‘‘தமிழீழத்தை கைவிடுகிறோம்’’ தமிழர் விடுதலை கூட்டணி செய்த மிகப்பெரிய துரோகம்

90

(தமிழர் தாயகக் கோட்பாடு, விடுதலைப் புலிகளின் போராட்டம், தேசியத் தலைவரால் பாதுகாக்கப்பட்ட தமிழீழ தேசம், சிங்களவர்களின் நில ஆக்கிரமிப்பு, 13வது அரசியல் சட்டத்திருத்தம், மாகாண சபைத் தேர்தல் எனச் சமகால நிலவரங்கள் தொடர்பான பல்வேறு கருத்துக்களை, எதிர்ப்புக்களை கவிஞர்.காசி ஆனந்தன் அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள். தமிழ்நெட் இணையத் தளத்திற்கு அண்மையில் அவர் வழங்கிய செவ்வியை எழுத்துவடிவில் இங்கே தருகின்றோம்.)

கேள்வி: சிறீலங்கா அரசின் ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண முடியாதென்ற கருத்தை முன்வைக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறியுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு முன்னால் தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழர் விடுதலை கூட்டணி, அதற்கு முன்னால் தமிழரசு கட்சி. தந்தை செல்வா தலைமையில் தொடங்கிய போராட்ட இயக்கத்தை நடத்திய அந்த கட்சி. இன்று முழுமையாக சில இடங்களில் மாறிய நிலையில் எண்ணங்களை குரலாக வெளிபடுத்துகிற நேரத்தில் துயரமாக இருக்கிறது.

ஏனெனில் நான் அந்தக் கட்சியின் தொடக்ககாலத்தில் தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி காலத்திலேயே தமிழரசு கட்சி மற்ற கட்சிகளை இணைத்து கொண்டு கூட்டணி அமைத்த காலத்திலேயே நான்தான் தமிழர் விடுதலை கூட்டணியின் முதல் அமைப்புச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டேன். நானும் வல்வெட்டித்துறை ஞானமூர்த்தி ஐயாவும் இருவரும்தான் தமிழர் விடுதலை கூட்டணியின் முதல் அமைப்புச் செயலாளர்கள் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அந்தக் கட்சியின் மிகப் பொறுப்பு வாய்ந்த இடங்களில் நான் இருந்து பணியாற்றியிருக்கிறேன்.

மட்டக்களப்பில் கிழக்கில் நான் முடிந்த வரை என்னைத் தேய்த்துக் கொண்டு உழைத்திருக்கிறேன். தந்தை செல்வா என்னை உருவாக்கிய தலைவர். நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தந்தை செல்வா நான் தொடக்கத்தில் சொன்னதைப் போல ஒற்றையாட்சி முறையை முழுவதுமாகப் புறந்தள்ளியவர். அவர் அதற்கு பிறகுதான் வட்டுக்கோட்டையில் தமிழீழம்தான் தீர்வு என்று மக்களை நகர்த்திவந்து முடிவை அறிவிக்கிறார். ஆனால் இன்று மிகப்பெரிய கொடுமை அண்மையில் நிகழ்ந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் அதிர்ந்துபோயோ, அசந்துபோயோ என்ன காரணத்தினாலோயோ தமிழர் விடுதலை கூட்டணித் தலைமை தமிழீழத்தை நாங்கள் கைவிடுகிறோம் என்று அறிவித்தது.

இது என்னைப் பொறுத்தவரை தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி செய்த மிகப்பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன். அவர்கள் தொடர்ந்து நாட்டில் இருக்கிறார்கள். நான் வெளியில் இருந்துதான் பேசுகிறேன். அவர்கள் மக்களிடத்தில் இருக்கிறார்கள். அதை நான் மதிக்கிறேன், போற்றுகிறேன். பல துயரங்களுக்கும் கொடுமைகளுக்கும் நடுவே வாழ்கிறார்கள். நான் அவர்களுக்கு உரிய மரியாதை செய்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், என்னதான் எத்தனை துன்பத்தில் இருந்தாலும் கொள்கையைக் கைவிடுகிற உரிமை எவனுக்கும் கிடையாது. தமிழீழம் என்பது எப்படிப்பட்ட கொள்கை. நான் தொடக்கத்தில் சொன்னேன் 27 ஆண்டுகள் கொடுமைகள் தாங்க முடியாமல் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்வது என்று போராடி அதற்குப் பிறகு எடுத்த முடிவுதான் 1976இல் தந்தை செல்வா தமிழர் விடுதலை கூட்டணி வட்டுக்கோட்டையில் எடுத்த முடிவுதான் தனித்தமிழீழம். அதற்குப் பிறகு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மக்களிடம் ஒப்புதலைப் பெற்ற முடிவுதான் தனித்தமிழீழம். அதற்குப் பிறகு நமது அரும்பெரும் தலைவர் தேசியத்தலைவர் பிராபகரன் அவர்கள் ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்று அறிவித்தார். அவர் கேட்டது தமிழீழம்தான். கிட்டத்தட்ட 40 ஆயிரம் விடுதலைப்புலிகள் மாவீரர்களாக மடிந்து உயிர்களைத் தூக்கியயறிந்தது தமிழீழத்திற்காகதான்.

தமிழீழ மண்ணில் நீண்ட நெடுங்காலம் நடந்த போரில் 3 இலட்சம் தமிழ் மக்கள் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தனை பேரும் சடலங்களாகக் குவிந்தது தமிழீழ மண்ணில் தமிழீழக் கொள்கைக்காகதான். அந்தக் கொள்கையைக் கைவிடுகிற, கைவிட்டோம் என்று சொல்லுகிற உரிமை எவனுக்கும் கிடையாது. அவர்கள் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. அவர்கள் வேண்டுமானால் வாயை மூடிக்கொண்டு இருக்கலாம் அல்லது முதற்கட்டமாக எங்கள் தாயகத்தை ஒப்புக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாம், எங்கள் தேசியத்தை ஒப்புக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாம். அவர்கள் கீழே இருந்து போரைத் தொடங்க வேண்டும் என்று கருதி கீழே இறங்கி வந்து சொல்லாம். ஆனால் தமிழீழத்தை நோக்கிய நகர்வில் தமிழீழம் வேண்டாம் என்று சொல்லும் உரிமை தகுதி எவனுக்கும் கிடையவே கிடையாது.

தமிழீழத்தை புறம்தள்ளி, அது சாணக்கியம் என்று அவர்கள் சொல்லலாம், இராஜதந்திரம் என்று சொல்லலாம். அதற்கெல்லாம் கொள்கையில் இடம் கிடையாது. ஒரு உண்மையான கொள்கைவாதி ஒரு உண்மையான இலட்சியவாதி அவன் அவனுடைய கொள்கையில் இருந்து தவறமாட்டான். அதுதான் உண்மை. அவர்கள் செய்தது பெரியதவறு. ஆனால் அவர்களுக்கு இன்னும் பணிகள் இருக்கிறது என நான் நினைக்கிறேன் ஆகவே நான் தொடர்ந்து அவர்களைக் கடுமையாகத் திறனாய்வு செய்ய விரும்பவில்லை. அவர்கள் எதிர்காலத்திலாவது தமிழீழத்தை கைவிட்டோம் என்றெல்லாம் பேசுவதை நிறுத்த வேண்டும்.

கேள்வி: அமெரிக்கத் தலைமையிலான மேற்குலகும் இந்திய அரசும் தொடர்ச்சியாக இந்த 13ஆம் சட்டத் திருத்தத்தையும், மாகாணசபை முறையையுமே மீண்டும் மீண்டும் வலியுறுத்திவருகிறார்கள். இவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன?

