குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான திரிபுரா மக்கள் முன்னணி போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி

197

*குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான திரிபுரா மக்கள் முன்னணி போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி*

டிசம்பர் 10 2019 ஆம் தேதி திரிபுராவின் அகர்தலா நகரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திரிபுராவின் அகர்தலா நகரில் பல்லாயிரக்கணக்கில் திரிபுரா மண்ணின் பூர்வகுடிகள், பல்வேறு தேசிய இனத்தலைவர்கள், திரிபுரா மக்கள் முன்னணி தலைவர் அம்மா. பட்டால் கன்யா ஜமாத்தியா அவர்கள் தலைமையில் திரண்டனர் . இந்த மாபெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஜீவா டானிங் , கல்யாணசுந்தரம் , பால் நியூமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

அதில் சிறப்புரையாற்றிய திரு. ஜீவா டானிங் அவர்கள்,

எனது அன்பிற்குரிய திரிபுரா மண்ணின் மக்களுக்கும், மண்ணின் உரிமைகளை காக்க போராடும் திரிபுரா தேசியவாதிகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் மற்றும் தமிழ் தேசியவாதிகளின் வாழ்த்துக்களை கொண்டு வந்துள்ளேன் . நான் திரு. சீமான் அவர்களை தலைமை ஒருங்கிணைப்பாளராக கொண்ட நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவன். எங்களது கொடியில் புலி இடம்பெற்றுள்ளது.
தனது மண்ணை ஊடுருவிகளிடமிருந்து காப்பதே புலியின் தலையை குணமாகும். திரிபுரா மற்றும் தமிழ் மண்ணை காக்க இழந்த உரிமைகளை மீட்க நாம் அனைவரும் புலிகளாக மாற வேண்டும்.

நாம் தமிழர் கட்சி இந்தியாவில் வாழும் அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றிணைத்து அதனதன் தேசிய இன உரிமைகளுக்காகப் இணைந்து போராடுவதை தலையாய கொள்கைகளுள் ஒன்றாக கொண்டுள்ளது.

அதனடிப்படையில் திரிபுரா மக்களின் உரிமைக்காக திரிபுரா மக்கள் முன்னணி யோடு மண்ணின் உரிமைகளை காக்க மீட்க சேர்ந்து போராடுவதில் பெருமை கொள்கிறது .

பாஜக ஆரிய மதவெறி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா திரிபுரா மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் கொஞ்சமாவது மீதி இருக்கும் சமூக பொருளாதார கலாச்சார அரசியல் உரிமைகளையும் பறித்து விடும்.

பூர்வகுடி உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. குடியுரிமைச்சட்டத்திருத்த மசோதா, ஐக்கிய நாடுகள் சபையின் பூர்வகுடிகள் ஒப்பந்தத்திற்கு மட்டுமல்லாது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நாம் அனைவரும் பாஜக அரசிடம் இருந்து அவசர கால அடிப்படையில் காப்பாற்ற வேண்டும்.

தமிழ் எனது தேசிய மொழி. நான் தென்னிந்தியன் இல்லை . மதராசி இல்லை . நான் தமிழன். நான் தமிழர் நாட்டை சார்ந்தவர். அதேபோல நீங்கள் “கோக் பரோக்” மொழியை தாய்மொழியாகக் கொண்ட திரிபுரா மண்ணை சார்ந்தவர்கள்.

ஒரு மொழி, ஒரு மதம், ஒரு நாடு என்கிற பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளின் ஆரிய இந்து வெறிக் கொள்கையை நாம் தகர்த்தெறிய வேண்டும். பாம்புடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த முடியாதோ அதேபோல இந்த ஆரிய இந்து வெறியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.

இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் மற்றும் தேசிய இனங்களின் அடிப்படை சுயநிர்ணய உரிமை மீது கட்டமைக்கப்பட்ட அவசரநிலையை ஆளும் பாஜக ஆரிய இந்து மதவெறி அரசு திணித்துள்ளது.

இந்திய அரசின் மனித குலத்திற்கு எதிரான திட்டங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பெருமுதலாளிகளோடு சேர்ந்து மண்ணின் வளங்களைச் சூறையாட அது பேய் போல கூக்குரலிடுவது. திரிபுரா மண்ணின் எண்ணெய் வளங்களை சூறையாடுகிறது. அதுதான் தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவிலும் மீத்தேன் திட்டம் வழியாக நடக்கிறது.

அந்தந்த மண்ணின் மக்கள் தான் அந்தந்த மண்ணை ஆள வேண்டும் . அதுதான் நாம் தமிழர் கட்சியின் தலையாய கொள்கை. திரிபுரா மண்ணின் மக்களே திரிபுரா மண்ணை ஆளும் போது மட்டுமே தன் சொந்த மண்ணின் மீது அக்கறை இருக்கும் .

தனது அடையாளத்தை ஒரு இனம் இழக்குமானால் தனது நிலத்தையும் இழக்கும். அப்போது மனித குலத்திற்கு எதிராக இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு எளிதாக செயல்படுத்தும். சொந்த மண்ணின் மக்கள் அகதிகளாக மாற்றப்படுவர்.

அன்பிற்கினிய திரிபுரா தேசிய இன மக்களே . நாம் ஒருபோதும் சரணடையக்கூடாது. இந்திய ஒன்றியம் ஒவ்வொரு தேசிய இனங்களின் மண். இது திரிபுரா மண். இந்திய ஒன்றியம் ஒற்றுமையாக இருக்கவேண்டுமெனில் ஒவ்வொரு தேசிய இனங்களின் சமூக,அரசியல்,கலாச்சார, பொருளாதார உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் . அப்படி இல்லையெனில் இந்திய ஒன்றியத்தின் நலனுக்காக அதில் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் நலனுக்காக மத்திய அரசுக்கு கசப்பான வழியில் அனைத்து தேசிய இனங்களும் சேர்ந்து உணர்த்தும் நிலை ஏற்படும்.

திரிபுரா மண்ணின் உரிமைகளுக்காகப் போராடும் திரிபுரா மக்கள் முன்னணியோடும் அதன் தலைவர் அம்மா பட்டால் கன்யா ஜமாத்தியா அவர்களோடும் நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எப்போதும் ஆதரவாக நிற்பார்கள்.

நம்மை நாமே ஆளுவோம். அதுவே சுயராஜ்யம். தேசிய இனங்களின் ஒற்றுமைக்காக நாம் அனைவரும் அதிகபட்ச ஒற்றுமையுடன் சேர்ந்து செயலாற்றுவோம். வெகு விரைவில் இந்திய ஒன்றியத்தின் அனைத்து தேசிய இனங்களும் வீறு கொண்டெழும். அதில் ஆரிய இனவெறி அரசாங்கங்கள் தடமற்று போகும், என உரையாற்றினார்.

பேராசிரியர். கல்யாண சுந்தரம் அவர்கள் உரை :

பெரும் பாரம்பரியத்திற்கும் வரலாற்றுப் பெருமைக்குமுரிய திரிபுரா பூர்வகுடி மக்களே.

திரிபுரா மக்கள் முன்னணியின் தலைவர்களே. பல்வேறு தேசிய இனங்களின் பிரதிநிதிகளே. வணக்கம்.

நான் பல்வேறு வரலாற்று பெருமைகளுக்கு சொந்தமான தமிழ் தேசிய இனத்தின் மகன். நான் நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதியாக உங்கள் முன்னால் நிற்கிறேன்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய பாடல் ஒன்றை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே! இதுதான் எங்கள் அரசியல் கொள்கை நிலைப்பாடு. அதன் அடிப்படையில் அந்தந்த தேசிய இனத்தின் பூர்வகுடி மக்களான மண்ணின் மைந்தர்கள் தான் அந்தந்த தேசிய இனத்தை ஆளவேண்டும். அந்தந்த மண்ணில் அவர்கள் சுயநிர்ணய உரிமையோடு வாழ வேண்டும். இதுதான் எங்கள் கொள்கை நிலைப்பாடு. நம் வீட்டில் நாம் மட்டும் தான் வாழ உரிமை உண்டு . அதே போல எங்கள் நாட்டையும் நாங்கள் மட்டுமே ஆள உரிமை உண்டு .

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது திரிபுராவின் முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் வீடு , நிலமற்ற எளிய மனிதர்
என கேள்விப்பட்டதுண்டு. நான் உங்களை எல்லாம் சந்தித்த பிறகு தான் அவரே இந்த நிலத்துக்கு சொந்தக்காரர் இல்லை என உணர்கிறேன். பன்னெடுங்காலமாக பூர்வகுடி மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட அதிகாரத்திருட்டின் ஒரு மையமாகவே அவரும் இருந்துள்ளார் என இப்போது உணர்கிறேன்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை தமிழர்களே ஆளாததால் ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்த எனக்கு உங்களின் வலிகளை உணர முடிகிறது.

திரிபுரா மண்ணை ஆளும் உரிமை திரிபுரா பூர்வகுடி மக்களுக்கே உண்டு. அதுதான் நேர்மை. அதுதான் தர்மம். அதுதான் உண்மையான ஜனநாயகம். அதே கொள்கை நிலைப்பாட்டோடு உங்களுடன் நான் நிற்கிறேன்.

இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்திய ஒன்றியத்தின் பெருமை . இந்திய ஒன்றியத்தின் ஆன்மாவே அதில் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் வேற்றுமைகளை காப்பதில் தான் உள்ளது. ஆனால் ஆளும் பாஜக அரசு இன்று ஒற்றுமை என்கிற பெயரில் இந்தியாவில் வாழும் பல்வேறு கலாச்சாரங்களையும், மொழிகளையும் திட்டமிட்டு அழிக்கிறது .

ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு நாடு , ஒரு மதம் என்கிற முழக்கங்களை தற்பொழுது அதிகமாக கேட்கிறோம். இந்த முழக்கங்கள் இந்தியாவின் அடிப்படை அரசியலமைப்புக்கு எதிரானது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான இவ்வகையான செயல்பாடுகளை நாம் ஒற்றுமையுடன் வெல்ல வேண்டும்.

நம் இனம் , மொழி , வரலாறு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க அனைவரும் சகோதரத்துவமாக ஒன்றிணைய வேண்டும் . சொந்த மண்ணிலேயே உரிமைகளை இழந்து நிற்கும் திரிபுரா மக்களுக்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

அகர்தலா உள்ளிட்ட திரிபுரா மாநிலத்தின் சட்ட விரோதமான குடியேற்றங்கள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு பூர்வகுடி மக்களின் கையில் அதிகாரம் கொடுக்கப்படவேண்டும்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது . இது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மனிதத்தன்மைக்கும் எதிரானது . மத அடிப்படையிலான குடியுரிமை என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, 15 க்கு எதிரானது . குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா இந்திய ஒன்றியத்தின் பெருநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தாது . ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களைப் பற்றி இந்திய குடியுரிமை சட்டத்தில் ஆளும் பாஜக அரசாங்கம் ஏன் மௌனம் சாதிக்கிறது.

இதுபோன்ற சட்டங்களை அமல்படுத்தும் முன்னதாக இந்திய அரசாங்கம் இந்தியாவில் வாழும் பல்வேறு வகையான தேசிய இனங்களிடம் பல்வேறு கட்டங்களில் கலந்துரையாடி முடிவுகள் எடுக்க வேண்டும். அதைச்செய்யாமல் உடனடியாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்தினால் கடும் ஜனநாயகப் போராட்டங்களை இந்திய அரசு சந்திக்க நேரிடும் . தன்னுடைய அண்டை நாடுகளுடன் உறவை பேணிக்காக்க தன் சொந்த நாட்டு மக்களின் உரிமைகளை பறிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

அன்புக்குரிய திரிபுரா மக்களே நாம் தமிழர் கட்சியின் சார்பாகவும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பாகவும் உங்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களும் ஒற்றுமையுடன் இணைந்து அதனதன் சுயநிர்ணய உரிமையை பேணிக்காக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைவோம்.
உங்கள் குரலை உயர்த்துங்கள்!
உங்கள் கரங்களை உயர்த்துங்கள்!

என உரையாற்றினார்.

முனைவர். பால் நியூமன் அவர்கள் பேசும் போது,

இந்த உலகம் 71-வது ஐநா மனித உரிமைகள் தினத்தை கொண்டாடுகின்ற வேளையில், திரிபுராவின் பூர்வகுடி மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் தங்கள் தாய் நிலத்திலேயே போராட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நான் “National Geographic” மற்றும் “Discovery Channel” விரும்பிப் பார்ப்பேன். ஒரு விலங்கு கூட மற்ற இனத்தினை தங்களுடைய எல்லைக்குள் அனுமதிப்பதில்லை.

70 ஆண்டுகளுக்கு முன்னால் உங்கள் முன்னோர் ஒரு வரலாற்றுப் பிழையினை செய்துள்ளனர், அது என்னவென்றால், இந்தியாவுடனான இணைப்பு ஒப்பந்தத்தில் வெளியாட்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதம் இல்லாமல் கையெழுத்து போட்டது தான். இந்த 70 ஆண்டுகளுக்குள் திரிபுரா பூர்வகுடிகளின் மக்கள் தொகை 93 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக குறைந்துள்ளது. இது இந்திய ஆளும் வர்க்கத்தின் திட்டமிட்ட சதி என்பது தெளிவாக தெரிகிறது.

இந்தியா என்ற நாடு 562 சமஸ்தானங்களை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இணைத்து உருவாக்கப்பட்டது. பல தேசங்களின் தேசம்தான் இந்தியா. நான் தமிழ் தேசத்தை சார்ந்தவன், நீங்கள் திரிபுரா தேசத்தைச் சார்ந்தவர்கள், நாம் அனைவருக்கும் அவரவர் தேசத்தின் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றை கட்டமைத்துக் கொள்ள உரிமை உள்ளது.

இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், பங்களாதேஷ் இந்துக்களை அனுமதிப்பதன் மூலம், திரிபுராவின் பூர்வகுடி மக்கள் தொகையினை மேலும் குறைந்து உரிமைகளில் இருந்து ஓரங்கட்டப்பட வழிவகை செய்யும்.

இந்த சட்ட மசோதா, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அப்பட்டமான விதி மீறல். அரசியலமைப்பு சட்டத்தின் ஐந்து அடிப்படை விதிகளே மீறப்பட்டுள்ளது.

இறையாண்மை:

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த இந்துக்களை அங்கீகரிப்பதன் மூலம், இந்த நாட்டின் இறையாண்மையும் பூர்வகுடிகளின் இறையாண்மையும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

பொதுவுடமை:

ஒரு சமுதாயத்தினை குறி வைப்பதன் மூலம், இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் என்ற கருத்தினை உடைக்கிறது. இந்த விடயத்தில் பூர்வகுடி மக்களுக்கு சேர வேண்டிய
நலத்திட்டங்கள் அனைத்தையும் சட்டவிரோத பங்களாதேஷ் இந்துக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பூர்வகுடிகள் தங்களின் வளங்களை அனுபவிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பின்மை:

இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவே மதச்சார்பின்மை தான். குடியுரிமை சட்டத்
திருத்த மசோதாவானது மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வாக்கு வங்கி அரசியலுக்காக சில மதங்களை இணைப்பதும், சில மதங்களை விலக்குவதும் அனைத்து மதங்களும் சமம் என்ற அடிப்படை விதியை மீறுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி மற்றும் இந்து மத திணிப்பின் மூலம் பாஜகவின் இந்து மத அடிப்படைவாத முகம் வெளிப்பட்டுள்ளது.

