தமிழக மீனவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் இலங்கை மீது போர்த்தொடுக்க வேண்டும்! – சீமான் சீற்றம்!

97

தமிழக மீனவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் இலங்கை மீது போர்த்தொடுக்க வேண்டும்! – சீமான் சீற்றம்!

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 07-03-2017 வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கள இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ பெர்னாண்டஸ் என்ற 21 வயதே நிரம்பிய மீனவ இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி தமிழர் இதயங்களை இடிப்போலத் தாக்கி இருக்கிறது.

ஏற்கனவே, தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் வன்முறைத்தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அராஜகமும், வலையறுப்பு நிகழ்வுகளும், துப்பாக்கிச்சூடுகளும் தொடர்கதையாகி வருகின்ற இச்சூழலில் இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது. மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து அடிப்பது, உதைப்பது, நிர்வாணப்படுத்துவது, கடலுக்குள் தள்ளி விடுவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, மீன்களைக் கடலிலே வீசியெறிவது, வலைகளை அறுத்தெறிவது, படகுகளைச் சேதப்படுத்துவது,சிறைப்பிடிப்பது எனச் சிங்கள இராணுவம் அரங்கேற்றிவரும் கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல. அன்றாட நிகழ்வுகளாகிப் போன இத்துயரத் துன்பங்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய இந்தியக் கடற்படையோ சிங்கள இராணுவத்தின் வன்முறை வெறியாட்டங்களைக் கைகட்டி வேடிக்கைப் பார்த்து, இந்தியப் பெருநாட்டில் வரி செலுத்தி,வாக்கு செலுத்தி வாழ்கிற 8 கோடித் தமிழர்களின் உணர்வுகளையும் அவமதித்து வருகிறது.

இந்நாட்டின் குடிமக்களாகிய தமிழர்களை இன்னொரு நாட்டைச் சேர்ந்த இராணுவம் சுட்டுக்கொலை செய்கிறபோதும் இந்தியாவின் கூட்டு மனசாட்சியும், இந்திய இறையாண்மையும் அமைதி காக்கிறதென்றால் தமிழர்கள் இந்திய நாட்டின் ஓர் அங்கத்தினர்தானா என்ற ஐயம் இயல்பாய் நமக்குள் தொற்றிக்கொள்கிறது. சீனாவும், பாகிஸ்தானும் எல்லைத்தாண்டி அத்துமீறும்போதெல்லாம் அதனை எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் எனக் கண்டிக்கிற பாரதப்பிரதமர் மோடியும், இந்தியப் பெருந்தேசத்தின் தலைவர்களும் இன்றைக்கு இந்திய எல்லைக்குள் தமிழர்கள் தாக்கப்பட்ட இந்நிகழ்வினை எப்படிப் பார்க்கிறார்கள்? எல்லைத் தாண்டியதால்தான் தாக்கப்பட்டார்கள் எனும் பழைய பல்லவியைப் பாடியே காலங்கடத்திய இவர்கள் இந்நிகழ்விற்கு எத்தகைய எதிர்வினையாற்றக் காத்திருக்கிறார்கள்? அண்டை நாடான பாகிஸ்தானுடனான விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தோற்றாலே அதனைத் தேசிய அவமானம் எனக் கருதி வெட்கித் தலைகுனிகிற தேசப்பற்றாளர்கள், இத்தேசத்தின் குடிமகன் அந்நிய நாட்டின் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதற்கு எவ்வித நடவடிக்கை கோரப்போகிறார்கள்? இந்திய இராணுவத்தின் தலையைக் கொய்த பாகிஸ்தான் இராணுவத்தினரின் தலையை வெட்டியெடுக்க வேண்டும் என்ற அம்மையார் சுஷ்மா சிவராஜ் போன்றவர்கள் இப்போது யாருடைய தலையைப் பலியாகக் கேட்கப் போகிறார்கள் என்கிற கேள்விகளுக்கான பதில்கள் இவர்களிடம் இருக்கிறதா?

தற்போது மத்தியில் ஆளுகின்ற பாஜகவும், ஏற்கனவே ஆண்டுத் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசும் தமிழர்களுக்கு எதிராக ஒரே வகையான சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, 850 க்கும் மேலான தமிழ் மீனவர்களைக் கொன்றுகுவித்த சிங்கள இராணுவத்திற்குப் பயிற்சியளித்து, அவர்களுக்குப் போர்க்கப்பலைப் பரிசளித்து, நாம் செலுத்துகிற வரிப்பணத்தை வாரி வழங்கித் தமிழர்களின் உணர்வுகளைக் கிள்ளுக்கீரையாக நினைத்து சீண்டிப்பார்த்து வந்தன. தமிழர்களைத் துன்புறுத்தும் இலங்கை என்ற ஒரு சின்னஞ்சிறிய நாட்டின் அத்துமீறலை தட்டிக்கேட்காமல், இலங்கையினை நட்பு நாடு எனக் கட்டிக்காக்கத் துடித்தன.

அதுபோல, தற்போதும் தமிழர்களின் தேசிய நோயான மறதி எனும் பெருங்குணத்தைக் கொண்டு இக்கொடிய சம்பவத்தைக் கடத்தி விடலாம் என்று இந்திய வல்லாதிக்கமும், அதன் தலைவர்களும் நினைப்பார்களென்றால் அது அவர்களுக்கு ஏமாற்றமாய் முடியும் என்பதைப் புரியவைக்காமல் நாங்கள் ஓயப்போவதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ‘கடல் தாமரை’ மாநாடு போட்டு மீனவர்களுக்கெனத் தனி அமைச்சகம் அமைப்போம் என்ற பாஜகவின் போலி வாக்குறுதி போல இப்போதும் வெற்று வாக்குறுதிகளாலும், பசப்பு வார்த்தைகளாலும் தமிழர்களின் சிந்தையை மழுங்கடிக்கலாம் என்று எண்ணினால் அது அவர்களுக்கே விபரீதமாய்ப் போகும் எனக் கடுமையாய் எச்சரிக்கிறேன்.