பதில்: நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். குறிப்பாக இந்திய அரசுக்கு நான் பணிவோடு ஒன்றைச் சொல்லிக்கொள்வேன். சட்டத்திருத்தம் அரசியல் சட்டத்திருத்தம் என்பது இலங்கையைப் பொறுத்தவரை பொருளற்றது, நிலையற்றது. அதை நாம் மறந்துவிடக்கூடாது. 20க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இந்தியாவில் வாழ்கின்றன. நாளைக்கு ஒருவேளை திட்டமிட்டு இந்திய அரசு இந்திகாரர்களைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் ஒரு 10 இலட்சம் பேரைக் குடியேற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே பக்கத்தில் இருக்கும் ஆந்திரம், கேரளம், மராட்டியம், வங்காளம், ஒரிசா, குஜராத் இந்த மாநிலங்கள் எல்லாம் உடனடியாகப் போர்கொடி உயர்த்தும்.

ஏனென்றால் நாளை அவனுடைய மாநிலத்திலும் அவனுடைய தேசிய இனத்திற்கு எதிராகப் பிற தேசிய இனங்களைக் குடியேற்றும் கொடுமை நிகழும். ஆகவே அதைத் தடுப்பதற்காகக் கொந்தளித்து எழுந்து போராடுகிற ஒரு மக்கள் அமைப்பு நிலை தேசிய இனங்கள் பல வாழ்கிற நிலைப்பாடு இந்தியாவில் இருப்பதைப் பார்க்கிறோம்.

ஆகவே சட்டத்திருத்தம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து இந்திய அரசில் ஏதாவது ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் கூட அனைத்துத் தேசிய இனங்களையும் கலந்துதான் செய்ய வேண்டியுள்ளது.   இங்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இலங்கையைப் பொறுத்தவரை அந்த அரசியல் அமைப்பில் கொண்டுவரப்படும் திருத்தங்களை நாளை சிங்கள அரசு தனது பெரும்பான்மை கொண்டு தூக்கி குப்பைக் கூடைக்குள் போடலாம். கேட்க வேறு மாநிலங்கள் இல்லை. குஜராத் அங்கில்லை, பஞ்சாம் அங்கில்லை, மராட்டியம் அங்கில்லை, கேரளா அங்கில்லை. தமிழீழ மக்கள் கூட இணைந்து போராடுவதற்கு, தடுப்பதற்கு இலங்கைத் தீவில் வேறு எந்த  இன மக்களும் கிடையாது. மக்கள் எண்ணிக்கை குறைந்த தேசிய இனமாக அந்த மண்ணில் நாங்கள் வாழ்கிறோம்.

ஆகவே அந்த சட்டதிருத்ததை எந்தக் காலத்திலும் தூக்கிக் குப்பைக் கூடைக்குள் போடலாம். ஏன் இப்பொழுதே இந்தியாவுடன் சேர்ந்து செய்துகொண்ட சட்டதிருத்தத்தை அதில் காவல்துறை, நிலம் போன்றவற்றை நாங்கள் குப்பைக் கூடைக்குள் போடப்போகிறோம் என்று சொல்கிறானே. ஏற்கனவே வடக்கு-கிழக்கை இணைந்திருக்க வேண்டும் என்று இருந்ததை நீதிமன்றத்தை வைத்து தூக்கிக் குப்பைக் கூடைக்குள் போட்டிருக்கிறானே. அப்படியயனில் எதிர்காலத்தில் இவை நிகழாது என்பதில் என்ன உறுதி? அங்கு செய்யப்படுகிற சட்டதிருத்தம் நிலையானது என்பதில் என்ன உறுதி? அதையயல்லாம் தூரவைத்து பேசுவோம், தள்ளிவைத்து பேசுவோம்.

ஒட்டுமொத்தமாகவே இந்த சட்டதிருத்தம் எங்களுக்கு உதவாது, எங்களுக்கு பயனற்றது இன்னும் சொல்லபோனால் எங்களை இன்னும் கூடுதலாக அடிமைப்படுத்தும். அப்படிபட்ட ஒரு சட்டதிருத்தை இந்தியாவும், வெளிநாடுகளும் கூத்தாடுவதில் எந்தப் பொருளும் இல்லை. எந்த வகையிலும் இந்தச் சட்டதிருத்தம் எங்களுக்கு உதவாது. சிறீலங்கா அரசியலமைப்பும் எங்களுக்கு உதவாது. அதையும் அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன்.

