படகுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் 24 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு; சிங்கள கடற்படை அட்டூழியம்

34

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்வது தொடர் கதையாக உள்ளது. சமீபத்தில் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் நடுக்கடலில் சிங்கள ராணுவத்தால் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகை, காரைக்காலைச் சேர்ந்த 106 மீனவர்களை சிங்கள ராணுவம் சிறை பிடித்தது. அவர்களது படகுனுகளையும் பறிமுதல் செய்தது.106 தமிழக மீனவர்களும் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்தாக குற்றம் சாட்டி அவர்களை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பாயிண்ட் பெட்ரோ போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.யாழ்ப்பாணம் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 106 பேரையும் 28-ந்தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 106 மீனவர்களும் பருத்திதுறை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி கைதானார்கள்.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் 24 தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சிறை பிடித்து உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 200 பேர் படகுகளில் நேற்று மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சிங்கள ராணுவத்தினர் விசை படகுகளில் மின்னல் வேகத்தில் வந்தனர்.அவர்கள் தமிழக மீனவர்களை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். இதனால் தமிழக மீனவர்கள் பீதி அடைந்தனர். படகுகளில் தீப்பிடித்ததால் பலர் கடலில் குதித்து மற்ற படகுகளில் ஏறி தப்பினர். 24 மீனவர்களை 7 படகுகளுடன் சிங்கள ராணுவத்தினர் சிறைபிடித்தனர். அவர்களை இலங்கைக்கு கடத்தி சென்று விட்டனர்.

சிங்கள ராணுவம் சென்றதும் மற்ற மீனவர்கள் தமிழகத்துக்கு திரும்பினார்கள்.  சிங்கள ராணுவம் வீசிய பெட்ரோல் குண்டு பட்டு கோட்டைபட்டினம் மீனவர் ராஜாமுகமது உடல் கருகி படுகாயம் அடைந்தார். அவர் மணமேல் குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிங்கள ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  நாகை மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து நேற்று நாகை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டனர். அவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. படகுகள் கடற்கரையில் கட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்திபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன விசாரணைகள் அவசியம் – பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேர் கோரிக்கை
அடுத்த செய்திவருகின்ற 19-2-2011 அன்று மாதவரம் பகுதியில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் பொதுகூட்டத்தையொட்டி ஆர்.கே நகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதாகை.