நெய்வேலி மின்சாரம் தமிழகத்துக்கு மட்டும் கிடைத்தாலே போதும்; கூடங்குளம் தேவை இல்லை – முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு திரு. பழ. நெடுமாறன் ஒரு திறந்த மடல்

23

கூடங்குளம் அணுமின் திட்டத்தை ஆதரித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ள கருத்துகளை முழுமையாக மறுத்து பழ.நெடுமாறன், அப்துல்கலாமுக்கு திறந்த மடல் ஒன்றை ‘தினமணி’ நாளேட்டில் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தின் மக்கள் தேவைக்கு தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரமே போதுமானது என்றும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கப் படுவதால் தான் இந்த நெருக்கடி என்றும் விளக்கியுள்ளார். பழ. நெடுமாறன் கட்டுரை யிலிருந்து ஒரு பகுதி:

தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமானால் அதற்கு அவசியமான கட்டமைப்பு மின்சாரம் ஆகும். இந்தியாவிலேயே ஒரே இடத்தில் 2000 மெகாவாட் மின் உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி அணு மின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்துக்கு மிகப் பெரிய செய்தியாகும்.

கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வர வாய்ப்புள்ளது. இந்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்க இருக்கிறது எனவும் தமிழக மக்கள் நாவில் தேனைத் தடவ முயற்சி நீங்கள் செய்திருக் கிறீர்கள்.

உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளுக்குப் பின்னாலும் காவிரி நீரைத் தமிழகத்துக்குத் தர மறுக்கும் கர்நாடகத்துக்கும், முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்துக்கும், பாலாற்றை வழிமறிக்கும் ஆந்திரத்துக்கும் கூடங்குளம் மின்சாரத்தில் பாதி அளிக்கப்பட இருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகப் போகும் மின்சாரத்தில் 50 சதவீதம் மட்டுமே தமிழகத்துக்கு அளிக்கப்படும் என்பதை பெரிய வாய்ப்புப்போல கூறியிருக்கிறீர்கள். மீதமுள்ள மின்சாரம் பிற தென்மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஆனால், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவாக உருவாகும் அபாயம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே. இது என்ன நியாயம்?

ஏற்கனவே நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்த மூன்று அண்டை மாநிலங் களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 26 கோடி யூனிட் மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை நாள் ஒன்றுக்கு 22 கோடி யூனிட்தான் ஆகும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? நெய் வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையும் தமிழகத்துக்குக் கொடுத்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அவசியம் இருக்காதே.

தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையைப் போக்க பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தாங்களே மின்நிலையங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வகுத்துள்ள திட்டத்தின்படி 3000 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 5 அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக் குறைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு இலவசமாகவும், பிறகு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்கப் படுவதும்தான் காரணமாகும். பன்னாட்டு நிறுவனங்கள் சொந்த மாகவே அனல் மற்றும் காற்று மின்உற்பத்தியைச் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட வேண்டும். அரசு உற்பத்தி செய்யும் மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கும் சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும் – என்று பழ.நெடுமாறன் எழுதியுள்ளார்.

முந்தைய செய்திஇந்தியாவில் நடந்த அணுமின் விபத்துகள்!!
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் அறிவிப்பு கூட்டம்