திசையெங்கும் ஒலித்த நம் தேசக் குரல் பாலசிங்கம் அண்ணா – கனடா தமிழர் பேரவை

36
தமிழர்களின் வரலாறும், தமிழ் மக்களும் சிங்களப் பேரினவாதத்தினால் படிப்படியாக அழித்து ஒழிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளைகளில், அதை எதிர்த்து நின்று போராடும் எம் தேசத் தலைவன் திரு. வே.பிரபாகரனுக்குப் பக்க பலமாக நின்று, தன்னையும் ஒரு கெரில்லாப் போராளியாக மாற்றித் தன் வாழ்நாளின் நீண்டகாலப் பகுதியை எம் தேசவிடுதலைக்காக அர்ப்பணித்து, எமது ஈழவிடுதலைப் பயணத்தின் நேர்மையை உலகின் திசைகளெங்கும் கொண்டு சென்று, ஈழமக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த பாலா அண்ணாவை எமது தேசியத் தலைவர் அவர்கள் ‘தேசத்தின் குரல்’ எனும் உயர் கௌரவப் பட்டத்தை வழங்கி, அகவணக்கம் செலுத்தி நான்கு ஆண்டுகள் நிறைவுபெறும் இத்தருணத்தில் தேசக் குரல் பாலா அண்ணாவின் நினைவிலென்றும் உலகத் தமிழினம் மூழ்கித் தவிக்கின்றது.

அனைத்துலகம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சரித்திர நாயகனாக உறுதியுடன் நின்று எதிர்த்தரப்பினரைக் கதிகலங்க வைக்குமளவிற்கு, அவர் போராட்ட நீதி தவறாது நடந்து கொண்டார் என்றால் அது மிகையாகாது.

மதியுரைஞராக, அரசியல் ஆலோசகராக, போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்த கொரிரில்லா போராளியாகத் திகழ்ந்த பாலா அண்ணன் உலகத் தமிழர்களில் மிளிர்கின்ற முத்தாக இன்றும் மிளிர்ந்து கொண்டிருக்கின்றார். தமிழர் வாழ்வுரிமைக்கான சகலவிதமான நியாயப்பாடுகள் இருந்தும் சிங்கள, இந்திய மற்றும் உலக வல்லாதிக்கங்களின் விதவிதமான நகர்வுகள், அழுத்தங்கள,; ராஜதந்திர வலைப்பின்னல்கள,; திரைமறை சித்து வேலைகள் என அனைத்தையுமே பலவித நெருக்கடிகளுக்குள்ளும் கடுமையான காலங்களிலெல்லாம் நிதானத்தோடு செயற்பட்டுத் தலைவரின் மதிநுட்பச் செயற்பாடுகளுக்குப் பக்ககலமாய் வலம் வந்த அற்புத மனிதர்தான் எங்கள் பாலா அண்ணா. அவரிடமிருந்த அரசியல் விஞ்ஞான அறிவு, மொழி ஆளுமை என்பன அனைத்துலகத்தையே கவர்ந்த மிக முக்கியமான குணாம்சங்களாக இன்றளவும் நினைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

எமது தேச விடுதலையை நெஞ்சில் சுமந்தவாறு தனது கொடிய நோயையும் பொருட்படுத்தாது விடுதலையொன்றே எமது மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தருமென்று அரசியலில் இராஜதந்திரத்துடன் வீறுநடை போட்ட எமது தேசக் குரல், கொடிய புற்று நோயினால் இப்பூவுலகை விட்டுப் பிரிந்தார்.

இவரைப்பற்றி வார்த்தைகளால் வடிக்க எம்முன்னே வார்த்தைகள் போதாதுள்ளது. கடுமையான போராட்ட சூழல்களிலெல்லாம் தனது துணைவியாருடன் மண்ணின் விடுதலைக்காக உழைத்துச் அனைத்துலகமெங்கும் மண்ணின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த எங்கள் பாலா அண்ணா மரணம் வரையிலும் மண்ணுக்காக உழைத்த மாமனிதர். அவரின் இலட்சியக் கனவான தமிழீழக் கனவை நனவாக்கப் ‘போராட்ட வடிவங்கள் மாறினாலும் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை’’ எனும் தலைவரின் கூற்றிற்கிணங்க எமது இலக்கு நோக்கிய பயணத்தை உறுதியுடன் தொடருவோம்.

நன்றி

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

இப்படிக்கு

நிர்வாகம்

டென்மார்க் தமிழர் பேரவை

முந்தைய செய்திதமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிக்கை
அடுத்த செய்திதேசத்தின் குரலின் சில பகிர்வுகள்.