தொடர்ச்சியாகத் தமிழக மீனவர்களைக் கொன்று குவித்து வரும் சிங்கள கடற்படையைத் தடுக்க வக்கற்றுப் போனத் இந்தியக் கடற்படையை நம்பி நமது மீனவர்களை இனி கடலுக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.

எனவே, தமிழக அரசும் இந்தப் படுகொலை விவகாரத்தில் சமரசம் கொள்ளாமல் தமிழ்நாடு ஊர்க்காவல் படை போலச் சிறப்பு மாநிலச் சட்டத்தின் வாயிலாகத் தமிழ்நாடு கடலோரக் காவல் படை ஒன்றினை ஏற்படுத்தி ஒரு சீருடை அணிந்த அரசு பாதுகாப்புப்படையை ஏற்படுத்தி, அப்படைக்கு நவீன ஆயுதங்களை வழங்கி நமது மீனவர்களை நாமே காத்திட உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இந்திய கடற்படையின் சர்வதேச எல்லைப் பாதுகாப்புப் பணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையிலும், மீனவர்கள் மற்றும் படகுச் சுற்றுலாவிற்குச் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் தமிழகக் கடற்பகுதிகளில் இருந்து கடலினுள் செல்லும் அனைத்துப் படகுகளையும் இந்தப் பாதுகாப்புப் படை கண்காணிக்கும். அவர்களின் பாதுகாப்பிற்குத் துணை புரியும். ஒரு மாநில அரசாக இதுபோன்றே சட்டரீதியாகக் கடலுக்குச் செல்லும் தமிழ் மீனவர்களின் உயிருக்குப் பாதுகாப்பைத் தரமுடியும்.

மேலும் கடந்த 2013 ஆம் வருடத்தில் பிலிப்பைன்ஸ் கடற்படை, தைவான் நாட்டின் 60 வயது மதிக்கதக்க மீனவரை எல்லைத்தாண்டினார் என்ற காரணத்திற்கான அந்த மீனவரை சுட்டுக்கொன்றது. இந்தச் செய்தியைக் கேட்டதும்,
தனது கடல் எல்லையில் தைவான் இராணுவம் 10 நாட்கள் போர்க்காலப் பயிற்சியை மேற்கொண்டதும், தைவான் அரசு பிலிப்பைன்ஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கத் தடை விதித்ததும், பிலிப்பைன்ஸ் மீது 9 விதமான பொருளாதாரத் தடைகளை விதித்ததும் ,இது எல்லாவற்றுக்கும் மேலாகத் தைவானில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகளை உடனடியாக வெளியேற்றி, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தைவான் தூதரகத்தைத் திரும்ப்பெற்றதும் செய்திகளாக வந்தன.
அதிர்ந்துபோன பிலிப்பைன்ஸ் அரசு, அந்நாட்டின் தூதரின் மூலம் , படுகொலை செய்யப்பட்ட மீனவரின் வீட்டிற்குச் சென்று அவரின் மனைவியிடம் மன்னிப்புக் கோரியது. பின்னர்ப் பிலிப்பைன்ஸ் தாமாக முன்வந்து சில முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தைவான் அரசுடன் கையெழுத்துப் போட்டுக்கொண்டது. அதுபோல, இந்திய அரசும் தமிழக மீனவரைப் படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசைக் கடுமையாகக் கண்டித்து, சிங்கள அரசின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தும். சிங்கள அரசுக்கு இராணுவ ரீதியிலான கடும் நெருக்கடிக்களைக் கொடுத்தும் , பன்னாட்டு நீதிமன்றத்தில் இதுபோன்ற கொலைகளுக்காகச் சிங்களப் பேரினவாத அரசை நிறுத்தியும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், கேரளாவைச் சேர்ந்த மலையாளி மீனவர்கள் இருவரை இத்தாலிக் கடற்படை சுட்டு வீழ்த்தியதற்குப் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்தது போல, தமிழ் மீனவரைச் சுட்டுக்கொலை செய்த சிங்கள இராணுவத்தினரையும் உடனடியாகக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க மத்திய அரசு சிங்கள அரசை வலியுறுத்த வேண்டும் எனவும், அத்துமீறி தமிழ் மீனவர்களைத் தாக்கி வரும் இலங்கையுடான அத்தனை உறவுகளையும் துண்டித்து, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகோர வேண்டும். இத்தோடு தமிழ் மீனவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் இலங்கை மீது போர்தொடுத்துக் கச்சத்தீவினை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

சிங்களக் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு தமிழகக் மீனவர் பிரிட்சோவை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினரின் துயரில் நாம் தமிழர் கட்சி முழுமையாகப் பங்கேற்கிறது. சிங்களரின் தொடர்ச்சியான வன்முறை வெறியாட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் முறையாகக் கண்டறியப்பட்டு, சேதாரங்கள், இழப்புகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் உரிய இழப்பீடு வழங்கவும் மத்திய அரசை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

முந்தைய செய்திபிப்ரவரி மாதம் – செலவு அறிக்கை
அடுத்த செய்தி13-03-2017 தமிழக மீனவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்