கூடங்குளம் மக்கள் போராட்டத்தை அவமதிக்கிறார் நாராயணசாமி: நாம் தமிழர் கட்சி கண்டனம்

42

கூடங்குளம் அணு மின் நிலையம் தங்களின் வாழ்விடத்திற்கும், வாழ்வாதரங்களுக்கும் கேடானது என்று கூறி, அதனை மூடிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடந்துவரும் நிலையில், அந்தப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் அலுவகலத்தி்ற்கான மத்திய இணை அமைச்சர் வி.நாராணயனசாமி கூறியிருப்பது போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அவமதிக்கும், மிரட்டும் செயலாகும். அமைச்சர் நாராயணசாமியின் கூற்றை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க உதவுவோம் என்று கூறி, பிரதமர் அமைத்த நிபுணர் குழு, மக்கள் போராட்டக் குழுவினருடன் ஒரே ஒரு முறை மட்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், போராட்டக் குழுவினரை மிரட்டும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது ஏன்?

மத்திய அரசின் நிபுணர் குழுவிடம், கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான பாதுகாப்பு விவரங்கள் அனைத்தையும் அறிந்து மக்களுக்கு எடுத்துக் கூற, 60 வினாக்களை போராட்டக் குழுவினர் எழுப்பியுள்ளனர். இதற்கான பதிலை இந்திய அணு சக்தி ஆணையத்திடமிருந்து பெற்றுத் தருவோம் என்று மத்திய அரசின் நிபுணர் குழுவும் உறுதியளித்திருக்கிறது.

இந்த நிலையில், நேற்று நெல்லைக்கு வந்த அமைச்சர் நாராயணசாமி, போராட்டக் குழுவினர் கேட்ட முக்கியமான 6 கேள்விகளுக்கு மட்டுமே பதில் கூறுவோம் என்று கூறியுள்ளார். இப்படிக் கூற இவர் யார்? மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவின் தலைவரா? கேட்ட கேள்விகள் 60க்கும் பதில் கூற மத்திய அரசு அல்லது இந்திய அணு சக்தி ஆணையம் தயாராக இல்லை என்று கருதலாமா? இதுதான் மக்களின் அச்சத்தை போக்கும் நடவடிக்கையா? அல்லது போராட்டக் குழு கேட்ட கேள்விகளுக்கு மத்திய அரசிடம் பதில் இல்லையா? எதற்காக இந்த மிரட்டல் பேச்சு?

திருச்செந்தூரிலும், நெல்லையிலும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாராயணசாமி, கூடங்குளம் போராட்டத்திற்கு எங்கிருந்த பணம் வருகிறது என்று விசாரணை நடத்துவோம் என்று கூறியுள்ளார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு பணம் அளித்தது மக்கள்தான் என்று நிரூபணமானால் கூடங்குளம் அணு உலைகளை இழுத்து மூடிவிடத் தயாரா? என்று அமைச்சர் நாராயணசாமியை கேட்கிறோம்.

பணம் எங்கிருந்த வந்தது என்று கேள்வி கேட்கும் யோக்கியதை காங்கிரஸ் அரசுக்கு உள்ளதா? கூடங்குளம் போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது இருக்கட்டும், 2ஜி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் ஆகியவற்றில் அடித்த ரூபாய் இரண்டு இலட்சம் கோடி ஊழல் பணம் எங்கே போனது என்பதை மத்திய அரசு கண்டுபிடிக்கட்டும். அதற்கான விசாரணை நடத்தட்டும். ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே தொடர்ச்சியாக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறாரே, அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்று ஏன் விசாரணை நடத்தவில்லையே ஏன்.

இந்த நாட்டில் இருந்து பல நூறு இலட்சம் கோடி அயல் நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இரகசிய கணக்குகளில் போடப்பட்டுள்ளது என்று பன்னாட்டு அளவில் நாட்டின் மானம் கப்பலேறிக்கொண்டிருக்கிறது. அதற்கு முதலில் காங்கிரஸ் அரசு விடைகாணட்டும். அயல் நாட்டு வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கணக்குகளின் விவரங்களை வெளியில் சொல்லட்டும். இந்திய உயர் நீதிமன்றமே கணக்கு விவரங்களை வெளியிடு என்று கேட்ட பின்னரும், அதனை வெளியிடாமல் மெளனம் சாதிக்கிறதே மத்திய அரசு, அதற்கு என்ன பதில்? இதற்கு முதலில் நாராயணசாமி பதில் கூறட்டும்.

அணு உலைகளுக்கு எதிராக போராடுபவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை விசாரிப்போம் என்று கூறும் நாராயணசாமி, அணு உலைகளுக்கு ஆதரவாக பேசுவோர், போராட்டம் நடத்துவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைபடுத்திப் பேசும் உங்களுக்கு எந்த அணு உலை தயாரிப்பு நிறுவனம் பணம் தருகிறது? அதற்கெல்லாம் விசாரணை நடத்த தயாராக இருக்கிறாரா நாராயணசாமி?

கூடங்குளம் அணு உலைகளை எதிர்த்து போராடிவரும் மக்களை நேரில் சந்தித்துப் பேச திராணியற்ற மத்திய அமைச்சர், போராடும் மக்கள் மீதும், போராட்டக் குழுவினர் மீதும் அவதூறு பேசுவது, அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளித்தால் அணு உலையின் ஆபத்து வெட்ட வெளிச்சமாகிவிடும் என்ற அச்சத்தினால்தான் என்பது புரிகிறது.

முந்தைய செய்திதமிழினப்படுகொலைக்கு இந்தியா தான் பின் நின்றது உறுதியாகிவிட்டது -சீமான் GTV பேட்டி
அடுத்த செய்திகாலி நாற்காலிகளை நிரப்ப உட்காந்த இராணுவத்தினர்: காமெடி !