பெரும் பாசனப்பரப்பிற்கான நீராதாரமா்க விளங்கும் பரம்பிக்குளம் அணையானது கேரளாவிலிருந்தாலும் அதன் கட்டுப்பாட்டு உரிமை முழுவதும் தமிழகத்திற்கே உரித்தானது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய அணை மசோதாவின் மூலம் தமிழகத்தின் இத்தகைய அணைகள் மீதான கட்டுப்பாடுகளும், உரிமைகளும் முற்றிலும் மறுக்கப்படும். அவற்றைப் பாதுகாப்பதற்குரிய எந்த வழிவகைகளும் இம்மசோதாவில் வரையறுக்கப்படவில்லை. ஏற்கனவே, அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்குரிய நதிநீர் உரிமைகளை மறுத்துச் சதிராட்டம் போட்டு வரும் நிலையில் புதிதாகக் கொண்டு வரப்படும் இம்மசோதா, அம்மாநிலங்களின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் விதம் அமையும் என்பதன் மூலம் இதிலுள்ள ஆபத்தினை உணர்ந்து கொள்ளலாம்.

அணைகள் பாதுகாப்பு – இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் மாநிலப் பட்டியல் பிரிவு 17-ல் உள்ளது. பொதுப்பட்டியல் அதிகாரங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்புச் செய்து வந்த மத்திய அரசு, தற்போது மாநிலப் பட்டியல் பிரிவு 17-ல் இருக்கும் அதிகாரத்திலும் கைவைக்கத் தொடங்கியிருப்பது பெரும் அதிகார அத்துமீறல்; இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிரான பெரும் சனநாயகத் துரோகமாகும். ஏற்கனவே, சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள ஷினோத் எனும் ஆற்றைத் தனியாருக்குத் தாரைவார்த்த நிகழ்காலக் கொடுமையும் இந்நாட்டில்தான் நடந்திருக்கிறது என்பதன் மூலம் நீர்வளத்தினைத் தனியார்வசமாக்கலின் ஒருமுகமாகவே மத்திய அரசால் இம்மசோதா கொண்டு வரப்படுகிறது என்கிற ஐயப்பாட்டில் உண்மை இல்லாமலில்லை.

மாநில அரசின் உரிமைக்கு இவ்வளவு பாதிப்பு இருந்தும் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் தமிழகத்திற்குப் பாதிப்பில்லை என்று சொல்வது கடைந்தெடுத்த பொய். மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வரும் இப்புதிய மசோதாவிற்கு எதிராகத் தமிழக அரசு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது. எனவே, அதனை மதித்து மத்திய அரசு மாநிலங்களின் தன்னாட்சி உரிமை காவுவாங்கும் இப்புதிய அணைகள் மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடிச் சிறைசென்ற ஐயா வியனரசு விடுதலை
அடுத்த செய்திடி.டி.வி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்