‘ பேசினாலே கைது என்றால், இது ஜனநாயக நாடா?’ – கொதிக்கும் சீமான்

29

சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட சீமான், நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ‘ ஆட்டுத் தோலை விற்றுக்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்கு இத்தனை கோடி பணமும் எப்படி வந்து சேர்ந்தது?’ என்று கேள்வி எழுப்பினார் சீமான்.

சேலம் மத்திய சிறை வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், ” என்னைக் கைதுசெய்வதன்மூலம் மக்களை அச்சுறுத்துகிறார்கள். அரசாங்கம் கருத்துக் கேட்பதுபோலத்தான் நாங்களும் கருத்துக் கேட்கிறோம். இந்தத் திட்டத்துக்காக 90 சதவிகித மக்கள் விரும்பித்தான் நிலத்தைக் கொடுத்தார்கள் என முதல்வர் சொல்கிறார். அப்படியென்றால், அந்த மக்களைச் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது. நேற்று என்னைக் கைதுசெய்துவிட்டு இன்று பிணையில் விடுகிறார்கள் என்றால், இது ஒரு காரணமும் இல்லாத கைது என்பது நிரூபணம் ஆகிறது. எட்டு வழிச் சாலை என்பது வேகப் பயணம் அல்ல, அது வேகமான மரணம். காரைப் பற்றி கவலைப்படுபவர்கள் நீரையும் சோறையும் பற்றிக் கவலைப்படுவதில்லை. பேரழிவை நோக்கி இந்த தேசம் நகர்ந்துகொண்டிருக்கிறது. எட்டு வழிச் சாலைபற்றிப் பேசினாலே கைது என்றால், இது ஜனநாயக நாடா?

ஆட்டுத் தோலை விற்றுக்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்கு கோடி கோடியாகப் பணமும் நகையும் எப்படி வந்தது? எட்டுவழிச் சாலை போன்ற ஒப்பந்தங்களின்மூலம் பணத்தைக் குவிக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாடு திறந்தவெளி சிறைச்சாலையாக இருக்கிறது. ஒரு நாட்டின் வளம் என்பது மலைகள். அதை அழித்துவிட்டால், மீண்டும் எப்படி உருவாக்க முடியும்?’ என்றார் ஆதங்கத்துடன்.

முந்தைய செய்திசீமான் கைது: சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து திருவொற்றியூரில் ஆர்ப்பாட்டம் – 17 பேர் கைது
அடுத்த செய்திசீமான் கைது: சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் – 24 பேர் கைது