செவிலியர்களின் கோரிக்கையைக் செவிகொடுத்து கேட்காது போராட்டத்திற்குத் தடைவிதிப்பதுதான் உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா? – சீமான் கேள்வி

33

செவிலியர்களின் கோரிக்கையைக் செவிகொடுத்து கேட்காது போராட்டத்திற்குத் தடைவிதிப்பதுதான் உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா? – சீமான் கேள்வி

செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள மருத்துவச் சேவை இயக்குனரக வளாகத்தில் மூன்று நாட்களாகப் போராடி வந்த 3,000க்கும் மேற்பட்ட செவிலியர்களின் போராட்டத்திற்குத் தடைவிதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பானது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. சனநாயக நாட்டில் அறவழியில் போராடி உரிமைகளைப் பெறுவதற்கும், அரசிற்கு அழுத்தம் கொடுத்து பிரச்சினையின் தீவிரத்தன்மையை உணரச் செய்வதற்கும் சமூகத்தின் அனைத்துத் தரப்பட்ட மக்களுக்கும் உரிமையிருக்கிறது. இது அரசியலமைப்புச் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளிலே சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கையில், தங்களது உரிமையைக் கேட்டுப் போராடும் செவிலியர்களின் போராட்டத்திற்கு நாட்டின் உச்சபட்ச சனநாயக அமைப்பான நீதிமன்றமே தடைபோட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல! உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பானது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. சம்பளம் போதவில்லை என்பவர்கள் எல்லோரையும் வேலையை விட்டுப் போகச்சொன்னால் யாரை வைத்து அரசாங்கம் நடத்துவது? நீதிபதிகள் சீரான சம்பளங்களைப் பரிந்துரைப்பதற்கான விஸ்வநாத் செட்டி கமிஷன் அமைத்த நீதித்துறை மற்றவர்கள் தங்கள் சம்பள உயர்வு கேட்டால் இப்படியான தீர்ப்புகளை வழங்குவது என்ன நியாயம்?
தமிழக அரசின் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 11,000 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு ஆண்டுகள் இரண்டினைக் கடந்தும் இன்னும் ஊதிய உயர்வோ, பணி நிரந்தரமோ செய்யப்படவில்லை. மாதம் 7,700 ரூபாய் ஊதியமே அவர்களுக்கு இன்னும் வழங்கப்படுகிறது. பணவீக்கத்தால் விலைவாசி ஏறிப் போயிருக்கிற இன்றைய காலக்கட்டத்தில் செவிலியர்களுக்கு வழங்கப்படும் இவ்வூதியமானது மிகவும் சொற்பமானது. அதனை வைத்துக் கொண்டு ஒரு குடும்பத்தின் அத்திவாசியத் தேவைகளை நிச்சயமாய்ப் பூர்த்திச் செய்ய முடியாது. ஆகவே, செவிலியர்கள் வைத்துப் போராடும் கோரிக்கைகள் மிக மிக நியாயமானதே! கூவத்தூரிலும், புதுச்சேரியிலும் கொட்டமடித்து மக்கள் சேவை செய்த சட்டமன்ற உறுப்பினர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிற தமிழக அரசால், இரவு பகலாக மருத்துவச் சேவைக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டு சேவையாற்றும் செவிலியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தித் தர முடியாதா? ஏன் அதனைச் செய்ய மறுக்கிறார்கள்? அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முனையாமல் போராடும் செவிலியர்களுக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுப்பதும், காவல்துறையைக் கொண்டு அச்சுறுத்தல் விடுப்பதும் என்ன மாதிரியான அணுகுமுறை? 3,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் ஓரிடத்தில் கழிவறைகளை மொத்தமாக மூடுவது என்ன மாதிரி செயல்? மனிதத்தன்மையும், மனசாட்சியும் உடையவர்கள் யாராவது அதனைச் செய்ய முன்வருவார்களா? போராட்டக்காரர்களைக் குழு குழுவாய் பிரித்துச் சிதைப்பது, வேலையைவிட்டு நீக்கிவிடுவோம் என மிரட்டுவதெல்லாம் ஒரு அரசப் பதவியிலிருப்பவர்கள் செய்கிற வேலைதானா? அதிகாரத்திமிறினாலும், பதவிவெறியினாலும் ஆளும் ஆட்சியாளர்கள் செய்கிற இவ்வகை அட்டூழியங்களையும், அநீதிகளையும் மக்கள் கவனித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இவ்வாட்சிக்கு எதிராக வன்மம் வளர்க்கிறார்கள். அவ்வன்மம் மொத்தத்தினையும் அறுவடை செய்யும் நாளில் இவ்வாட்சியும், அதிகாரமும் வீழ்ந்து ஒழியும் என்பது சத்தியம்.
மருத்துவம் என்பது ஒரு மகத்தான சேவை. அவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மக்கள் சேவையாற்றுகிற பெரும்பணியைச் செய்பவர்கள் செவிலியர்கள். மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு நீண்டநேரத்தைச் செலவுசெய்யும் அவர்கள் அரசிடம் கேட்டுப் போராடும் கோரிக்கைகள் மிக மிக அத்திவாசியமானதே. ஆகவே, அக்கோரிக்கைகளைத் தமிழக அரசானது உடனடியாகக் கவனத்திற்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திகடலூர் ஆனந்தன் மரணத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமண்ணின் மக்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தாது வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றுவதா? – சீமான் கண்டனம்!