[படங்கள் இணைப்பு] கொள்கையே இல்லாத காங்கிரசு கட்சியை வீழ்த்துவதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை – ஈரோட்டில் செந்தமிழன் சீமான்

68

“நாம் தமிழராய் உருவெடுப்போம் காங்கிரசை கருவறுப்போம்” என்று முழக்கமிட்டு தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகத்தையும் கொடுமைகளையும் ஒவ்வொரு தமிழர்களின் மனதிலும் பதியச் செய்து அக்கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அதை வீழ்த்த களமாடி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்.

அதன் தொடற்சியாக 6-4-2011 அன்று ஈரோடு, சிவகிரி, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் செந்தமிழன் சீமான் ஈடுபட்டார். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய செந்தமிழன் சீமான் அவர்கள் பேசும்போது இந்த தேர்தலில் தமிழ் மக்களுக்கான வரலாற்று கடமையை நிறைவேற்ற வாய்ப்பு தந்திருக்கிறது. தமிழர்களின் மற்றுமொரு தாய் நிலமான ஈழத்தில் நடைபெற்ற 4ஆம் கட்ட இறுதி போரில் அப்பாவித் தமிழ் மக்களை கொத்துகொத்தாய் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு இரண்டு கையையும் கொடுத்து உதவி எம் இன மக்களை கொன்றொழிக்க துணை நின்ற காங்கிரஸ் கட்சிக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.  இந்த சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் தேசிய இனத்திற்கும் இடையே நடைபெறும் அரசியல் யுத்தம் என்றார்.

மேலும் அவர் பேசுகையில் மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க.வும் ஆட்சி செய்து வருகிறது. ஆனால் தமிழக மக்களின் உயிர் நாடியான காவிரி நீரை பெற்றுத்தர அவர்களால் முடியவில்லை. முன்னொரு காலத்தில் கர்நாடக மக்களுக்கு உழவுத்தொழிலை நம் தமிழர்கள் தான் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் இன்று தமிழ்நாட்டில் காவிரி பாசனப்பகுதிகள் காய்ந்து கிடக்கின்றன.

கடந்த 2 ஆண்டில் இந்தியாவில் 2 லட்சம் விவசாயிகள் வறுமையால் உயிரிழந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமே காங்கிரஸ் தான். நமது தமிழ் மன்னரான சேதுமன்னன் ஆண்ட கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தபோது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிதான் நடந்தது. அப்போது தாரைவார்த்து கொடுத்ததை அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்த கருணாநிதி இப்போது கச்சத்தீவை மீட்போம் என்று கூறுகிறார்.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் ஆளும் காங்கிரசும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வும் எந்தவித சரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெருந்தலைவர் காமராஜரும், கக்கனும் ஆண்ட இந்த புண்ணிய பூமியில் பணம் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். இதனை முறியடிக்கும் வகையில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும்.

ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியில் நேற்று இரவு நடந்த கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டு பேசியபோது அவர்  மற்ற தொகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியதைவிட இங்கு பேசுவது முக்கிய காரணம் உள்ளது. ஏன் என்றால் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா இந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடுகிறார்.
சாதி என்னும் சகதியில் இருந்து நம்மை தூக்கி விட்ட பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் எண்ணமே காங்கிரசை அழிப்பதுதான். இலங்கையில் நம் இனத்தைச் சேர்ந்த தமிழர்களை கொன்று குவிக்க காரணமான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யுவராஜாவுக்கு வாக்களிக்காதீர்கள்.

கொள்கைகளே இல்லாத கட்சிதான் காங்கிரஸ். நாம் தமிழர் கட்சிக்கு கொள்கை உள்ளது. அக்கட்சியை வீழ்த்துவதே நாம் தமிழர் கட்சியின் தற்போதைய கொள்கை என்றார் மேலும் மக்களின் கோரிக்கைக்காக என்றாவது காங்கிரசார் போராடி இருக்கிறார்களா? ஏன் உங்கள் தொகுதியில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜ் போராடினாரா? ஈரோட்டில் உள்ள சாயக்கழிவு பிரச்சினை, நூல் விலை உயர்வு என எந்த மக்களின் கோரிக்கைக்காகவாவது இது வரை வீதியில் இறங்கி யுவராஜ் போராடினாரா? அல்லது மத்திய மாநில அரசின் கவனத்திற்காவது எடுத்து சென்றாரா ? பொதுமக்களாகிய நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தமிழக மக்கள் தினமும் 8 முதல் 10 மணி நேரம் இருட்டில் உள்ளனர். தொடர் மின்தடையினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மின் தட்டுப்பாட்டுக்கும், விலைவாசி உயர்வுக்கும் காரணம் ஊழல். முன்பு அரசிடம் இருந்த கல்வி இப்போது தனியாருக்கு சென்று விட்டது. தனியாரிடம் இருந்த மது அரசிடம் வந்து விட்டது. ஊழலை ஒழிக்க வேண்டுமானால் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்.

இக்கூட்டத்தில், தலைமைக்கழக பேச்சாளர்கள் ஜெயசீலன், திலீபன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குமுதவள்ளி,  இயக்குனர் செல்வபாரதி, கரூர் மாவட்ட பொறுப்பாளர் முரளி உள்பட மாவட்ட செயலாளர் ஜெயராஜ், இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், மாவட்ட துணை பொறுப்பாளர்கள் செழியன், திருநாவுக்கரசு, லோகநாதன், பாண்டியன் ஆகியோர் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஈரோடு ,திருச்செங்கோடு,சிவகிரி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் புகைப்படத் தொகுப்பு.

முந்தைய செய்திதமிழ்நாடு மற்றும் புதுவை வழக்கறிஞர் சங்க தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அலைமகன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
அடுத்த செய்திவிளாத்திகுளம், வைகுண்டம் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் 07-04-2011