தமிழ்ப்பெண்களை இழிவாகப் பேசிய கேரள அமைச்சரின் பதவியைப் பறிக்கவேண்டும் – சீமான் கண்டனம்

34

ஊதிய உயர்வு கேட்டு போராடும் தேயிலை தோட்டத் தமிழ்ப்பெண் தொழிலாளர்களை இழிவாகப் பேசிய கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி பதவி பறிக்கப்பட வேண்டும் – சீமான் கடும் கண்டனம்

=============================================

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உலகின் பல்வேறு நிலப்பரப்புகளில் பரவி வாழ்ந்த தொல்குடி மக்களாகிய தமிழர்கள் தங்களது பாரிய உழைப்பின்மூலம், அளப்பரிய அர்ப்பணிப்பின் மூலம் தாங்கள் வாழ்ந்த நிலங்களைச் செழுமைப்படுத்திப் பெரும் மாற்றங்களை அம்மண்ணில் ஏற்படுத்தி அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் துணைநின்றிருக்கிறார்கள். மலேசியாவின் இரப்பர் தோட்டங்களும், இலங்கையின் தேயிலைத்தோட்டங்களும், தென்னாப்பிரிக்காவின் வைரச்சுரங்கங்களும் அத்தகைய வழியில் தமிழர்கள் சிந்திய வியர்வையினாலும், செங்குருதியினாலும் உருப்பெற்றவையே! தனது உன்னத உழைப்பினால் உலகையே உருமாற்றிய தமிழர்கள் தங்களது உழைப்பிற்கேற்ற ஊதியத்தைக் கேட்டுப் போராட வேண்டிய இழிநிலையில் உலகெங்கும் இருக்கிறார்கள் என்பதுதான் சமகாலம் நமக்கு உணர்த்தும் உண்மை. கேரளத்தின் இடுக்கி மாவட்டம் மூணாறில் தோட்டத்தொழிலாளர்களாகப் பணியாற்றி வரும் தமிழர்களும் தங்களது உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கேட்டு நீண்டநெடுங்காலமாகப் போராடி வருகின்றனர். வெகுநாட்களாக ஒருநாளைக்கு 231 ரூபாயையே 21 கிலோ தேயிலைக்கான ஊதியமாகப் பெற்று வந்தனர். இந்நிலையில், தோட்டத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் தங்களுக்கென ‘பெண்பிள்ளை ஒற்றுமை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஊதிய உயர்வு கேட்டு கடந்த 2015ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் கடும்போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன்விளைவாகத் தேயிலை மற்றும் காபி தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் கூலி 301 ரூபாயும் , ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்களின் கூலி 330 ரூபாயும், இரப்பர் தோட்டத் தொழிலாளர் கூலி 381 ரூபாயும் வழங்குவதாகக் கேரள அரசு அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி பேசிய அம்மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் உடும்பஞ்சோலை சட்டமன்ற உறுப்பினரும், அம்மாநில மின்சாரத்துறை அமைச்சருமான எம்.எம். மணி அவர்கள், ’40 நாட்கள் அப்பெண்கள் குடியும், கூத்துமாக வேசித்தனம் செய்தனர்’ என அருவருக்கத்தக்கவகையில் தமிழ்ப்பெண்கள் குறித்து நச்சுக்கருத்தை உமிழ்ந்திருக்கிறார். இதற்கெதிராகப் பெண்பிள்ளை ஒற்றுமை அமைப்பினர், எம்.எம்.மணி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் எனவும், அவரை அமைச்சர் பதவிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள எதிர்க்கட்சிகளும் ஒன்றுதிரண்டு எம்.எம். மணியின் பேச்சுக்கு எதிராக நேற்று (24-04-17) முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால், இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமையோ, கேரளத் தலைமையோ, வாய்திறக்கவில்லை. போராடும் பெண்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதுதான் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி கற்பிக்கும் மார்க்சியக் கோட்பாடா? என்றும், உழைக்கும் மக்கள் ஊதிய உயர்வு கேட்டுப்போராடினால் அவர்களை ஆபாசமாக விளிப்பதுதான் மார்க்சிஸ்டின் மக்கள் நலனா? என்றும் கேள்விகள் எழுகிறது. அமைச்சர் மணியின் இக்கருத்துக்கு எதிராகக் கேரளாவில் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும், அகில இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தும் கள்ள மௌனம் சாதித்து வருவது மணியின் ஆபாசப்பேச்சினை ஆதரிப்பது போல உள்ளது. அப்போக்கினை உடனடியாகக் கைவிட வேண்டும்.

தமிழ்நாடு கேரளா எல்லையோர ஊர்களில் வாழும் தமிழ்ப்பெண்கள் இழிவாகப் பேசப்படுவதும், நடத்தப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. தமிழ்ப்பெண்கள் குறித்துக் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது தரம்தாழ்ந்த கருத்துகளை வெளியிட்டு வருவதும், முல்லைப்பெரியாறில் தண்ணீர் கேட்டுத் தமிழகத்தில் போராட்டங்கள் வெடிக்கிறபோதெல்லாம்,அங்கிருக்கிற தமிழ்ப்பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவதுமான போக்குகள் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. . கேரள அரசு ஒருபோதும் இது போன்ற இனவெறி செயலுக்கு இடந்தரக் கூடாது.

இவ்விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அமைச்சர் எம்.எம்.மணி தனது பேச்சினைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்து, பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். இத்துடன் போராடும் மக்கள் மீது தரம்தாழ்ந்த கருத்துகளைக் கூறிய அவரை அமைச்சர் பதவிலிருந்து தகுதிநீக்கம் செய்யக் கேரள அரசு முன்வர வேண்டும். இதனைச் செய்யத்தவறும் பட்சத்தில், இரு நேச இனங்களுக்குள் தேவையற்ற வெறுப்புணர்ச்சியும் பகைமையும் உருவாகுமென எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஅரசு மருத்துவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்று ஆதரவு – சென்னை
அடுத்த செய்திமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்