தேவர் ஜெயந்திக்கு 144 தடையுத்தரவு தேவையற்ற நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி கண்டனம்

119

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, தனது வாழ்நாளில் கால் பங்கு நாட்களை சிறையில் கழித்த மாபெரும் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூசை ஒவ்வொரு ஆண்டும் போல இந்த ஆண்டும் வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறி வாழ்ந்த அந்த பெரும் தலைவரை தெய்வமாக நினைத்து போற்றிவரும் தென்னாட்டு மக்கள், ஒவ்வொரு ஆண்டும் அவரின் ஜெயந்தி தினத்தன்று பல்லாயிரக்கணக்கில் கூடி, தங்கள் நன்றியையும், அன்பையும் அஞ்சலியாக செலுத்தி வருகின்றனர்.

இந்நாட்டின் விடுதலை வரலாற்றில் இந்த அளவிற்கொரு உன்னத இடத்தைப் பெற்றுள்ள அந்தத் தலைவரின் ஜெயந்தி நிகழ்விற்கு வரக்கூடிய மக்களை ஒவ்வொரு ஆண்டும் முறையாக ஒழுங்குபடுத்தி வந்த காவல் துறை, கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டு 144 தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. சாதி, மதம், கட்சிக் கலவரங்கள் நடந்தால், அது மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்கும் பொருட்டு, 4 பேருக்கு மேல் பொதுவிடத்தில் கூடக்கூடாது என்கிற கட்டுப்பாட்டை விதிக்கும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால், தங்களின் மரியாதைக்குரிய தலைவருக்கு அன்போடு அஞ்சலி செலுத்த வரும் மக்களை ஏதோ அங்கு கலவரம் நிகழப்போவதுபோலவும், அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுபோல் 144 உத்தரவை இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இது தேவர் ஜெயந்திக்கு வரும் மக்களை அச்சுறுத்தும் அவமானப்படுத்தும் நடவடிக்கையாகும்.

தேவர் ஜெயந்தியன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்த வருகிறார்களா? அல்லது கலவரம் செய்ய வருகிறார்களா? எந்த அடிப்படையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது? என்று கேட்கிறோம். 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவதையே காவல் துறை தடை செய்ய வேண்டுமே? அப்படி ஏதாவது திட்டத்தை வைத்திருக்கிறதா தமிழக காவல் துறை? தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி, அவர்களை ஒழுங்குபடுத்தி, அவர்கள் அனைவரும் தங்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டியதானே காவல் துறையின் கடமை? அதுதானே இந்த நாட்டின் விடுதலைக்கு தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அளித்த அந்த மாபெரும் தலைவருக்கு தமிழக அரசு காட்டும் உண்மையான மரியாதை? அதை செய்யாமல், பெரும் திரளாக வரப்போகும் மக்களை, ஏதோ கலவர அபாயம் காத்துக்கொண்டிருப்பதுபோல், தடையுத்தரவு பிறப்பித்து அச்சுறுத்துவது ஏன்?

இதுமட்டுமின்றி, தேவர் ஜெயந்திக்கு வரும் மக்கள் எவரும் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருப்பதும் கண்டனத்திற்குரியது. தென்னாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வரக்கூடிய மக்கள் ஒன்று கூடி, வாடகை வாகனங்களில்தான் பெருமளவிற்கு வருகின்றனர். அவர்கள் வர வேண்டிய பாதையை – பாதுகாப்புக் காரணங்களை கருத்தில் கொண்டு – காவல் துறை நிர்ணயிக்கலாம், அப்படித்தான் இத்தனையாண்டுகளாக செய்தும் வந்தது. அதையே இப்போதும் கடைபிடிக்காமல் இப்படியொரு அடக்குமுறை உத்தரவை பிறப்பித்து, அந்த மக்களை சிறுமைபடுத்துவது ஏன்?

இதேபோன்று, வெள்ளைய ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் விடுதலை வீரர் பூலித் தேவர் நினைவு நாளன்றும் 144 தடையுத்தரவு பிறப்பித்தது காவல் துறை. பூலித் தேவருக்குப் பின்னால் வெள்ளையரை எதிர்த்து வீரத்துடன் போரிட்ட மாவீரர்களான மருது சகோதரர்கள் நினைவு நாளிலும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்து, அஞ்சலி செலுத்த வரும் மக்களை ஒழுங்கு செய்கிறோம் என்று ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது தமிழக காவல் துறை. இன்றைய ஆட்சியாளர்களும், இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களும், கட்சித் தலைவர்களும் தவறாமல் தேவர் ஜெயந்தியன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செய்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால் அவர் மீது பேரன்பும், மரியாதையும் கொண்டுள்ள தென்னாட்டு மக்களை ஏதாவது ஒரு வகையில் அவமானப்படுத்துகின்றனர். இதனை எவ்வாறு சகித்துக்கொள்வது?

எனவே தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் உடனடியாக தலையிட்டு, 144 தடையுத்தரவை திரும்பப் பெறுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. தனது பரம்பரை சொத்தாக இருந்த 18 கிராமங்களை, அவைகளில் வாழ்ந்த மக்களுக்கு எழுதி வைத்துவிட்டு, தூயதொரு முன்னுரனமாக வாழ்ந்து மறைந்த அந்த மாபெரும் விடுதலைப் போராட்டத் தலைவருக்கு உண்மையில் மரியாதை செய்வதாக தமிழக அரசு நினைத்தால் 144 தடையுத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திநெல்லையில் கொட்டும் மழையில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.
அடுத்த செய்திதமிழனை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி