நீலகிரி தொகுதியில் படுக தேச பார்ட்டி சார்பாக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை

289

செய்திக் குறிப்பு: நீலகிரி தொகுதியில் படுக தேச பார்ட்டி சார்பாக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் அங்கு நாம் தமிழர் கட்சி போட்டியிட முடியாத சூழலில், நாம் தமிழர் கட்சி தனது உளமார்ந்த முழு ஆதரவை அத்தொகுதியில் படுக தேச பார்ட்டி சார்பாக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு வழங்குவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்திருந்தார்.

அக்கட்சியின் சார்பாக நீலகிரி தொகுதியில் ஊன்றுகோல் ( கைத்தடி) சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் திரு மா.சுப்பிரமணி அவர்களின் வெற்றிக்காக நாம் தமிழர் கட்சியினர் முழு வீச்சில் பாடுபட வேண்டும் எனவும், கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் படுகதேச பார்ட்டிக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி படுக தேச பார்ட்டியின் சுயேட்சை வேட்பாளர் மா.சுப்பிரமணி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க உழைக்க வேண்டும் எனவும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சியினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஆதரவை படுக தேச பார்ட்டியின் தலைவர் மஞ்சை வி.மோகன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு ஏனைய தொகுதிகள் அனைத்திலும் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு உழைப்போம் என உறுதியளித்து ஆதரவு கடிதத்தை நேற்று 02-04-2019 பொள்ளாச்சி மற்றும் கோவையில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார். உடன் அக்கட்சியின் நீலகிரி வேட்பாளர் மா.சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் சிலர் கலந்துகொண்டனர். நீலகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்ட வரைவு திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர்.

 

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை கோவை, சோமனூர் பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு விவசாயி சின்னத்திலும் படுக தேச பார்டியின் நீலகிரி நாடாளுமன்ற சுயேட்சை வேட்பாளர் மா.சுப்பிரமணி அவர்களுக்கு ஊன்றுகோல் ( கைத்தடி) சின்னத்திலும் வாக்கு கேட்டு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டார்.

புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்: https://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திசீமான் தேர்தல் பரப்புரை உயர்தர நிழற்படங்கள் [Seeman Election Campaign HD Download]
அடுத்த செய்திசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பதினொன்றாம் நாள் (04-04-2019)