ஜனநாயகம்:

இந்த அரசின் பெரும்பான்மைவாத நடவடிக்கைகளால் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கையே வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த மண்ணில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் நியாயமான ஜனநாயக உரிமை மிதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு:

மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய அளவுக்கு சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன. சட்டத்திற்குப் புறம்பான வெளிநாட்டினரை குடியேற்றுவதன் மூலம் பூர்வகுடிகளின் அரசியல் அமைப்பு உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளன.

நீர் வளம், நில வளம், காட்டு வளம் ஆகிய மூன்றும்தான் பூர்வகுடி மக்களின் அடிப்படை ஆதாரங்கள். பல்லாண்டு காலமாக, பாஜக முதல் காங்கிரஸ் வரை உள்ள தேசிய கட்சிகள், சட்டவிரோத பங்களாதேஷ் இந்துக்களை குடியமர அனுமதித்ததால், அனைத்து அடிப்படை ஆதாரங்களும் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மக்களின் நீர்நிலைகளும் மாசு படுத்தப் பட்டுள்ளது. அவர்கள் பூர்வகுடி மக்களின் நிலங்களையும் அந்நியர் குடியேற்றத்திற்காக பறித்துள்ளனர. மேலும் பூர்வகுடிகளின் முக்கிய ஆதாரமான காடுகளையும் அந்நியர்கள் அபகரித்துக் கொண்டு உள்ளூர் வாசிகளை ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளனர்.

இந்தியா ஐநா மன்றத்தின் பூர்வகுடி மக்கள் உரிமைகள், ICCPR மற்றும் ICESCR ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த ஒப்பந்தங்களும் மீறப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பு, உலகமயம் தாராளமயம் என்ற பெயரில் உங்கள் வளங்கள் கொள்ளையடிக்கப்படும்.

அகதிகள் முகாமில் வாடும் ஈழத்தமிழ் இந்துக்களையும், மலேசியாவில் தாக்கப்பட்ட தமிழ் இந்துக்களையும் இந்த சட்டத்தில் புறக்கணித்திருப்பதின் மூலம் ஆளும் அரசின் கொடிய எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக, தமிழ் மக்கள் தேசிய கட்சிகளுக்கு வாக்களிப்பதில்லை, தமிழர்கள் தங்களுக்கு வாக்கு வங்கியாக மாற மாட்டார்கள் என்று தெரிந்தே தமிழர்களை புறக்கணித்துள்ளனர்.

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார சீர்கேடுகளை சரி செய்வதை விடுத்து, இந்த அரசு, பெரும்பான்மை மக்களை மட்டும் மகிழ்வித்து, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு, அவர்களின் தோல்வி முகத்தினை மறைக்க முயலுகின்றனர். சிறிது காலத்திற்கு முன்னர் காஷ்மீரிகளை குறிவைத்து நடவடிக்கை எடுத்தார்கள். தற்போது எல்லையோர மாநிலங்கள், குறிப்பாக நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களை குறி வைத்துள்ளனர்.

பூர்வகுடி மக்களை மிதித்து, சில குறிப்பிட்ட பணக்கார வகுப்பின் மக்களுக்கு உதவுவதுதான் தேசிய கட்சிகளின் நீண்ட கால திட்டமாக உள்ளது. நம் உரிமைகளை பாதுகாக்க, அதிகாரப்பகிர்வு மற்றும் மண் சார்ந்த அரசியல் கட்சிகள் தான் ஒரே தீர்வு. ஆதலால், அம்மா. பட்டால் கன்யாவை ஆதரித்து, வலு சேர்த்து, நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நமக்கு இந்த சமுதாயத்திலிருந்து இன்னும் நிறைய பட்டால் கன்யா போன்ற தலைவர்கள் தேவைப்படுகின்றனர் . அவரோடு கைகோர்த்து உங்களுடைய புனித கனவு நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுங்கள்.

என்றும் உங்களுடன் தமிழினம் நிற்கும் என சிறப்புரை ஆற்றினார்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்
அடுத்த செய்திநாம் தமிழர் ஆஸ்ட்ரேலியா – மெல்போர்ன் பொறுப்பாளர்கள்-2019