தினகரன் கைதுக்குப் பின்னால் இருக்கும் மோடி அரசின் அதிகார அத்துமீறலைத் தோலுரிப்போம் : சீமான்

20

தினகரன் கைதுக்குப் பின்னால் இருக்கும் மோடி அரசின் அதிகார அத்துமீறலைத் தோலுரிப்போம் : சீமான்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (29-04-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக இடைத்தரகர் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு கையூட்டு கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காக டெல்லி காவல்துறையினரால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் இரவுபகலாக விசாரிப்பதாக செய்திகள் வெளியாகிறது. கையூட்டு மற்றும் ஊழலில் ஈடுபடுவோர் எவராயினும் அவர்களைக் கண்டறிந்து கைதுசெய்ய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை; அதேநேரத்தில், சுகேசு சந்திரசேகர் என்கிற இடைத்தரகரின் வாக்குமூலத்தை மட்டுமே வைத்து தினகரனை குற்றவாளியாக்க முனையும் தில்லி காவல்துறையின் அசாதாரண விசாரணை நடவடிக்கைகள் நமக்கு ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. அண்மைக்காலமாக தமிழக அரசியலில் நிகழும் பரபரப்பில் இருக்கும் மத்திய அரசின் எதேச்சியதிகார தலையீடுகளும், மிரட்டல் தொனியிலான விசாரணைகளும், இந்த வழக்கின் பின்னால் இருக்கிற திட்டமிட்ட அரசியல் சதிகளை அம்பலப்படுத்துவதாக உள்ளது. கடந்த காலங்களின் தில்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சர்களுக்கு நெருக்கடி கொடுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை இந்த வழக்கின் மூலமாக மாநிலக்கட்சிகளின் மீதான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுகிறதோ என எண்ணத்தோன்றுகிறது.
ஐம்பதிற்கும் மேலான வழக்குகளில் சிக்கியிருக்கும் ஒரு ஏமாற்று பேர்வழியின் வாக்குமூலத்தை மட்டுமே ஆதாரமாய் வைத்துக்கொண்டு, தினகரனைக் கைது செய்துள்ள தில்லி காவல்துறை, தினகரன் யாரிடம் கையூட்டு கொடுக்க முற்பட்டார்? யார் கையூட்டுத்தொகையை முடிவு செய்தார்? எங்கு வைத்து பேரம் பேசப்பட்டது? போன்ற இவ்வழக்கின் அடிப்படைக் கேள்விகளுக்கான ஆதாரங்களை இன்னும் வெளியிடாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கையூட்டு கொடுக்க முயன்றதாக தினகரனையும், அவருக்கு இடைத்தரகராக இருந்ததற்காக சுகேஷ் சந்திரசேகரையும் கைது செய்த தில்லி காவல்துறையினர், கையூட்டு பெற இருந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் குறித்து எந்த தகவல்களையும் தெரிவிக்காததும், கையூட்டு பெற இருந்த அதிகாரிகளை இன்னும் கைது செய்யாததும், தினகரனுக்கும், இடைத்தரகருக்குமான தொலைபேசி உரையாடல்களை வெளியிடாததும் இவை அணைத்தும் புனையப்பட்டவைதானோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. தினகரன் மீதான இவ்வழக்கில் கையூட்டு பெறுவதாக ஒத்துக்கொண்ட அதிகாரி யார்? இடைத்தரகருக்கும், தினகரனுக்குமான தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தவர்கள் யார்? போன்ற எந்தக் கேள்விகளுக்கும் தில்லி காவல்துறையிடம் பதிலில்லை. எந்த வெளிப்படைத்தன்மையுமற்ற இதுபோன்ற வழக்குகள் மூலம் மன உளைச்சலைக் கொடுத்து, தனக்கு வளைந்து கொடுக்காத மாநிலக் கட்சிகளையும், அதன் ஆட்சியாளர்களையும் பணியவைக்கவே இந்தியாவை ஆண்ட மத்திய அரசுகள், டில்லி காவல்துறையையும், மத்திய புலனாய்வுப்பிரிவையும் பயன்படுத்தி வந்திருக்கிறது என்பது சமகாலம் உணர்த்தும் உண்மை! வழக்கின் விசாரணை வளையம் முழுமையடையாமலும், விசாரணையின் போக்கு வெளிப்படைத்தன்மையில்லாமலும் இருப்பதன் மூலம் அதன் நீட்சியாகவே இவ்வழக்கையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
