பின்லாந்தில் தேசியத்தலைவர் அவர்களின் குடும்பத்துடனான முதல்தர தபால் வெளியீடு!

41

தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன் அவர்களால் பின்லாந்தில் பின்லாந்து அரசு ஊடாக முதல்தரமான (first class) தபால்த்தலை வெளியிட்டு பெருமையும் சிறப்பையும் சேர்த்துள்ளார்.

இவர் கடந்த வருடமே பல தடவைகள் இதே போன்ற தபால்த் தலை வெளியிட பல தரப்பட்ட முயற்சிகள் எடுத்த போதிலும் அந்த நாடு நிராகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் வெளியிட்டேதீர வேண்டும் என்ற வெறியுடன் பல கடினமான முயற்சிகளோடு பின்லாந்து அரசினை நாடி இது பற்றிப் பேசி சம்மதிக்க வைத்து தமிழர்களின் விடிவிற்காகப் போராடிய வீரத்தலைவன் என்ற அடிப்படையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர் குடும்பத்துடன் இருக்கின்ற படத்தினை தபால் தலை ஊடாக வெளியிட்டு தமிழர்களின் வீரப் போராட்டத்தையும் தமிழர்களின் ஒரே தலைவன் பிரபாகரன் என்பதையும் இத்தபால் தலை ஊடாக சொல்லிச் சிறப்பித்திருக்கிறார்.

பின்லாந்து அரசும் தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புக்களை ஏற்று முதல் தரமான (first class) தபால் தலை வெளியிட்டு எங்கள் தேசியத் தலைவரையும் அவரின் குடும்பத்தையும் கௌரவப்படுத்தியுள்ளது.
கடந்த வருடங்களில் தமிழீழச் சின்னங்கள் பதிக்கப்பட்ட தபால் தலைகள் பிரான்ஸ் பிரித்தானியா அமெரிக்கா நோர்வே ஜேர்மனி ஆகிய நாடுகளில் அந்த நாட்டு அரசாங்கங்கள் ஊடாக ஈழத்தமிழர்கள் வெளியிட்டு சிறப்பித்து கௌரவப்படுத்தியிருந்தது யாவரும் அறிந்ததே…

இதே வரிசையில் இப்போது முதன் முறையாக ஈழத்தமிழர்கள் அரிதாக வாழும் பின்லாந்தில் வாழ்ந்து கல்வி கற்று வருகின்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன் அவர்களால் அந்த நாட்டு அரசு ஊடாக மேற்குறிப்பிட்ட தபால் தலையை வெளியிட்டு தமிழர்களின் ஒரே தலைவன் தேசியத் தலைவர் பிரபாகரன் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லி கௌரவப் படுத்தியுள்ளார்.

தமிழீழச் சின்னங்கள் பதிக்கப்பட்ட பல தபால் தலைகள் பல நாடுகளில் வெளிவந்திருந்தாலும் தலைவர் அவர்கள் குடும்பத்தினருடன் இருப்பது போன்ற தபால் தலை வெளிவருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி சுரேஷ்கண்ணன் தெரிவிக்கையில்…
‘எல்லா நாடுகளிலும் தபால் தலைகள் வெளிவரும் போது நான் வாழுகின்ற நாட்டிலும் எப்பாடுபட்டாவது இதே போன்ற தபால் தலைகள் வெளியிட்டே தீர வேண்டும் என்ற வெறி எனக்குள் பற்றிக் கொண்டது.நான் இந்த நாட்டுக்கு வந்து ஒரு சில வருடங்களே ஆகிறது அதனால் கடந்த வருடம் பல தடவைகள் முயற்சி செய்தும் நான் நான் தோல்வியே அடைந்தேன். இருந்தும் நான் மனம் தளரவில்லை. இங்கு ஈழத்தமிழர்கள் குறைவு அதனால் எனக்குப் பக்க பலமாக யாரும் இல்லை இருந்தும் விடுவதில்லை என்று இம்முறையும் பல தடவைகள் முயற்சி செய்து இறுதியில் வென்று விட்டேன்.

என் தேசத்திற்காக என்னால் முடிந்த பங்களிப்பையும் புலம் பெயர் தேசத்தில் இருந்து செய்ய வேண்டும் என்ற கனவுகள் எனக்கும் நிறைய உண்டு. அதில் தபால் தலை வெளியிடுவதும் ஒரு பெரிய கனவாகவே இருந்தது. தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவரின் வரலாற்றுச் சிறப்புக்களையும் தமிழர்களின் ஒரே தலைவன் தேசியத் தலைவர் பிரபாகரன்தான் என்பதையும் இந்த பின்லாந்து அரசு ஊடாக எல்லா நாடுகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இன்று (22.10.2013) வெளியிட்டதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

இதே போல் எல்லா நாடுகளிலும் புலம் பெயர்ந்து வாழுகின்ற எங்கள் உறவுகள் அவரவர் நாடுகளில் தபால் தலைகள் வெளியிடுவதால் எங்கள் தமிழீழத்திற்கு சர்வதேசத்தில் சிறப்புக் கௌரவமும் அங்கிகாரமும் கிடைக்கும்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உண்மைகள் ஒரு போதும் அழியாது! இறுதியில் தர்மமே வெல்லும்! தமிழீழம் மலரும்!

முந்தைய செய்திகனடியத் தமிழரை வரவேற்கத் தயாராகும் தலைநகர் ஒட்டாவா
அடுத்த செய்திஅக்டோபர் 26 அன்று காலை 09 மணிக்கு சென்னை தலைமையகத்தில் மாணவர் பாசறை பொறுப்பாளர்களின் மிகமுக்கிய கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.