திருமுருகப் பெருவிழா 2020 – தீர்மானங்கள்

213

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக முப்பாட்டன் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சாமிமலையில் இன்று 09-02-2020 நடைபெற்று வரும் திருமுருகப்பெருவிழாவில் இயற்றப்பட்ட  தீர்மானங்கள்:

1.       தமிழர்களின் தலை நிலமான குறிஞ்சித் திணையின் தலைவன் தமிழர் இறைவன் முப்பாட்டன் முருகனைப் போற்றித் தொழும் ‘தைப்பூசத் திருநாளை’ விடுமுறை நாளாக அறிவிக்கக்கோரி நீண்ட நெடுங்காலமாக நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி அறப்போராட்டமும், கருத்தியல் பரப்புரையும் செய்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 06-02-20 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களைச் சந்தித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  மனு கொடுத்திருந்த நிலையில், அரசுத்தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வராதது தமிழ்த்தேசிய இன மக்களின் கோரிக்கையைப் புறந்தள்ளுவதாக இருக்கிறது. இக்கோரிக்கையை தமிழக அரசு இனியும் ஏற்க மறுத்தால், வீரத்தமிழர் முன்னணி சட்டப்போராட்டம் நிகழ்த்தி அதனை வென்றுமுடிக்கும் என இந்நாளில் பேரறிவிப்பு செய்யப்படுகிறது.

2.       தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவினைத் தமிழிலேயே நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னிறுத்தி, உயர்நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்திய வீரத்தமிழர் முன்னணி அக்கோரிக்கையில் முதற்கட்ட வெற்றியைப் பெற்று, 800 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவுடையார் கோயிலின் கோபுரத்தில் தமிழை ஏற்றியது தமிழர் மெய்யியல் மீட்சியின் வரலாற்றுப் பெரும் நிகழ்வாகும். தமிழர் பண்பாட்டுப்புரட்சிக்காக உருவாக்கப்பட்ட வீரத்தமிழர் முன்னணியின் வேர்தேடும் பயணத்தில் இதுவொரு மகத்தான சாதனையாகும். இதற்காக உழைத்திட்ட அத்தனைப் பேருக்கும் வீரத்தமிழர் முன்னணி தனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது!

3.    திருநெல்வேலி மாவட்டம், குறிஞ்சாங்குளத்திலுள்ள அன்னை காந்தாரி அம்மனுக்குக் கோயில் அமைக்கக்கோரி வீரத்தமிழர் முன்னணி தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கும், இந்துசமய அறநிலையத்துறைக்கும் மனு கொடுத்து ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேலாகியும் எவ்விதப் பதிலும் தராத தமிழக அரசையும், காந்தாரி அம்மன் சிலையைக் கைப்பற்றி வழிப்பாட்டுக்கு அதனைத் தர மறுக்கும் அரசு அதிகாரிகளின் செயல்பாட்டினையும் வீரத்தமிழர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழர்களின் மூதாதையாக இருக்கிற காந்தாரி அம்மனை வழிபடுவதற்கும், கோயிலைக் கட்டியெழுப்புவதற்கும் இருக்கிற தடைகள் யாவற்றையும் முறியடித்து சட்டப்போராட்டத்தின் மூலமும், அறப்போராட்டத்தின் மூலமும் அக்கோயிலைக் கட்டியெழுப்ப வீரத்தமிழர் முன்னணி இத்தருணத்தில் உறுதியேற்கிறது.

4.       தேனி மாவட்டம், கீழக்கூடலூர் அருகே அமைந்துள்ள தமிழ்ப்பெரும் மூதாதை கண்ணகி பெருமாட்டியின் கோயிலுக்குத் தமிழகத்தின் வழியாக செல்வதற்கான வழி காலஞ்சென்ற வரலாற்றாசிரியர் சி.கோவிந்தராசனாரால் கண்டறியப்பட்டு அக்கோயில் உலகுக்கு அடையாளம் காணப்பட்டது. தமிழகத்தின் வனப்பகுதி வழியாக அக்கோயிலைச் சென்றடைவதற்கான போக்குவரத்து வசதிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் தொடங்குவதற்குத் திட்டம் தீட்டப்பட்டு, அது செயற்படுத்தப்படாமலே கைவிடப்பட்டது. அதனை மீண்டும் தொடங்கி கண்ணகி கோயிலுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், சித்திரைப் பெளணர்மி அன்று மட்டும் அல்லாது ஆண்டின் எல்லா நாட்களிலும் கண்ணகி பெருமாட்டியை வழிபாடு செய்ய வழிவகை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வீரத்தமிழர் முன்னணி வலியுறுத்துகிறது.

