தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை என்றால், பிறகு தாக்குவது யார்?

20

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை என்றால், பிறகு தாக்குவது யார்? இலங்கை அரசுக்கு நாம் தமிழர் கட்சி கேள்வி.

இலங்கையை நட்பு நாடு என்று அழைக்கக்கூடாது என்றும், அதற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தங்களின் மன அமைதியை குலைப்பதாக உள்ளது என்றும், இலங்கை அரசுக்கு எதிராக கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் இலங்கை அயலுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தங்களின் மன அமைதியை குலைப்பதாக கூறும் சிங்கள பெளத்த இனவாத இலங்கை அரசு, தனது முப்படைகளையும் பயன்படுத்தி, ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்றொழித்தது தமிழ்நாட்டு மக்களின் மன அமைதியை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும் மனிதாபிமானமுள்ள அரசா என்று கேட்கிறோம்.

தங்களுடைய அரசுக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாற்றுகள் அனைத்தும் வதந்தி மற்றும் தவறான தகவல்களின் அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாற்றுகள் என்று கூறும் இலங்கை அரசு, பின் எதற்காக சுந்திரமான பன்னாட்டு விசாரணை ஏற்க மறுக்கிறது?

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை இலங்கை அதிபரே நியமித்த கற்ற பாடங்களும் இணக்கப்பாடு ஆணையம் என்ற விசாரணை அமைப்பே தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதே. ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் கடந்த செப்டம்பரில் நடந்த மனித உரிமை மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட 40 மனித உரிமை மீறல் குற்றச்சாற்றுகளில் 20 குற்றச்சாற்றுகளை உங்கள் அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறதே? உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புகள் நான்கும் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்களை இலங்கையின் முப்படைகளும் கொன்றொழித்தன என்று ஆதாரத்துடன் கூறுகின்றனரே? இறுதி கட்ட போருக்குப் பிறகு வன்னிப் பகுதியில் இருந்த மக்களில் 1,46,679 பேர் இல்லையே, அவர்கள் என்ன ஆனார்கள் என்று மன்னார் பேராயர் ஜோசப் ராயப்பு எழுப்பிய கேள்விக்கு இன்றுவரை இலங்கை அரசு பதில் கூறாதது ஏன்?

அரசியல் சம உரிமை கேட்டு போராடிய எமது மக்களின் மீது தெற்காசிய வல்லாதிக்கங்களின் ஆதரவுடன்  போர் நடத்தி, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்திக் கொன்று குவித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், தமிழீழ தேசத்தையே முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து, வாழவும் விடாமல், சாகவும் விடாமல் வதைத்துக்கொண்டிருக்கும் சிங்கள பெளத்த இனவாத இலங்கை அரசு, ஏதோ புனிதர்களைப் போல் பேசுவதை ஏற்றுக்கொள்ள இந்த உலகி்ல் ஒரு மடையனும் இல்லை என்பதை இலங்கை இனவெறி அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை, தமிழீழ விடுதலையை வென்றெடுக்காமல் எமது மக்கள் சுதந்திரமாக, அரசியல் முழு உரிமையுடன் வாழ வழியேதும் இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம். அந்த இலக்கை எட்டும் வரை தமிழ்நாடு மட்டுமல்ல, உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரும் தொடர்ந்து போராடுவோம்.

எல்லைத் தாண்டி வரும்தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறானவை என்றும், அதில் உண்மை ஏதும் இல்லை என்றும் இலங்கை அரசு அறிக்கை கூறுவது வேடிக்கையாகவுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லையென்றால் பிறகு அவர்களை தாக்குவது யார் என்பதை இலங்கை அரசு கூற வேண்டும்.

எல்லைத் தாண்டிச் சென்று மீன் பிடிப்பதால்தான் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாகிறார்கள் என்று இந்திய மத்திய அரசே இந்தியாவின் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது என்பதை அதன் நட்பு நாடான இலங்கை அரசு மறந்துவிட்டதா? இந்தியாவின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எத்தனை முறை இலங்கை கடற்படையினரால் எமது மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இது பற்றி ஆயிரக்கணக்கான புகார்களை எமது மீனவர்கள் அளித்திருக்கிறார்கள். ஆனால், அவைகளின் மீது நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்ற எண்ணமற்ற அரசாக இந்திய மத்திய அரசு இருப்பதால், எமது மீனவர்களுக்கு நியாயம் கிட்டவில்லை. எனவே முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கு வித்தையை அறிக்கைகளில் காட்டி ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்.

எல்லைத்தாண்டி வந்து இந்திய கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்கும் சிங்கள மீனவர்களை கைது செய்யும் இந்திய கடலோர காவற்படை எப்போதாவது அவர்களை அடித்துத் துன்புறுத்தியுள்ளதா? என்று கேட்கிறோம். ஏனெனில் இந்திய அரசு உங்களை நட்பு நாடாக கருதுகிறது, ஆனால் நீங்கள் இந்திய மீனவர்களை எதிரி நாட்டு மீனவர்களாகவே கருதி தாக்குதல் நடத்துகிறீர்கள். இதனை தெரிந்தே இந்திய மத்திய காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த உண்மையெல்லாம் தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் இதற்கெல்லாம் பதில் சொல்வார்கள்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திஆஸ்ரேலியாவில் தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்
அடுத்த செய்திபோராட்டங்கள் மீது வழக்குகளை தாக்கல் செய்து முடக்க நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.