சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!

19

சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!
**********************************************************************************
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசின் இரசாயன மற்றும் உரத்தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனம் சிப்பெட்(CIPET) எனப்படுகிற மத்திய பிளாஸ்டிக்ஸ் பொறியியல் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனமாகும். இது முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்தபோது 1968ஆம் ஆண்டுச் சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனமானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பிளாஸ்டிக்துறையில் பெரும்பங்கு ஆற்றிவருவதோடு, நாட்டின் தலைசிறந்த கல்விக்கூடமாகவும் விளங்கி வருகிறது. மேலும், உலகின் பல முன்னணிப் பல்கலைக்கழகங்கள் இவற்றுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களினால் தலைசிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்று சர்வதேச அளவில் புகழினையும் பெற்று விளங்குகிறது.
தொடக்கத்தில் மத்திய அரசைச் சார்ந்து இயங்கிவந்த இந்நிறுவனம் தனது அசுர வளர்ச்சியினால் தற்போது தற்சார்புடனும், மிகை இலாபத்துடனும் வீறுநடைபோட்டு வருகிறது. இது கடந்த 9 ஆண்டுகளில் ஈட்டிய இலாபம் மட்டும் சற்றேறக்குறைய 250 கோடியாகும். தற்போது இந்நிறுவனமானது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுக்க 28 இடங்களில் தனது கிளையை வேரூன்றி இருக்கிறது. பிளாஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் சார்ந்த 12 நிறுவனங்களில் சிப்பெட் நிறுவனம் மட்டுமே இலாபத்தில் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி எண்ணற்ற சிறப்புகளையும், பெருமைகளையும் கொண்டு சர்வதேச அளவில் புகழ்பெற்று தமிழகத்தின் தொழில்துறைக்கே மணிமகுடமாய் விளங்கும் சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்ற முடிவு செய்திருக்கும் மத்திய அரசின் முடிவானது எந்தவகையிலும் ஏற்கத்தக்கதல்ல! நிர்வாக மேம்பாட்டுக்காக டெல்லிக்கு மாற்றுகிறோம் எனக் கதைஅளக்கும் மத்திய அரசு, ஏற்கனவே டெல்லிக்கு மாற்றப்பட்ட எச்.ஒ.சி.எல்., எச்.எப்.எல்., எச்.ஐ.எல்., ஐ.பி.எச்.டி. ஆகிய நிறுவனங்கள் எந்தப் பயனையும் அளிக்கவில்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
சிப்பெட்டின் தலைமையிடத்தை டெல்லிக்கு மாற்றும் முயற்சியை 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலேயே பாஜக அரசு எடுத்தது. அப்போது எழுந்த எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. மேலும், டெல்லிக்கு மாற்றும் முடிவை இனி ஒருகாலமும் எடுக்க மாட்டோம் என்று உத்திரவாதமும் அளிக்கப்பட்டது. தற்போது அந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு மீண்டும் டெல்லிக்கு மாற்றும் முயற்சியைக் கையிலெடுத்திருக்கிறது பாஜக அரசு. சிப்பெட் நிறுவனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய உரம் மற்றும் இரசாயனத்துறையின் அமைச்சராக இருப்பவர் கர்நாடகத்தைச் சேர்ந்த அனந்தகுமார். அதனால், காவிரி நதிநீர் சிக்கலில் வெளிப்படையாகக் கர்நாடகாவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அனந்தகுமாரின் கைங்கரியம்தானோ இது என்ற ஐயமும் இவ்விவகாரத்தில் எழாமல் இல்லை. இத்தோடு, சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்ற முடிவு செய்திருப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அழுத்தம் கொடுக்கும் தமிழகத்தைப் பழிவாங்குவதற்கு மத்திய அரசு கையிலெடுத்த யுக்தியோ என்ற ஐயத்தையும் சேர்த்தே எழுப்புகிறது. அதுபோன்ற ஐயங்களுக்கு இடம்கொடுக்காது ஒருமைப்பாட்டைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.
எனவே, தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்துச் சிப்பெட் நிறுவனத்தின் தலைமையிடத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவினை மத்திய அரசானது உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசானது இச்சிக்கலில் தலையிட்டுச் சிப்பெட் நிறுவனம் தொடர்ந்து தமிழகத்திலேயே இயங்கிட வழிவகைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திதமிழகத்திற்கு வழங்கும் அரிசியின் விலையை உயர்த்திப் பழிவாங்குவதா? – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!
அடுத்த செய்திஎட்டு உயிர்களைப் பலிகொண்ட சிவகாசி வெடிவிபத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும். பட்டாசு ஆலைகள், கடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்