5.       கடற்பல கடந்து களம்பல செலுத்தி படைபல வென்று உலகின் இரண்டாவது பெரும் வல்லரசை நிறுவிக் காட்டிய தமிழ்ப்பேரரசன் அருண்மொழிச்சோழன் நினைவிடம் கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூரில் கேட்பாரற்றுக் கிடப்பது தமிழ்ப்பேரினத்திற்கு ஏற்பட்டப் பெருந்துயரமாகும். அந்நிலையை மாற்றி உடையாளூரில் அருண்மொழிச்சோழனுக்கு மணிமண்டபமும், நினைவுத்தூணும் கட்டியெழுப்ப வேண்டும் எனத் தமிழக அரசை வீரத்தமிழர் முன்னணி வலியுறுத்துகிறது. அதனை செய்ய மறுத்தால், உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பேராதாரவோடு வீரத்தமிழர் முன்னணி அதனை செய்து முடிக்கும் என இத்தருணத்தில் பேரறிவிப்பு செய்யப்படுகிறது.

6.       நாடு முழுமைக்கும் வாழும் இசுலாமியர்களை அச்சுறுத்தித் தனிமைப்படுத்தும் நோக்கோடு மத்தியில் ஆளும் பாஜக அரசால் கொண்டு வரப்பட்டிருக்கிற குடியுரிமைச் சட்டத்திருத்தத்தையும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டையும், தேசிய மக்கள்தொகை பதிவையும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி வன்மையாக எதிர்க்கிறது. இந்நாட்டின் பூர்வக்குடிகளை மதத்தின் பெயரால் பிளவுப்படுத்தத் துடிக்கும் இந்துத்துவாவின் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கருத்தியல்ரீதியாகவும், களப்போராட்டத்தின் வாயிலாகவும் வீரத்தமிழர் முன்னணி வீழ்த்தி முடிக்கும் எனவும், இசுலாமிய மார்க்கத்தை ஏற்று வாழும் உறவுகளுக்கு உற்ற துணையாகவும், பாதுகாப்புப் பேராயுதமாகவும் வீரத்தமிழர் முன்னணி இறுதிவரை துணை நிற்கும் எனவும் இத்தருணத்தில் பேரறிவிப்பு செய்யப்படுகிறது.

7.       தமிழர் மெய்யியல் என்பது நன்றி நவிழ்தல் தொடங்கி நடுகல் வழிபாடு வழியாக ஆசீவகம், சைவம், மாலியம், வைணவம், வள்ளலார் தொடங்கிய சமரச சுத்தச் சன்மார்க்கம், வைகுந்தர் தோற்றுவித்த ஐயாவழி எனக் கிளைத்தப் பல்வேறு தமிழர் சமயங்களையும், மெய்யியல் கூறுகளையும் திருடித் தன்வயப்படுத்தி ‘இந்து’ எனும் பார்ப்பனீயப்பெயரில் ஒருமுகப்படுத்தி ஒற்றைமயப்படுத்துவது தமிழர் அடையாளங்களையும், இன வரலாற்றையும் அழித்து கபளீகரம் செய்யும் கொடுஞ்செயலாகும். அதனை வீரத்தமிழர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என உலகுக்குப் பறைசாற்றும் விதமாகவும், திருடப்பட்ட தமிழர் தொன்ம அடையாளங்களையும், சமயங்களையும் மீட்கும்விதமாகவும் ‘மீண்டெழும் தமிழர் சமயங்கள்’ எனும் மெய்யியல் மீட்பு மாநாட்டை கன்னியாகுமரியில் வீரத்தமிழர் முன்னணி விரைவில் நடத்தும் என்று இத்தருணத்தில் பேரறிவிப்பு செய்யப்படுகிறது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருநெல்வேலி மாவட்டம்
அடுத்த செய்திபுலிகளுடன் தொடர்பு எனக்கூறி மலேசியாவில் தமிழர்களைக் கைதுசெய்து மூன்று மாதத்திற்கு மேலாகியும் விடுவிக்க மறுப்பதா? – சீமான் கண்டனம்