கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த காஞ்சி தென்மண்டலம்

111

கட்சி செய்திகள்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த நாம் தமிழர் கட்சி – காஞ்சி தென்மண்டலம்

கஜா புயலின் கொடுஞ்சீற்றத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாகியிருக்கிறது. புயலின்போது 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதன்பிறகு, தென்னைகளின் இழப்பினைத் தாள முடியாமல் 5 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கின்றனர். மக்களின் இக்கொடுந்துயர் துடைக்க அயராது பல நாட்கள் களத்தில் நின்று துயர் துடைப்பு உதவிகளை வழங்கி அரசுகள் செய்யாததை, எவ்வித அதிகாரத்திலும் இல்லாத நாம் தமிழர் கட்சி செய்து காட்டியது. தமிழகமெங்கும் உள்ள நாம் தமிழர் கட்சி உறவுகள் பல குழுக்களாகப் பிரிந்து தங்களால் இயன்ற உதவிகளையும் பொருட்களையும் சேகரித்து உடனடியாக வழங்கினர். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மூன்றுகட்டமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சந்தித்து துயர் துடைப்பு பணிகளை மேற்கொண்டு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினார். 50000 மேற்பட்ட தென்னை, பலா, மா உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கி மீள்கட்டமைப்பு செய்யும் பணிகளைத் தொடங்கிவைத்தார்.

தற்போது புயல் துயர் துடைப்புப் பணிகளின் நீட்சியாக புயலால் பாதிப்படைந்த மாவட்டங்களில் ‘புயலும் புனரமைப்பும்’ என்கிற செயல்திட்டத்தை முன்வைத்து நேரடியாக நாம் தமிழர் கட்சி – காஞ்சி தென்மண்டலம் சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கொடியாலம் என்ற கிராமத்தை தத்தெடுத்தது. நாம் தமிழர் அமெரிக்கா மற்றும் நாம் தமிழர் ஆஸ்திரேலியா உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் இச்செயல் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினர். களத்தில் நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தென்மண்டலம் (செங்கல்பட்டு மதுராந்தகம் உத்திரமேரூர் செய்யூர்) சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் பல குழுக்களாக கடந்த 15 நாட்களாக அந்த கிராமத்தில் தங்கியிருந்து புயலால் பாழடைந்த பள்ளிகள், சாலைகள், வீடுகள் போன்றவற்றை சீரமைத்து புயலால் வீழ்ந்த தென்னை மரங்களை அப்புறபடுத்தி புதிய கன்றுகள் நட்டு கிராமத்தைத் தூய்மைப்படுத்தி சிறப்பான பணியினை செய்து முடித்துள்ளனர். மருத்துவமுகாம் நடத்தி தொற்றுநோய்கள் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, பாய், துணிகள், கொசுவலை, குழந்தைகளுக்கான உணவு மற்றும் பால் மாவு பொருட்கள், போன்ற உதவிப் பொருட்களையும் வழங்கினர். சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைத்த நாம் தமிழர் கட்சியின் காஞ்சி தென்மண்டலச் செயலாளர் சஞ்சிவிநாதன் கூறுகையில் “நாங்கள் செய்தது ஒரு சான்றுதான்; இதைத் தொடக்கமாக எடுத்துக்கொண்டு இதேபோல் பிற கட்சிகளும் அமைப்புகளும் தன்னார்வலர்களும் அரசுகள் செயல்படும்வரை காத்திருக்காமல் தங்களால் இயன்ற ஓரிரு கிராமங்களை அல்லது பகுதிகளைத் தத்தெடுத்து கஜா புயல் ஏற்படுத்திய கொடுந்துயரில் இருந்து நம் உறவுகள் மீண்டுவர உதவவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் விருப்பமாகும். கடந்த 15நாட்களுக்கும் மேலாக நாங்கள் இந்த கிராமத்திலேயே தங்கி களப்பணியாற்ற உதவியாக இருந்த கிராம மக்கள் அனைவருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார் நிறைவாக.

ஆம் நாங்கள், எம் மக்களின் வாக்குக்கானவர்கள் அல்ல; அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கானவர்கள்!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தொகுதியின் செய்தித் தொடர்பாளர் நியமனம்
அடுத்த செய்திஅறிவிப்பு: இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 5ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை