நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

1669

நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலை | வேலை வாய்ப்பு – வளர்ச்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை; வருமானம், வெகுமானம் அரசுப் பணி. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தகுந்த இடம் அரசால் தேர்வு செய்யப்பட்டு, அங்கே புதிதாகக் கால்நடை மேம்பாட்டுப் பண்ணைகள் அமைக்கப்படும். அதில் நமது பரம்பரை நாட்டு ஆடு, மாடுகள் மட்டும் வளர்க்கப்படும். வெளிநாட்டு -ஜெர்சி வகை மாடுகள் அனைத்தும் தடை செய்யப்படும்.

  • காங்கேயம், கார்பார்க்கர், சிவப்புப்பசகி, சாக்கிவால், உம்பளச்சேரி, புளியங்குளம் பட்டிமாடு, தேனி மலைமாடு, பர்கூர் மலைமாடு, சிந்தி, கீர், ஓங்கோல் மேலும் பல நமது பரம்பரை மாடுகளைக் கொண்டு உருவாக்கப்படும் பண்ணையில் இருந்து பால் (A2), பால்கோவா, தயிர், வெண்ணெய், மோர், பால்பொருள் இனிப்பு வகைகள் ஆகியவை உருவாக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். அவற்றில் நம் தேவைக்குப் போக மீதமுள்ளவை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
  • இதன் மூலமாக ஏறக்குறைய 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படித்த, படிக்காத இளைய தலைமுறைக்கு அரசு வேலைகள் வழங்கப்படும். படித்தவர்களுக்குப் பண்ணை மேலாண்மை, நிர்வாகம், கணினி மயப்படுத்துவது மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு விற்பனைப் பிரதிநிதி வேலைகள் வழங்கப்படும். படிக்காதவர்களுக்குக் கால்நடைகளை வளர்த்தல், பேணிக்காத்தல், கண்காணித்தல் உள்ளிட்ட வேலைகள் வழங்கப்படும்.
  • ‘கால்நடை மேலாண்மைப் பண்ணைகளுக்கு அருகில் ஆட்டுப்புழுக்கை மாட்டுச் சாணம்,- சிறுநீர்க் கழிவுகளில் இருந்து பஞ்சகவ்வியம், அமிர்தக்கரைசல், மண்புழு உரங்கள், அரக்கு உள்ளிட்ட ஏராளமான ‘இயற்கை உரங்கள் தயாரிக்கும்’ தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.

மாடுகளை மட்டும் வைத்து முன்னேறிய நாடுகள்:

டென்மார்க், பிரேசில், நியூசிலாந்து போன்ற தேசங்கள் மாடுகளை மட்டுமே வைத்துக்கொண்டு வளர்ச்சியடைந்த நாடாக மாறியிருக்கிறது. அதைவிடப் பல வளங்களைக் கொண்ட நமது தமிழகம் வளர்ச்சியடையாமல் முடங்கியே இருக்கிறது.

எல்லா வளமும் பெற்ற தமிழகத்தில் வேளாண் தொழிலுக்குத் துணையாக இருக்கும் பரம்பரை மாடுகளை மேலும் பெருக்க நடவடிக்கை எடுப்போம்.

இயற்கை உரங்கள்:

அரக்கு என்பது நாட்டுமாட்டுச் சிறுநீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கிக் குளிரூட்டிப் பெறப்படும் அருமருந்தாகும். புற்றுநோய் உள்ளிட்ட நானூறுக்கும் மேற்பட்ட பல நோய்களைக் குணமாக்கும். மேலும் இதிலிருந்து பற்பசை, சாம்பு (சீய்நெய்), சோப்பு (வழலை), நறுமணப் பொருட்கள் உருவாக்கப்படும். இவற்றில் தனிக்கவனம் செலுத்தி ஏற்றுமதி செய்யப்படும்.