தில்லியில் நஜிப் ஜங்கையும், புதுச்சேரியில் கிரண்பேடியையும் ஆளுநராக நியமித்து ஆட்சியில் குழப்பம் விளைவித்தது போல, தற்போது தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிக்காது குழப்பத்தை ஏற்படுத்தி தனது சித்துவிளையாட்டுகளை அரங்கேற்றி வருகிறது ஆளும் மோடி அரசு. அனுதினமும் தமிழக அரசியலில் என்ன மாற்றம் நடக்குமென பாஜக தலைவர்கள் சொல்லி வருகிற் ஆருடங்கள் அச்சுப்பிசகாமல் பலித்து வருவதும்,பொதுப்பணித்துறையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய திட்டங்களை முறைகேடாக ஏலம் பெற்ற சேகர் ரெட்டி மீதும், அன்றைய தமிழகத் தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் மீதும் விசாரணை செய்த வருமானவரித்துறையினர் அன்றைய அமைச்சரவை மீதும் தனது விசாரணையை நீளச்செய்யாமல் சுருக்கிக்கொண்டதும், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இருபெரும் கட்சிகளுமே பணத்தைவாரி இறைத்து வாக்குவேட்டையில் ஈடுபட முயன்றது அப்பட்டமாகத் தெரிந்தும் வருமான வரித்துறையின் கரங்கள் அதிமுகவின் அம்மா அணியினரை சுற்றியே இருப்பதுமான நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகவே இருக்கின்றது. பாஜகவின் தலைவர்களான ரெட்டி சகோதரர்கள் சுரங்க ஊழலில் அடித்த கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையைக் குறித்து விசாரிக்க ஆர்வம் காட்டாத மத்திய அரசு, தினகரன் கையூட்டு கொடுத்த வழக்கில் கொண்டிருக்கிற அதீதப்பேரார்வம் பாஜகவின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்துவதாகவே உள்ளது. ஊடகங்களுக்கு தினந்தோறும் தினகரன் குறித்த செய்திகளை தந்து பரபரப்பூட்டுவதில் ஆர்வமாக இருக்கிற பாஜக அரசு, நாட்டில் நிலவும் இதரப்பிரச்சனைகள் குறித்து எவ்விதக் கவனமும் காட்டாமல் மெளனித்திருப்பது இப்பிரச்சனையை தவிர வேறு எந்தப் பிரச்சினையும் தமிழகத்தில் இல்லை என்றதொரு தோற்றத்தை உருவாக்க முனைகிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
எந்திர வாக்குப்பதிவு முறையைக் கொண்டு மூலதனமாகக் கொண்டு உத்திரபிரதேசத்தேர்தலில் தாம் பெற்ற வெற்றியைப் போல தமிழகத்திலும் காலூன்ற முனையும் பாஜக, அதிமுகவில் நிகழும் உட்கட்சி குழப்பங்களையும், ஆளுமை செலுத்த ஆளில்லாது காலியாக நிற்கும் அதிமுகவின் தலைமைப்பீடத்தையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சகல விதமான அதிகாரங்கள் மூலம் காவி ஆட்சியை நிறுவ முயல்கிறது. அதற்கான தொடக்கப்புள்ளியாகவே இந்த கைது நடவடிக்கையும் அதனைத்தொடர்ந்த விசாரணை என்ற தோற்றத்திலான அலைக்கழிப்புகளுமாகும். கடந்தகாலங்களில் அருணாச்சலப்பிரதேசம், பீகார் போன்ற பிற மாநிலங்களில் இதே கொல்லைப்புற வழி அரசியல் பிரவேசத்தை மேற்கொண்ட மோடி – அமித்ஷா கூட்டணி தமிழகத்திலும் அத்தகைய சதிவேலைகளை நிறைவேற்ற இந்த கைதின் மூலம் முயற்சிக்கிறது. அப்பகல்கனவு ஒருபோதும் தமிழ்மண்ணில் பலிக்காது என்பதே தமிழர்களின் முரசறிவிப்பாகும். தந்திரமாக கொல்லைப்புறம் வழியாக நுழைந்து திண்ணையைத்திருடுகிற வேலை தமிழர் மண்ணில் நடந்தேற மானத்தமிழ் இளையோர் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது உறுதி. பெருந்தலைவர் காமராசர், பேராசான் ஜீவா, நேர்மையாளர் கக்கன் போன்ற தலைவர்கள் ஆளுமை செலுத்திய தமிழக அரசியல் சூழலை தினகரன் கைது நிகழ்வுகளை பெரிதுப்படுத்திக் காட்டி தமிழக அரசியல் குறித்தானப் பிம்பங்களை சிதைத்து, அதனை அவமானகரமானதாகச் சித்தரித்து தந்திரமாக தன் போக்கிற்கு எழுதுகிற வேலையை பாஜக அரசு செய்து வருகிறது.
சனநாயகத்தின் உயிர்நாடியாகத் திகழ்கிற இந்திய அரசியல் அமைப்பின் அடித்தளத்தால் கட்டப்பட்டது வாக்கரசியல் முறை. 1950ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கரால் இயற்றப்பட்ட இந்திய அரசியல் யாப்பின் அடிப்படை கொள்கைகளாக ஒற்றுமையும், ஒருமைப்பாடும், மதச்சார்பின்மையுமே இருந்தது. பல்வேறு தேசிய இனங்கள் வாழும் இந்தியாவில் சனநாயகத்தன்மையை பேணிக்காக்க கூட்டாட்சி கொள்கையே முதன்மையானது. மத்திய அரசு மாநிலக்கட்சிகளின் மீதான காழ்ப்புணர்ச்சியையும், அம்மாநிலங்களில் காலூன்ற முடியா ஆற்றாமையையும் இதுபோன்ற வழக்குகளால் வழிக்குகொண்டுவர முடியும் என்று நம்புகிறதோ என எண்ணத்தோண்றுகிறது. நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற அமைப்பாகவும், தன்னிச்சையாக இயங்குவதாக மக்களால் நம்பப்படுவதுமான அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு கையூட்டு கொடுக்க முயன்றதாகத் தினகரன் கைதுசெய்வதில்காட்டுகிற அவசரத்தையும், ஏற்படுத்துகிற ஊடகப் பரபரப்புகளையும் சிந்திக்கிறபோது தவறுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு உலவுகிற பாஜகவின் தந்திர அரசியல் புரிகிறது.
மத்திய அரசின் பழிவாங்கும் எதேச்சியதிகார நடவடிக்கையால் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் தினகரனுக்கும் நேர்ந்த இந்த நிலையானது, நாளை எவருக்கும் நேரிடும் என்பதை அனைத்து சனநாயக சக்திகளும் உணரவேண்டும்.தினகரனுக்கு நேர்ந்த இந்நிலை நாளைக்கே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், தமிழக முதல்வர்எடப்பாடி பழனிச்சாமிக்கும்கூட நேரலாம். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவானது, அதிமுகவில் நடக்கும் குழப்பங்களை தூரநின்று ரசிக்காமல், நியாயத்தின்படி நின்று மத்திய அரசின் அதிகாரமீறலை கண்டிக்கவேண்டும். இல்லையேல், இன்றைக்கு அதிமுகவில் நிகழும் இக்குழப்பங்கள் நாளை திமுகவிலும் நிகழும் என்பதே நிதர்சனம். இத்தகைய சூழலில், தமிழர் நலனில் அக்கறைகொண்ட அனைத்து இயக்கங்களும் மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையை கண்டிக்க முன்வரவேண்டும் எனவும், மோடி தலைமையிலான மத்திய அரசானது இவ்வழக்கின் மூலம் அரசியல் ஆதாயம் தேடமுயலுவதை விடுத்து வழக்கின் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும்எனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திவறட்சியினால் இறக்கவில்லையென்று விவசாயிகளின் மரணத்தை மூடி மறைப்பதா? – சீமான் கண்டனம்!
அடுத்த செய்திஉழைக்கும் வர்க்கத்தை மேம்படுத்த உளமாற உறுதியேற்போம் – சீமான் வாழ்த்து!