தினம் ஒரு சிந்தனை – 75 | செந்தமிழன் சீமான்

64

தினம் ஒரு சிந்தனை – 75 | செந்தமிழன் சீமான்

அவர்களைச் சிறையில்
சந்தித்தேன்.

“என்ன குற்றம் செய்தீர்கள்”
என்று கேட்டேன்

ஒவ்வொருவராகச்
சொன்னார்கள்…

எங்கள் வீட்டில்
திருடிக்கொண்டு ஒருவன் ஓடினான்.
“திருடன் திருடன்” என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக்
கைது செய்து விட்டார்கள்.

“நான் கரிமூட்டை தூக்கும் கூலி”
கூலியாகக் கிடைத்த ரூபாய் நோட்டு
கரி பட்டுக் கருப்பாகிவிட்டது.
“கருப்பு பணம்” வைத்திருந்ததாகக்
கைது செய்துவிட்டார்கள்.

என் வயலுக்கு வரப்பெடுத்துக் கொண்டிருந்தேன்
“பிரிவினைவாதி” என்று
பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்

“அதிகாரி இலஞ்சம் வாங்கினான்” தடுத்தேன்.
அரசுப்பணியாளரை அவரது “கடமை”
செய்யவிடாமல் தடுத்தாகத் தண்டித்துவிட்டார்கள்

“வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று பேசினேன்.
அரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக
அடைத்துப்போட்டு விட்டார்கள்.

“ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்”
என்று எழுதினேன், “கடத்தல்காரன்” என்று
கைது செய்துவிட்டார்கள்

“அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச்
சொன்னான் கண்ணன்” என்று யாரோ கதா
காலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

என் பெயர் கண்ணன் “பயங்கரவாதி” என்று
என்னைப் பிடித்துக்கொண்டு வந்துவிட்டார்கள்

– கவிக்கோ அப்துல் ரகுமான்

முந்தைய செய்திஏன் இப்படிச் செய்தாய் முத்து? – செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – ஆவடி 19-08-2016