  • இந்தத் தொழிற் சாலைகளில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் நிலங்களுக்கு உழவர் கூட்டுறவுச் சங்கங்கள் நியாயவிலைக் கடைகளின் வழியாகச் சிற்றூர்கள் வரை அனுப்பி வைக்கப்படும்.
  • தூய இயற்கை முறையில் வளர்க்கப்படும் கால்நடைகளின் கறிகளை உள்நாட்டு விற்பனைக்குப் போக மீதம் வெளிமாநிலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
  • ஆடுமாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் உருவாக்கும் நடுவம், அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும்.

ஜெர்சி மாடுகளுக்கும் பாலுக்கும் தடை:

பால் வகைகளின் பேய் (Devil in the Milk) என்றிருக்கும் ஜெர்சிவகை மாடுகளின் பால் (A-1) முழுதாகத் தடைசெய்யப்படும். ஸீஷீபீμ மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட மாடுகளில் இருந்து பெறப்படும் இந்தப் பால் மனித குலத்திற்கு எதிரானது. ஒவ்வாமை, சர்க்கரைநோய், பெண்கள் சிறு வயதில் பூப்பெய்தல். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுதல் உள்ளிட்ட நோய்களை எளிதாக உண்டாக்கி வருகிறது. பல்வேறு புதிய வகை நோய்களை உருவாக்கக்கூடியது.

  • அமெரிக்கா சர்க்கரை நோய்க்கான ஊசி மருந்தை மட்டுமே விற்று 375 இலட்சம் கோடியை வருமானம் ஈட்டுகிறது.
  • அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் ஜெர்சி வகை மாட்டுப்பாலைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறது.
  • இந்தியா போன்ற நாடுகளில் A-2 என்ற நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும், எளிதில் செரிக்கக்கூடிய பாலைக் கொடுக்கும் பரம்பரை மாட்டின் விந்துகளை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறார்கள். எனவேதான் ஜெர்சி வகை மாடுகளுக்கு முற்றாகத் தடை விதிக்கின்றோம். மாற்றாக நமது பரம்பரை மாடுகளைத் திட்டமிட்டுப் பெருக்குவோம்.

காய்-கனிகளுக்கான பண்ணை வேலைகள்:

எடுத்துக்காட்டாக 5000 ஏக்கரில் தக்காளிப் பண்ணைகள் வைக்கப்படும்.

  • பண்ணையில் விளையும் தக்காளி இரசாயனக் கலப்பற்ற நாட்டு வகையாக இருக்கும். விற்பனை ஏற்றுமதிக்குப் போக மீதம் இருப்பது பழக்கூழ் மற்றும் ஊறுகாய் உள்ளிட்ட பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும். அதற்கான தொழிற்சாலை பண்ணைகளுக்கு அருகில் அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்படும்.
  • இதே வகையில் மிளகாய், மற்ற காய்கறிகளுக்காக என்று மாவட்டம் தோறும் பண்ணைகள் உருவாக்கப்படும். முழுதும் இயற்கை முறையில் வளர்க்கப்படும் காய்கனிகள் அந்தப் பகுதித் தேவைகளுக்குப் போக மீதம் மற்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

எள்- கடலை எண்ணெய்த் தொழிற்சாலை:

மானாவாரி நிலங்களில் அரசு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 5000 ஏக்கர் பரப்பளவில் எள் பண்ணைகள் அமைக்கப்படும். அதே போன்று வேர்க்கடலைப்பண்ணைகளும் ஏற்படுத்தப்படும். அதற்கு அருகிலேயே தூய நல்லெண்ணைய், கடலை எண்ணெய் பிழியும் ஆலைகள் அமைக்கப்படும்.

  • எள் வகைளில் இருந்து சத்துமிக்க எள்ளுருண்டை, எள்ளினிப்புக் கட்டி, எள் வெட்டப்பம், கடலை வெட்டப்பம் (Cake) போன்ற வணிகப் பொருட்களும் தயாரிக்கப்படும். எள்- கடலைப் பிண்ணாக்கில் இருந்து இயற்கை உரம், மாடுகளுக்கான தீவனம் ஆகியவை உருவாக்கப்படும். அந்தந்த மாவட்டத்தேவைகளுக்குப் போக மீதம் வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இது சார்ந்த தொழிலும் அரசு வேலையாக அறிவிக்கப்படும்.
  • இளநீர், நுங்கு பதநீர், கம்பு-, கேழ்வரகுக் கூழ், இயற்கை நெல், சிறுதானியங்கள், மூலிகைப் பொருட்கள், பாரம்பரிய உணவு முறைகள், மண்பாத்திரங்களின் அவசியம், எது நோயற்ற வாழ்வு என்பதை அறிந்துகொள்ள, ஒவ்வொரு ஆண்டும், “தமிழ்த்தேசிய உணவுத் திருவிழா” நடத்தப்படும். குறிப்பாகத் தமிழர் திருவிழாவான பொங்கல் திருவிழாவின்போது, இந்த உணவுத் திருவிழா நடத்தப்படும். அப்போது பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள், இளநீர் குடிக்கும் போட்டி, பதநீர் குடிக்கும்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்துவதன் மூலம் நம் மண்ணின் பாரம்பரிய உணவுத் -தானியங்கள் பற்றிய விழிப்புணர்வு வளர்த்தெடுக்கப்படும்.

பழச்சாற்றுத் தொழிற்சாலை:

முழுதும் இயற்கை வேளாண் முறையில் வளர்க்கப்படும் தக்காளி, மாம்பழம், பப்பாளி, பலா உள்ளிட்ட அனைத்துப் பழ வகைகளும் தமிழகப் பயன்பாட்டிற்குப் போக மீதம் பழக்கூழாக, ஊறுகாயாக மாற்றப்படும். இதற்கானத் தொழிற்சாலைகள் அந்தந்தப் பண்ணைகளுக்கு அருகிலேயே அமைக்கப்படும்.

  • ஊறுகாய் மற்றும் பழச்சாறு வகைகள் மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
  • படிக்காத அனைவருக்கும் கால்நடைப் பண்ணை மற்றும் இயற்கை உரங்கள் தயாரிப்பு, காய்கறிப் பண்ணைகளில் அரசு வேலை வழங்கப்படும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு:

அந்தந்தப் பகுதியில் நன்கு படித்த இளைஞர்கள் விற்பனைப் பொறுப்பாளர்கள் வேலைகளில் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்குச் சென்று தமிழகத்தில் விளையும் காய்கறிகள் அனைத்தும் எப்படி இயற்கை முறையில் உருவாக்கப்படுகிறது என்பதை ஒளிப்படக் காணொளிக் காட்சிகள் மூலம் விளக்கி விற்பனையைப் பெருக்கப் பணிக்கப்படுவார்கள்.

அரசு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் எள், வேர்க்கடலைப் பண்ணைகள் அமைக்கப்படும். அதற்கு அருகிலேயே தூய நல்லெண்ணைய், கடலை எண்ணெய் பிழியும் ஆலைகள் அமைக்கப்படும்.

பலகோடிப் பனைத் திட்டம்:

பனை தமிழகத்தின் தேசிய மரமாக அறிவிக்கப்படும். ஒரு பனைமரம் ஒரு வருடத்திற்கு 180 லிட்டர் பதநீர் கொடுக்கிறது. 25 கிலோ பனைவெல்லம் கொடுக்கிறது. 16 கிலோ தும்பு, 25 கிலோ ஈக்கு, 10 கிலோ விறகு, பத்துக் கிலோ ஓலை, 20 கிலோ நார் ஆகியவற்றை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது.

அதனால் இருக்கும் பனைமரங்களைப் பாதுகாப்பது, புதிய பனைமரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் வகுக்கப்படும். ஊர் தோறும் இருக்கும் நீர் நிலைகளைச் சுற்றிப் பனை மரங்களை ஏராளமாக நட்டு வளர்க்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம்.

