கன்னட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிய வேண்டும் : சீமான் வலியுறுத்தல்

92

கன்னட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிய வேண்டும் : சீமான் வலியுறுத்தல்

கன்னட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பெருமதிப்பிற்குரிய கன்னட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட செய்தி இந்தியப்பெருநிலத்தின் அறிவுச்சமூகத்தைப் பெரிதும் பாதித்திருக்கிறது. தொடர்ச்சியாக இந்துத்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராக தனது கருத்துகளைத் துணிவோடு வெளிப்படுத்திக் கொண்டிருந்த முற்போக்காளர் கௌரியின் மரணம் இந்திய நாட்டில் நிலவும் கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைகளை உலகத்திற்கு எடுத்துக்காட்டிவிட்டது. பேராற்றலும், நெஞ்சுரமும், நம்பிக்கையும் நிறைந்த பெண்ணாக வாழ்ந்து, எதற்கும் அஞ்சாமல் மதப்பயங்கரவாதத்திற்கு எதிராகக் கருத்துகளைக் கூறும் எளிய மக்களின் மனசாட்சியின் குரலாக மதிப்புமிகு கௌரி லங்கேஷ் திகழ்ந்தார்.

எல்லாராலும் அறியப்பட்ட அறிவும், ஆற்றலும் நிரம்பிய ஒரு எழுத்தாளரின் உயிருக்குக்கூட இந்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பது மோடி தலைமையிலான பாஜக அரசின் இந்துத்துவ உள்நோக்கப்பணிகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்படுகொலை குறித்து மத்திய அரசு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதோடு உண்மைக்குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. ஏற்கனவே, படுகொலை செய்யப்பட்ட புகழ்பெற்ற எழுத்தாளர் கல்புர்கி படுகொலை குறித்தக் குற்றவாளிகள் இன்னும் கைதுசெய்யப்படாத நிலையில் எழுத்தாளர் கௌரி அவர்களின் படுகொலையும் நடந்திருப்பது நமக்குப் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து கன்னட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் அவர்களின் கொலையில் தொடர்புடைய அனைவரையும் விரைவாக கைதுசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கௌரி லங்கேஷ் அவர்களை இழந்துவிடும் குடும்பத்தினருக்கும், கன்னட இன மக்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அறிவார்ந்த பெருமகள் கௌரி லங்கேஷ் அவர்களுக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி கிருட்டிணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: மழலையர் பாசறை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் – பாபநாசம் (09-09-2017)