தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளது – குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம்

31
தமிழகத்தில் உள்ள 19,000 கிராமங்களின் நிலத்தடி நீர், மிக அபாயகரமான வகையில் மாசடைந்து குடிக்கவோ, நேரடியாக பயன்படுத்தவோ முடியாத நிலையில் உள்ளது.



தமிழ்நாடு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைமை நீரியல் நிபுணர் டி.ஜெயகுமார் இதுபற்றி கூறுகையில்,



‘தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரின் தன்மை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தப்பபட்டது அதில்  மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கைப்பம்புகளில் இருந்தும் தண்ணீர் சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டன.



இவற்றை ஆய்வு செய்த போது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட தண்ணீரில் நைட்ரேட் மற்றும் ஃபுளூரைட் ஆகிய நச்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன.



இதற்கு தீர்வு காண்பது மிகவும் சிரமம். எங்கள் குழு நடத்திய ஆய்வின் படி 35 சதவீத நிலத்தடி நீர் பயன்படுத்த லாயக்கற்றவை என முடிவு செய்யப்பட்டுள்ளது.



தர்மபுரி, ஈரோடு, விருதுநகர் போன்ற பகுதிகளின் நிலத்தடி நீர் மிகவும் ஆபத்தான வகையில் மாசடைந்துள்ளது. இதனால், பாதுகாப்பான தண்ணீரை மக்களுக்கு வினியோகிக்க வாரியத்தின் சார்பில் பல்வேறு கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்றார்.



நைட்ரஜன் கலந்த தண்ணீரை உட்கொண்டால், மனித உடலில் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை குறைத்து அதன் மூலம் ‘கியானோசிஸ்’ எனப் படும் தோல் சம்பந்தமான வியாதி உட்பட பல்வேறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.



உடல் சோர்வு, மந்தநிலை ஆகிய பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என்றும் அதேபோல ஃபுளூரைட் கலந்த நீரை உட்கொண்டால் எலும்பு மற்றும் பற்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .
முந்தைய செய்திஇறுதிகட்ட போரில் இறந்தவர்களையும், தப்பியவர்களையும் மதிக்கவேண்டும் எனில் விசாரணைகள் அவசியம்: ஜேலந்தா
அடுத்த செய்திபன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இன அழிப்பு நினைவு நாள் – பிரித்தானியா