சனல் 4 தொலைக்காட்சியிடம் சிறீலங்காவின் புதிய போர்குற்ற ஆதாரங்கள்?

33

கொலைக்களங்கள் மற்றும் யுத்த சூனியப் பிரதேசம் போன்ற 3 ஆவணப் படங்களைத் தயாரித்த சனல் 4 தொலைக்காட்சியிடம் அண்மையில் மேலதிக வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளது என அறியப்படுகிறது. சிறீலங்கா தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி இதுவரை சுமார் 3 ஆவணப் படங்களை வெளியிட்டுள்ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில் தமிழ் இளைஞர்களை சிறீலங்கா இராணுவம் சுடும் காட்சி மற்றும் தமிழீழத் தேசிய தலைவரது மகன் பாலச்சந்திரனை சிறீலங்கா இராணுவம் கொலைசெய்த காட்சிகள் என்பன இவற்றுள் அடங்கும். இருப்பினும் இதனை தவிர்த்து மேலதிகமாக பிறிதொரு போர்குற்ற ஆதார வீடியோ ஒன்று தற்போது சனல் 4 தொலைக்காட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என உள்ளக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட இந்த வீடியோவில் சிறீங்கா இராணுவத்தினர் புரியும் கொடுமைகள் தெளிவாகப் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோவின் நம்பகத் தன்மை தொடர்பாக ஆராய , இதனை “கிராஃபிக்ஸ்” பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது உண்மையில் முள்ளிவாய்க்காலில் எடுக்கப்பட்ட வீடியோவா என்று ஆராய்ந்த பின்னர் அதனை வெளியிட இருப்பதாகவும் மேலும் அறியப்படுகிறது. ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறீலங்கா தொடர்பாக நவிப்பிள்ளை காரசாரமான விடையங்களை முன்வைத்துள்ளார். இதனை சிறீலங்கா அரசு வன்மையாகக் கண்டித்தும் உள்ளது. நவிப்பிள்ளை வழங்கியுள்ள கால எல்லை பற்றி சிறீலங்கா அரசு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இன் நிலையில் வரும் மார்ச் மாதம் மீண்டும் மனித உரிமைச் சபை கூடவுள்ளது. அதற்கு முன்னதாக இந்தப் போர்குற்ற ஆதார ஆவணப்படம் வெளியாகும் என்று பலராலும் எதிர்வு கூறப்படுகிறது. தற்போது சிக்கியுள்ள போர்குற்ற ஆதார வீடியோ வெளியாகும் பட்சத்தில் அது உலகளாவிய ரீதியாக பெரும் அதிர்வலைகளை தோற்றுவிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனூடாக சிறீலங்கா மேல் மார்ச் மாதம் பாரிய அளவில் சர்வதேச அழுத்தம் ஒன்று பிரயோகிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சில காட்சிகள் விரைவில் வெளியாகும் என அச்செய்திகள் மேலும் தொிவிக்கின்றது.

முந்தைய செய்திதேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டி
அடுத்த செய்திஅமெரிக்கா சிறீலங்காவின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது