புத்த மடாலயம் மீது தாக்குதல்-சீமான் அறிக்கை

40

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

சிங்கள‌ர்களா‌ல் நட‌த்த‌ப்படு‌ம் பு‌த்த மடாலய‌ம் ‌மீது நேற்று நள்ளிரவு தா‌க்கு‌த‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.  நம் மீனவர்கள் ஒவ்வொரு முறை சுடப்படும் பொழுதும் தமிழக மீனவரை சுட்டுக் கொன்றது இலங்கை கடற்படையினர் அல்ல என்றும் இலங்கை கடற்படை ஒருபோதும்  எல்லையைத் தாண்டுவது இல்லை என்றும் சிங்கள அரசு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது.600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறிப் படையால் கொல்லப்பட்ட நிலையிலும், இந்திய அரசும் தமிழக அரசும் அதற்கெதிரான உறுதியான நடவடிக்கைக்கு தயாரில்லை. அறிக்கை, வேண்டுகோள், கடிதம், தந்தி என்ற ஒன்றுக்கும் உதவாத வழிமுறைகள் மூலம், சிங்கள இனவெறிக்கு மேலும் ஊக்கமளித்துக்கொண்டிருக்கின்றன.நேற்று முன் தினம், மீனவர் ஜெயக்குமார் சிங்கள ராணுவத்தால் கழுத்தில் சுருக்கிட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே ஆளும் அரசுகளுக்கு எதிரான கொதிப்பை உருவாக்கியுள்ளது.இந்த கொதிநிலை, சிங்கள இனவெறிக்கும்,ஆதரவாய் நிற்கும் காங்கிரஸ், திமுக அரசுகளுக்கும் எதிரான நெருப்பாய் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில்தான், சென்னை எழும்பூரிலுள்ள புத்த மடாலயம் தாக்கப்பட்டுள்ளது. இதற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பில்லை. மேலும் புத்த மட தாக்குதல் தொடர்பாக, சென்னை பெரம்பூர் ஜோசப்,திலீபன் என்ற நாம் தமிழர் கட்சியினர் 2 பேரை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று கருதி உரிய வழிமுறைகள் பின்பற்றப்படாமல் சட்டவிரோதமாக சென்னைக் காவல்துறை அழைத்துச் சென்றுள்ளது.சென்னையில் நடைபெற்ற எண்ணற்ற குற்றச் செயல்களில் வருடக் கணக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத காவல்துறை,ஆளுங்கட்சியின் நிர்ப்பந்தத்தால் கைகட்டி நிற்கும் காவல்துறை நள்ளிரவு நடந்த சம்பவத்தில் அதிகாலைக்குள் துப்புத் துலக்கி எங்கள் கட்சியினரைக் கைது செய்யும் நோக்கில் அழைத்துச் சென்றுள்ளது வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கிறது.ஆட்சியாளர்களின் அடக்குமுறை குறித்து நாங்கள் துளியும் அஞ்சவில்லை. அதே நேரத்தில் எம் தம்பிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து சட்ட்த்தின் படியும்,நியாயத்தின் படியும் தங்கள் தரப்பில் தவறு இல்லை என்று நிருபித்து வெற்றியுடன் வெளி வருவார்கள்.தமிழர்களின் கோபம், சிங்கள இனவெறிக்கும்,இங்கு அதற்கு துணைநின்றவர்களையும் ஜனநாயக வழியில் தண்டிப்பதற்காக நெறிப்படுத்தப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.எந்த ஆட்சி அதிகாரத்தின் மூலம் இவர்கள் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க வில்லையோ அந்த ஆட்சி அதிகாரத்தினை இவர்களிடம் இருந்து பறிக்கும் நோக்கத்தில் நாம் அணி திரள வேண்டும்.

,

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]கோவைக்கு வருகை தந்த செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வரவேற்ப்பு அளித்த கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]தமிழக மீனவர் ஜெயக்குமார் அவர்களின் படுகொலையை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம்.