சிறப்பு முகாம்களை மூடக்கோரி 11-07-2012 ல் செங்கல்பட்டு ஏதிலிகள் முகாம் முற்றுகை – செந்தமிழன் சீமான்

43

சிங்கள இனவெறி இராணுவத்தின் படுகொலையில் இருந்து தப்பி தாய்த் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சைமடைந்துள்ள ஈழத் தமிழர்களை சட்டத்திற்குப் புறம்பாக அடைத்துவைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரி வரும் 11ஆம் தேதி புதன்கிழமை நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபடும்.

சிறப்பு முகாம்களில் கால வரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவித்து, தமிழ்நாட்டிலுள்ள மற்ற சாதாரண முகாம்களில் வாழ்ந்துவரும் தங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் 21 நாட்கள் பட்டிணிப் போராட்டம் நடத்தியுள்ளனர். செங்கல்பட்டு முகாமில் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் வந்து சந்தித்துப் பேசிய தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளர், அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துச் சென்றுள்ளார். ஆனால் நமது முக்கியக் கோரிக்கையான சிறப்பு முகாம்கள் அனைத்தையும் இழுத்து மூட வேண்டும் என்பதற்கும், அவைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடு்விக்க வேண்டும் என்றும் விடுத்த கோரிக்கைக்கு இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த செய்தியும் இல்லை.

இதற்கிடையே மேலும் 4 ஈழத் தமிழ் சொந்தங்களை பிடித்துக் கொண்டு வந்து செங்கல்பட்டு முகாமில் அடைத்துள்ளனர். எதற்காக இவர்களை பிடித்துக் கொண்டு வந்து தடுத்து வைத்துள்ளார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள நம் ஈழத்து சொந்தங்களை மிரட்டுவதற்கும், சித்ரவதை செய்வதற்குமே இந்த சிறப்பு முகாம்களை க்யூ பிரிவு காவல் அதிகாரிகளும், காவலர்களும் பயன்படுத்தி வருகின்றனர். எனவேதான் அதனை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இருந்தே எழுப்பி வருகிறோம். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முகாம்களில் வாழும் ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளும், கல்வி உள்ளிட்ட வாய்ப்புகளும் அளிக்கப்பட்டாலும் கூட, அவர்களை மிரட்டித் துன்புறுத்தும் சிறப்பு முகாம்கள் மட்டும் தொடருவது தமிழக அரசு காட்டிவரும் நல்லெண்ணத்திற்கு முரணாக இருந்து வருகிறது. சிறப்பு முகாம்களை இழுத்து மூடினால் மட்டுமே இங்கு வாழும் ஈழத் தமிழ் சொந்தங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவே முடியும். சிறப்பு முகாம்கள் இருக்கும் வரை, அவர்களின் மீதான அடக்குமுறைக்கு முடிவு ஏற்படாது.

எனவே, சட்டத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரான கொடூரமான களமாக க்யூ பிரிவினரால் பயன்படுத்தப்படும் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடக் கோரியும், அதில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நம் சொந்தங்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வரும் 11ஆம் தேதி புதன்கிழமை (ஏற்கனவே 10ஆம் தேதி என்று அறிவிகப்பட்டதை மாற்றி), செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாம் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தம்பிமார்களும், பொறுப்பாளர்களும், தமிழின உணர்வாளர்களும் பெருமளவிற்கு திரண்டு பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். – செந்தமிழன் சீமான்

முந்தைய செய்திசிங்கள இனவெறி ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை கண்டித்து தொடர்வண்டி மறியல் (ஒளிபடங்கள் இணைப்பு)
அடுத்த செய்திசிறப்பு முகாம்களை மூடக்கோரி 11 – 07 – 2012 அன்று செங்கல்பட்டில் நடந்த முற்றுகை போராட்டம் (ஒளிப்படங்கள் இணைப்பு )