அது ஒற்றையாட்சி அரசியலமைப்பு. ஆகவே ஒற்றையாட்சி அரசியலமைப்பே கூடாது என்கிற எங்களை அதில் இருக்கிற செயல்படுகிற திருத்தங்கள் எப்படிச் சரியாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு பெரிய கொலைவெறியன் கத்தி தூக்கி அடுத்தவர்களை வெட்டிக் குவிக்கின்ற கொலைவெறியன் மகாபாதகன் அவனுடைய கை மட்டும் நல்ல அழகான கை என்று சொல்ல முடியுமா? தலை மட்டும் நல்ல தலை என்று சொல்ல முடியுமா? நான் அப்படிச் சொல்ல மாட்டேன். தலையும் கொலைகாரன் தலை, கையும் கொலைகாரன் கை. ஆகவே ஒட்டுமொத்தமான அரசியல் அமைப்பில்தான் இந்த சட்டதிருத்தம்.

ஆகவே கொலைகாரன், கொலைகாரன்தான். கொலைவெறிகொண்ட தமிழின அழிப்பு நோக்கம் கொண்ட சிறீலங்கா அரசின் அரசியலமைப்பு கொடுமையானதுதான். அது கொடுமையானது, கொடுமையானதுதான்.

கேள்வி: தனிஈழம் குறித்து ஐ.நா. வாக்கெடுப்பு நடாத்தவேண்டும் என்று கூறிய தமிழக அரசு இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம், அதை அடிப்படையாகக் கொண்ட 13ஆம் திருத்தம், மாகாணசபை போன்ற விடயங்களில் எந்த வகையான நிலைப்பாட்டைக் கைக்கொள்ளவேண்டும் என்று ஒரு ஈழத்தமிழராக நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: தமிழக அரசு மிகச்சிறந்த தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது தலைமை அமைச்சர் செயலலிதா அவர்கள் தலைமையில் அமைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிற தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானங்கள் தமிழீழ விடுதலைப் போருக்கு உரம் தருகிற – தமிழீழ விடுதலைப்போரை மேலும் உறுதி செய்கிற சிறந்த தீர்மானங்களாக அமைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். நாங்கள் தமிழீழ மக்கள் சார்பில் செல்வி செயலலிதா அம்மையார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானத்தை தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்ற அடிப்படையில் அந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைத் தமிழகச் சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதல்அமைச்சர் செல்வி செயலாலிதா அம்மையார் அவர்கள் நிறைவேற்றினார்கள். அப்படி சொல்லிவிட்டு அதற்குப் பின்னால் 13ஆவது சட்டதிருத்தத்தைப் பற்றி அவர்கள் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பேசாமலிருந்தாலே நல்லது அல்லது அதைப் புறந்தள்ளித் தீர்மானங்கள் போடலாம். தமிழகச் சட்டமன்றத்தில் நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம் – தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றுதான் தீர்வு என்று சொல்லிவிட்டோம்.

ஆகவே அதற்கு குறைந்த மிகமிகக் குறைந்த அவர்களைக் கொச்சைப் படுத்துகிற 13ஆவது அரசியல் சட்டத்தை தூக்கியயறிய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரலாமே தவிர மொத்தமாக இலங்கை அரசியலமைப்பையே புறந்தள்ளி ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்ட பெருமதிப்புக்குரிய தமிழகச் சட்டமன்றம் இந்த சின்னஞ்சிறிய அற்பமான 13ஆவது சட்டதிருத்தத்தை தலையில் வைத்து கூத்தாட வேண்டியதில்லை என்று நான் கருதுகிறேன்.

கேள்வி: 1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்றுதான் இன்று தமிழர்களிடம் இருக்கும் ஏதோ ஒரு தீர்வுக்கான அடிப்படை என்ற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். இந்த அடிப்படையில் சிறீலங்காவின் ஒற்றையாட்சி அமைப்புக்குள் 13ஆம் சட்டத்திருத்தத்தை ஒரு ஆரம்ப புள்ளியாகவோ ஒரு இடைக்கால தீர்வாகவோ கருதி தமிழர்கள் அதைப் பலப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்தை இவர்கள் முன்வைக்கிறார்கள். இது குறித்த தங்கள் கருத்து என்ன?

பதில்: முதலில் 13ஆவது சட்டத்திருத்தம் என்பது என்னைப் பொறுத்த வரை It’s Not a Part of SriLankan Constitution> It’s a Part of Srilankan Conspiracy. இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். 13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் என்பது இலங்கை அரசியல் அமைப்பின் ஒரு பகுதியல்ல, இலங்கையினுடைய சூழ்ச்சியின் ஒரு பகுதி, சதியின் ஒரு பகுதி. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை அதுதான். இன்னும் ஒன்றை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். சிறீலங்கா அரசியல் அமைப்பு ஒரு ஒற்றையாட்சி அமைப்புமுறையாகும்.

அந்த ஒற்றையாட்சிக்குள் தமிழீழ மக்களுக்கு விடிவுக்கு இடமே இல்லை என்பதை கருத்தில் கொண்டுதான் 1948இல் இருந்தே தந்தை செல்வா அவர்கள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட உரிமைக்கான Federal Government சமஸ்டிய ஆட்சி முறைக்காகப் போராடி வந்தார். தந்தை செல்வா அவர்களே கூட 1948இல் இருந்து ஒற்றையாட்சி குப்பைக் கூடைக்குள் போடவேண்டும் என்பதை வலிமையாக சொல்லிவந்தார். அதைத் தொடர்ந்து தலைவர் பிரபாகரன் அவர்கள் அதே கருத்தை முன்வைத்து வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்ட தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்பதை வலியுறுத்தி அவருடைய ஆயுதப் போராட்டத்தைத் தொடர்கிறார்.

இதுதான் நமது கடந்தகால வரலாறு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒற்றையாட்சிக்குள் நாம் எந்தத் தீர்வையும் காண முடியாது. அதுதான் உண்மை. அவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் They are an Ethnic Minority என்று சொல்லுகிறார்கள். ஆனால் We are Not an Ethnic Minority நாங்கள் ஒரு சிற்றினக்குழு அல்ல We are a Nation. நாம் ஒரு தேசிய இனம், நாங்கள் ஒரு தேசிய இனம். இன்னொன்றைச் சொல்கிறார்கள். அவர்கள் பேசுகிற பொழுதெல்லாம் மாகாணங்களைப் பற்றியே பேசுகிறார்கள். ஆனால் தமிழர்களுடைய வாழ்விடம் ஓரிரு மாகணாங்கள் அல்ல. தமிழர்களுடைய வாழ்விடம் அவர்களுடைய தாயகம். மாகாணங்கள் அல்ல தாயகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னொன்று ஒரு ஆரம்பப் புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ என்று சொல்கிறார்கள் முதலில் எங்களுடைய சுயநிர்ணய உரிமை Right to Self Determination ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளைத்தான் திம்பு மாநாட்டில் பல போராளிக்குழுக்களும் இணைந்து முன்வைத்தன. ஆனால் அவையயல்லாம் அப்போதே குப்பைக் கூடைக்குள் போடப்பட்டன.

தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்பதில் தமிழீழ விடுதலைப்புலிகள் நாங்கள் மிக உறுதியாக இருக்கிறோம். தமிழீழம் ஒன்றுதான் தீர்வு. அதில் எந்த ஐயத்திற்கும் இடம் இல்லை. அந்த முடிவை எடுத்தவர் தலைவர் பிராபகரன் அவர்கள் மட்டும் அல்ல, அவருக்கு முன் தந்தை செல்வாதான் வட்டுக்கோட்டையில் அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்பதைத் தமிழ்மக்கள் வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றி அத்தீர்மானத்துக்கு நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் பெரும்பான்மை ஒப்புதலைப் பெற்ற தமிழர்களின் உறுதியான கொள்கைதான் தமிழீழம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த 13ஆவது சட்டத்திருத்தம் எப்படி ஒரு ஆரம்பப் புள்ளியாக அமையும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு ஊராட்சி மன்றம், ஒரு சிற்றூராட்சி மன்றம் அதற்கு இருக்கிற அதிகாரம் கூட இந்த 13ஆவது சட்டத்திருத்தத்தில் தமிழர்களுக்கு இல்லை.