தமிழ்த் தேசியக் குடிபானம்:

இளநீர், பதநீர், நுங்கு, ஆகியவை தேசிய இயற்கை குடிபானமாக அறிவிக்கப்படும். அதிகளவிலான நுங்கு பதநீர் இளநீர் ஆகியவை புதிய முறையில் தகரக் குவளைகளில் அடைக்கப்பட்டு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதற்கான தொழிற்சாலை அமைக்கப்படும். பன்னாட்டுக் குளிர்பானங்கள் அனைத்தும் தடைசெய்யப்படும்.

தமிழ்த் தேசிய மதுபானம்:

பனங்கள் மற்றும் தென்னங்கள் ஆகியவவை பனம்பால்- தென்னம்பால் என்ற பெயரில் தமிழ்த் தேசிய மதுபானமாக அறிவிக்கப்படும். இதனால் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. என்றாலும் ஊருக்கு வெளியே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் பனம்பால், தென்னம்பால் கடைகள் வைக்கப்படும். நீர்வளத்தைக் கொள்ளையடிக்கும், மனித குலத்திற்குக் கேட்டை ஏற்படுத்தும் செயற்கையான சீமை மதுபான வகைகள் அனைத்தும் தடை செய்யப்படும்.

பனைப்பொருள் உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு:

பனங்கிழங்கில் இருந்து அல்வா, மிட்டாய் போன்ற இனிப்பு வகைகளையும் தயாரிக்கலாம். முக்கியமாகப் பனம்பழ நாரிலிருந்து உரங்களைத் தயாரிப்போம். பூரி, சப்பாத்தி மாவுகளை உற்பத்தி செய்வோம். இந்த மாவு பக்கவிளைவை ஏற்படுத்தாது. பல வெளிநாடுகளில் முக்கிய உயர் வகை உணவாக இருக்கிறது. இதன் உற்பத்தியைப் பெருக்குவோம். வெளிமாநிலங்களிலும், நாடுகளிலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த மாவு உணவை ஏற்றுமதி செய்வோம்.

  • பனைநாரில் இருந்தும் மட்டையில் இருந்தும் நார்க் கயிறு, கட்டில், நார்க்கொட்டான், விசிறி, ஓலைப் பாய், வீட்டிற்குக் கூரை, அழகுப் பொருட்கள் உட்பல அனைத்தும் உற்பத்தி செய்து அரசு விற்பனைக்கூடங்களில் வைக்கப்படும். ஏற்றுமதியும் செய்யப்படும்.
  • பனைவெல்லம், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட அனைத்தும் தயாரிக்கப்படும். சர்க்கரைக்கு மாற்றாக, நோயற்ற வாழ்வுக்காக மக்கள் இதைப் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
  • பனைப்பொருள் சார்ந்த தொழிற்சாலைகள் மாவட்டம் தோறும் நிறுவப்பட்டு, அதன் மூலம் அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புத் தரப்படும். பனங்கிழங்கில் இருந்து அல்வா, மிட்டாய் போன்ற இனிப்பு வகைகளையும் செய்யலாம்.

பயன் தரும் தென்னை:

தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீர், இளநீர் ஆகியவை உயர் வகைக் சுவைநீராகப் பயன்படுத்தப்படும். இரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாத முற்றிலும் இயற்கை வேளாண் முறையில் தென்னை வளர்க்கப்படும். விலை உயர்ந்த தென்னஞ் சர்க்கரை தயாரிக்கப்படும். தமிழகத்தின் பயன்பாட்டிற்குப் போக எஞ்சியவை வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். அயல் நாட்டின் குளிர்பானங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். இதற்கான வணிகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

  • தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் மட்டைகள், நார், ஆகியவற்றில் இருந்து கயிறு வகைகள், அழகுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் தயாரிக்கும் ‘சிற்றூர்ப் பரம்பரைத் தொழிற்கூடத்தை’ அந்தந்தப் பகுதியிலேயே தொடங்கி அதன் மூலம் வருமானத்தைப் பெருக்குவதை, வேலை வாய்ப்பை உருவாக்குவதைச் செயல்படுத்துவோம்.

மூங்கில் வளர்ப்பும் விற்பனையும்:

மூங்கில் காடுகளை உருவாக்குவதில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். சாத்தியப்படும் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் அதிகம் விளைவிக்க ஏற்பாடு செய்யப்படும். நாற்காலி, மெத்தை இருக்கைகள், நீள் இருக்கைகள் என வீடுகளில் பயன்படுத்தப்படும் நெகிழிப்பொருட்களுக்குப் பதிலாக மூங்கில் மூலமாக செய்யக்கூடிய நாற்காலி, ஊஞ்சல், அழகுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் செய்வதற்கானத் தொழிற்கூடங்கள், விற்பனை நிலையங்கள் ஆகியவை அரசு நிறுவனமாகவே இயங்கும். கைவினைத் தொழில் செய்வோர் அதில் ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

உணவே மருந்தாக மாற்றுவோம்:

நமது மக்களை அதிகம் பாதிக்கின்ற சர்க்கரை நோயின் விழுக்காடு இப்போது பத்துப் பேருக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் இருக்கிறது. ஏறத்தாழ  40,00,000 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 30,00,000 பேர் ஆரம்பக்கட்டச் சர்க்கரை நோயில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் நமது பரம்பரை நெல்வகை, தானிய உணவுகளை இழந்துவிட்டு நிற்பதுதான்.

  • சர்க்கரை நோய், இதயநோய் உள்ளிட்ட பல முக்கிய நோய்களைக் குணப்படுத்தக்கூடிய நமது பரம்பரை நெல்வகை உற்பத்தியை மீண்டும் வேளாண்மைக்குக் கொண்டு வருவதன் மூலம் மக்களுக்கு நோயற்ற வாழ்வுக்கு உறுதியளிப்போம்.

தமிழ்த் தேசியப் பயிரினங்கள்:

  • கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரை, வாலி, சோளம் உள்ளிட்ட சிறுதானிய வகைகள் தமிழ் தேசிய பயிரினங்களாக அறிவிக்கப்படும். இதற்கு நாம் தமிழர் அரசு உதவித்தொகை முழுதுமாக வழங்கி வேளாண்குடி மக்களை ஊக்கப்படுத்தும்.
  • சிறுதானிய உற்பத்தி வளர்ச்சிக்கென்று வேளாண் துறையில் தனிப் பிரிவு ஒன்றை மாவட்டங்கள் தோறும் அமைப்போம். அந்தத் தனிப்பிரிவு சிறுதானிய உற்பத்தியைப் பெருக்குவது மற்றும் அதை நியாய விலைக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மூலம் மக்களுக்கு வழங்குவது, உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்படாத வகையில் கவனித்துக்கொள்வது ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
  • மாவட்டம் தோறும் கீரை, மற்றும் காய்கறிகள், மா, பலா, வாழை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி சுமார் ஐந்நூறு ஏக்கரில் தனித் தனிப் பண்ணையாக அமைத்து இயற்கை உரங்களின் மூலம் விளைவிக்கப்படும். இதன் அருகிலேயே பழச்சாறு, குளிர் பானங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும். சொந்த நாட்டுத் தயாரிப்பு, தூய இரசாயனக் கலப்பில்லாமல் மக்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மக்களுக்கான நோயற்ற வாழ்வைக் கொடுக்க உறுதி அளிக்கின்றோம்.

மக்களிடமிருந்து நிலம் குத்தகை:

அரசு நிலங்கள் இல்லாத மாவட்டங்களில் தனியார்களிடம் முப்பதாண்டுக் குத்தகை ஒப்பந்த அடிப்படையில் நிலங்கள் பெறப்படும். அரசு கட்டாயப்படுத்தாது. விரும்பினால் கொடுக்கலாம். அதோடு அவர்கள் விரும்பினால் நிலத்தில் வேலை செய்யலாம். அதற்குண்டான ஊதியமும் வழங்கப்படும். வேலை செய்ய விருப்பம் இல்லை என்றாலும் விலகிக்கொள்ளலாம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குத்தகை புதுப்பிக்கப்படும்.

  • தமிழகத்தில் மஞ்சள், கரும்பு, வாழை உள்ளிட்ட பணப்பயிர் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. உணவுப்பயிர் விளைச்சல் குறைவாக இருக்கிறது. இது உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவுச் சுழற்சி முறையில் பாதிப்பை ஏற்படுத்தும். தவிர வேளாண்மை குடிமக்களும் இன்று இழப்படைந்தபடிதான் இருக்கிறார்கள். எனவே படிப்படியாகத் தேவைக்கேற்பப் பணப்பயிர் விளைச்சலைக் குறைத்து உணவுப்பயிர் உற்பத்தியைப் பெருக்கி, இழப்படையாத சீரமைப்பைச் செய்வோம்.
  • தமிழக வேளாண் பல்கலைக் கழகங்களில் இயற்கை வழிப் பரம்பரை வேளாண் கல்வி முறைக்கும் ஆய்வுகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
  • இயற்கைவழி- பரம்பரை வேளாண் முறையில் ஈடுபடும் தன்னார்வலர்களின் செயல்பாட்டிற்கு அரசு ஆதரவு கொடுக்கப்படும்.

உடனடியான மீட்புத் திட்டங்கள்:

வேளாண் தொழிலில் ஈடுபடுவோர்க்குப் போதிய- நிலையான வருவாய் இருப்பதில்லை. அதனால்தான் மாற்று வேலைதேடிச் செல்கிறார்கள். இந்த நிலையை மாற்றி வேளாண் தொழிலில் நிலையான வருவாயை ஈட்டுவதற்கான திட்டங்களை நாம் தமிழர் அரசு செயல்படுத்தும். அதன் மூலம் வேளாண் தொழிலை விட்டு வெளியேறிய அனைவரும் மீண்டும் அந்தத் தொழிலுக்கே திரும்பும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம்.

  • வேளாண் பொருட்கள் அதிக உற்பத்தியாகும் காலகட்டத்தில் விலைச் சரிவு ஏற்படுகிறது. இதனால் உழவர்கள் உருவாக்கச் செலவைவிடக் குறைந்த விலைக்கே பொருட்களை விற்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது. அவர்களுக்கான முழு உற்பத்திச் செலவையும் ஈடுகட்டும் விதமான விலையை நிர்ணயிக்கும் அல்லது அந்தத் தொகையை அரசே உழவர்களுக்கு வழங்கும்.

மாவட்டம் தோறும் தானியக் கிடங்கு:

தக்காளி, பூ, வெங்காயம், காய் கனிகள் போன்ற எளிதில் அழுகி விடக்கூடிய பொருட்களால் வேளாண்குடி மக்கள் பெரிதும் இழப்படைந்து வருகிறார்கள். இதைத் தவிர்க்கும் பொருட்டு மாவட்டம் தோறும் தேவைக்கேற்ற குளிரூட்டி நிலையங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். கூடவே தானியக் கிடங்குகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதனால் வேளாண்குடி மக்கள் இழப்படையாத நிலையை உருவாக்குவோம்.

  • தற்போது தமிழகத்தில் ஆண்டிற்கு 1,70,000 டன் பூச்சிக்கொல்லி, உர மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தூவப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள்- உரம் போன்ற சுமார் 85 இலட்சம் டன் எடை கொண்ட இரசாயனங்கள் கொட்டப்பட்டு நம் மண்வளத்தைச் சீரழித்துவிட்டார்கள். இதிலிருந்து மண்ணையும் வேளாண் குடிமக்களையும் மீட்க அதற்கு ஈடான இயற்கை உரங்களைத் தயாரிக்கும் பண்ணைகள் அமைக்கப்படும். மண்வளமும் மக்கள் நலமும் காக்கப்படும்.

நிவாரணத் தொகை உயர்த்தப்படும்:

வேளாண் விளைபொருட்கள் புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கைச் சீரழிவில்’ சிக்கிப் பாதிப்படையும்போது அரசு தோராயமாக ஒரு தொகை நிவாரணத்தை வழங்கி வருகிறது. நாம் தமிழர் அரசு அந்த உழவர்களுக்கு முந்தைய ஆண்டு என்ன வருவாயை ஈட்டினார்களோ அதே அளவிலான தொகையை நிவாரண நிதியாக அளிக்கும்.

  • பண்ணைத் தொழில் மற்றும் கால்நடை வளர்த்தல் உள்ளிட்ட அனைத்து வேளாண் பணிகளும் கணினிக் கட்டுப்பாட்டுடன் மேம்படுத்தப்படும்.
  • வேளாண் தொழிலைச் சார்ந்த அனைவரும் வருடத்தில் சில மாதங்கள் வேலையற்று இருக்கும் நிலை ஏற்படுகிறது. அந்தக் காலகட்டங்களில் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

வேளாண் பெருங்குடி மக்களே விலையை உறுதிப்படுத்தலாம்:

ஒரு மனிதனுக்கு மது, புகையிலை அத்தியாவசியம் இல்லை. அவை இல்லாது மனிதன் உயிர்வாழ முடியும். ஆனால் உணவு மக்களுக்கு அத்தியாவசியமானது. உணவில்லாது மனிதன் உயிர் வாழவே முடியாது.

  • மது புகையிலையை உற்பத்தி செய்பவர்கள் எல்லாம் இங்கு வசதியாகச் செல்வச் செழிப்போடு வாழ்கிறார்கள். ஆனால் உணவை உற்பத்தி செய்கின்ற வேளாண் பெருங்குடி மக்கள் வறுமையிலும் ஏழ்மையிலும் உழலுகிறார்கள்.
  • இதற்குக் காரணம் குண்டூசி முதல் ஏவுகணை வரை எல்லாவற்றையும் உற்பத்தி செய்பவர்களே விலையை நிர்ணயம் செய்ய முடிகிறது. ஆனால் வேளாண் பெருங்குடி மக்கள் மட்டும் விளைவிக்கின்ற பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. அந்த நிலையை மாற்றி உழவர்களே உணவுப் பொருட்களுக்கான விலையைத் தீர்மானிக்கின்ற உரிமையை நாம் தமிழர் அரசு அளிக்கும்.

உயர்ந்த மருத்துவச் சேவை:

வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனைத்து வகை மருத்துவங்களும் கட்டணமில்லாமல் வழங்கும் முறையில் காப்பீட்டுத் திட்டங்களை வழங்கும். ஆண்டு தோறும் தவறாமல் முழு உடல் பரிசோதனை முறையைக் கொண்டுவரும்.

  • மாநில வேளாண்மை வருவாய் ஆணையத்தை அமர்த்தி உழவர்களுக்கான குறைந்தபட்ச வருவாய்யை உறுதி படுத்தத் தக்க முறை செயல்படுத்தப்படும்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை – தமிழ்மறை 1031

ஆயிரம் தொழில்களின் பின் அலைந்து திரிந்தாலும் கடைசியில் உலகம் ஏர் – கலப்பையின் பின்னால்தான் போகும். என்னதான் துயரம் வந்தாலும் உழவுத் தொழில்தான் உயர்ந்ததாக இருக்கும் என்று உழவின் பெருமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிச்சென்றார் திருவள்ளுவர். அத்தகு உழவுத் தொழிலை விட்டு இன்று நாம் பலரும் வெளியேறிக்கொண்டிருக்கின்றோம்.

ஒருங்கிணைந்த பண்ணைகள்:

  • மாட்டுத் தீவனப் புல். தேனீப் பண்ணை, மாட்டுப் பண்ணை, சாண எரிகாற்று, காய்கறிப் பண்ணை, வாழைத் தோப்பு இவையெல்லாம் ஒருங்கிணைக்கப்பட்ட பண்ணைகள் உருவாக்கப்படும். இந்த ஒரு பண்ணையில் இருந்தும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வேளாண் முறை உருவாக்கப்படும்.

புங்கை எண்ணெய்:

  • புங்கை மர விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உழவு இயந்திரங்களில் எரி எண்ணெய்க்கு (டீசல்) மாற்றாகப் பயன்படுத்தபடும். புங்கை எண்ணெய் தயாரிப்பதற்கான ஆலைகள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும்.

கருப்பட்டி:

  • பதநீரிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கிலோ கருப்பட்டி 180 ரூபாய். ஆனால் பனங்கள்ளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கிலோ கருப்பட்டி 400 ரூபாய். எனவே மருத்துவ குணம் கொண்ட ‘பனங்கருப்பட்டி’ தயாரிக்க ஆலைகள் அமைக்கப்படும்

வேளாண் பல்கலைக்கழகம்:

  • இளங்கலை இயற்கை வேளாண், முதுகலை இயற்கை வேளாண், ஆராய்ச்சி மேற்படிப்பு உள்ளிட்ட அனைத்து வேளாண் கல்வியியலும் பயிற்றுவிக்க வேளாண் பெருங்குடியோன் அப்பா கோ. நம்மாழ்வார் பெயரில் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் தொடங்கப்படும்.

கடன் தள்ளுபடி:

  • இதுவரை வேளாண் பெருங்குடி மக்கள் பெற்ற அனைத்துக் கடன்களும் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.

சணல் நார்ச் செடி (INDUSTRIAL HEMP):

சணல் நார்ச்செடியின் 50000க்கும் மேற்பட்ட பயன்பாடுகளில் சில,

  • வாகனங்களின் உதிரிப் பாகங்கள், மகிழுந்துகளின் பாகங்கள், நெகிழிப் பொருட்களுக்கு மாற்றான அனைத்துப் பொருட்கள். குடிநீர்ப் போத்தல்கள் முதல் மிகப்பெரும் கொள்கலன்கள் வரையிலும் தயாரிக்கலாம்.
  • உயர்வகை ஆயத்த ஆடைகளைத் தயாரிக்கலாம்.
  • செடியின் விதைகள் புரதச்சத்து மிகுதியானது. பல வெளிநாடுகளில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவாகத் தயாரிக்கப்படுகிறது.
  • விதைகளின் எண்ணெய், புற்றுநோய் உட்பட 400க்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது.
  • வழலை(சோப்பு), சீய்நெய்(சாம்பு) சமையல் எண்யெய், வண்ணப்பூச்சு, உணவு- இன்சுவை கட்டிகள், உள்ளிட்ட பொருட்களைத் தயாரிக்கலாம்.
  • முழுதுமான ஒரு வீட்டைச் சணல் நார் செடிகள் மூலம் தயாரிக்கப்படும் கலவையில் கட்டிக்கொள்ளலாம்.
  • பெட்ரோல். டீசலுக்கு மாற்றான எரிபொருளைத் தயாரிக்கலாம்.
  • சணல் நார்ச் செடிகளைக் கொண்டே காகிதங்களைத் தயாரிக்கலாம். இதன் மூலம் காடுகளைப் பாதுகாக்கலாம்.
முந்தைய செய்திஇயற்கை வேளாண்மை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 
அடுத்த செய்திகாணொளி பிரச்சாரம் துவக்கம்-வேலூர் சட்ட மன்ற தொகுதி