தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது

27

தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது:

மத்திய, மாநில அரசுத் துறைகளின் செயல்பாடு மற்றும் அரசுத் திட்டங்கள், முடிவுகள் ஆகியன பற்றி பொது மக்கள் எவரும் உண்மையறிந்து கொள்ள வகை செய்யும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து தேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கும் சட்டத் திருத்தம் உண்மையை அறிந்துகொள்ள மக்களுக்கு இச்சட்டத்தின் வாயிலாக கிடைத்துள்ள ஜனநாயக உரிமையை பறிப்பதாகும். 

தேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாதிகள் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் பொது அமைப்புகளே என்று தகவல் அறியும் உரிமை அமைப்பு அறிவித்ததன் அடிப்படையில், இந்தக் கட்சிகளின் உள் நடவடிக்கை அனைத்தும் மக்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இந்த கட்சிகளுக்கு எவ்வாறு நிதி கிடைக்கிறது என்கிற விவரத்தை இந்திய மக்கள் பெரும் வாய்ப்பு கிட்டியது. இதனை காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பது ஏன் என்று புரியவில்லை.

நீங்கள் வசூலிக்கும் நிதி நேர்மையானதாக இருந்தால் அதனை மறைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இந்திய பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, அரசியல் கட்சிகள் வசூலிக்கும் நிதிகளுக்கு வருமான வரி விலக்கு இருக்கிறது. அப்படியிருக்கு நிதி எவ்வாறு பெறப்படுகிறது என்பதை ஏன் மறைக்க வேண்டும்? என்பதே நாம் எழுப்பும் கேள்வியாகும்.

இந்திய ஜனநாயகத்தில் இதுவரை இயற்றப்பட்ட எந்த ஒரு சட்டத்தையும் விட, மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு பயன்பெற்ற சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டமாகும். அரசுப் பணியில் இருப்பவர்கள் அதிகாரத்தின் மேல் நிலையில் உள்ளவர்களால் இரகசியமாக வஞ்சிக்கபட்ட நிலையில், அவர்களுக்கு நீதி வழங்க இச்சட்டம் பெரிதும் உதவியது. மேலும் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றால், அதன் அரசியல் அங்கங்களாக இருக்கும் கட்சிகளின் அனைத்து செயல்பாடுகளும் வெளி்ப்படையாகத்தானே இருக்க வேண்டும்? இப்படிப்பட்ட மக்கள் உரிமை காக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றிய கட்சிகளே, இப்போது அதன் பல்லைப் புடுங்க முயற்சிப்பது நியாயம்தானா? ஒரு நாட்டில் வெளிப்படைத்தன்மை கட்டிக்காக்கப்பட்டால்தானே அதனை ஜனநாயக நாடு என்று ஏற்க் முடியும்? இல்லையெனில் அது சர்வாதிகாரத்திற்கும், ஊழலிற்கும்தானே வழிவகுக்கும்?

இப்படிப்பட்ட ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு இந்திய நாட்டின் நாடாளுமன்றத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவிப்பது, இந்நாட்டின் கட்சிகளின் உள் விவகாரங்கள் அனைத்தும் தவறான வழியில் உள்ளதென்றே மக்களால் புரிந்துகொள்ளப்படும். எனவே மத்திய அரசு தானே முன்வந்து முன்மொழிந்துள்ள சட்டத் திருத்தத்தை உடனடியாகத் திருப்பப் பெற வேண்டும். 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திசட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்
அடுத்த செய்திதிருச்சி,கே.கே நகர் பகுதியில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்