மிகக் கொடுமையான ஆளுநரே அனைத்து அதிகாரங்களை கொண்டவராக இருக்கிறார். மாகாண சபைகள் நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை கசக்கித் தூக்கிக் குப்பைக் கூடையில் போடுகின்ற அதிகாரம் கொண்ட ஆளுநரிடம்தான் அனைத்து அதிகாரங்களும் உண்டு என்று சொல்கிறது. இந்தப் 13ஆவது சட்டத்திருத்தம். இன்னொன்று இந்த 13ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவருகிற மாகாணசபையில் தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தமிழர்கள் எதையும் செய்ய முடியாது. நமக்கு தெரியும் இன்று வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுகிறது கொஞ்ச நாட்களுக்கு முன்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றது. இவை இரண்டும் இணைந்த அனைத்துமான மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று அதில் வரதராஜப்பெருமாள் தெரிவு செய்யப்பட்டாரே, அவர் முதலமைச்சராக இருந்த போது என்ன சொன்னார்?

மாகாணசபையுடைய 13ஆவது சட்டத்திருத்ததிற்கு உரிய அனைத்துச் சட்டங்களும் உடைய மாகாணசபை, அதற்கு அவர் முதலமைச்சர். அவர் சொன்னார் நான் ஒரு நாற்காலியை என் பாவனைக்காக வாங்குவதாக இருந்தாலும் கொழும்பில் உள்ளவர்களிடம் கேட்கவேண்டும், கெஞ்ச வேண்டும் என்று வரதராஜபெருமாள் அவர்களே சொன்னார். அந்த அளவுக்குதான் அதிகாரம். ஒரு நாற்காலி வாங்கக் கூட அதிகாரமில்லாத நாற்காலியில் அமர்ந்து கொண்டுதான் முதலமைச்சர் கடமையாற்ற வேண்டும். அப்படியான ஒரு சபைதான் இந்த 13ஆவது சட்டத்திருத்ததில் வருகிற மாகாணசபை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதுவல்ல சிக்கல்.

தமிழர்களின் தாயகக் கொள்கை ஒப்புக் கொள்ளப்பட்டாக வேண்டும். We are a Nation. நாம் ஒரு தேசிய இனம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டாக வேண்டும். இவை அனைத்தும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தால் அது ஒரு அடிப்படைப் புள்ளியாக இருக்க முடியும். எங்களை பொறுத்தவரை தமிழீழத்தை நோக்கிய எங்களின் நகர்வு உறுதியானது. மிகமிக உறுதியானது. அது ஒன்றுதான் தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கேள்வி: வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடம் என்று மட்டுமே இந்திய – இலங்கை ஒப்பந்தம் பேசுகிறது. பாரம்பரிய தாயகம் என்று அது கூறவில்லை. தவிரவும், வடக்கோடு நிரந்தரமாக இணைந்திருப்பதா என்பதை கிழக்கு மட்டுமே பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கும் என்று தமிழர் தாயகக் கோட்பாட்டை நிராகரிக்கும் பொறிமுறையை இந்த இந்திய – இலங்கை ஒப்பந்தம் கொண்டிருக்கிறது. கிழக்கு மாகாண நிலைமையை நன்கு அறிந்தவர் என்ற நிலையில் இது குறித்த தங்கள் கருத்தைப் பதிவுசெய்வீர்களா?  தொட ரும்…

முந்தைய செய்திதீவக பகுதிகளில் இரவு நேரங்களில் கூட்டமைப்ப ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!
அடுத்த செய்திதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு