கியார் புயலில் சிக்குண்ட 200க்கும் மேற்பட்ட மீனவச் சொந்தங்களை உடனடியாக மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

38

அறிக்கை: கியார் புயலில் சிக்குண்டு கரைதிரும்பாத 200க்கும் மேற்பட்ட மீனவச் சொந்தங்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட மீனவச் சொந்தங்கள் இன்னும் கரைதிரும்பாமல் இருப்பதும், அவர்களது நிலை குறித்து எவ்விதத் தகவலும் தெரியாமல் இருப்பதும் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறையைச் சேர்ந்த பிளஸ்ஸிங், லூர்தாசன், வள்ளவிளையைச் சேர்ந்த கார்மல் மாதா, பசலிகா, லார்ட் மாதா, ஜெர்மியா, செயின்ட் மேரி, மேல்மிடாலத்தைச் சேர்ந்த சியோன் மேரி, இரவி புத்தன் துறையைச் சேர்ந்த லூர்து அன்னை, ரோசா மைஸ்டிக்ஸ், ரெடிமீர், மோகன், தூத்துரைச் சேர்ந்த ஜேக்கப் ஆகியோரின் 13 படகுகளோடு சுமார் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் மற்றும் கேரளத்தின் கொச்சி, முனம்பம் ஆகிய மீன்பிடித்துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

அரபிக்கடலின் கிழக்கு திசையில் உருவாக்கியிருக்கிற கியார் புயல் அபாய அறிவிப்பு வானிலை ஆய்வு நிலையத்திலிருந்து வந்தச் செய்தியை அறிந்த மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர். பல படகுகள் புயலில் சிக்கி சிறு சிறு பாதிப்புகளுடன் கரை திரும்பிய செய்தியும் கிடைத்தது. இன்னமும் கரை திரும்பாத அல்லது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கின்ற 200க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் மிகுந்த அச்சத்திலும், கவலையிலும் ஆழ்ந்திருக்கின்றன.

மத்திய, மாநில அரசுகள் உடனே இதில் கவனம் செலுத்தி தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அல்லது காணாமல் போயிருக்கிற மீனவர்களைத் தேடி கண்டறிந்து உடனடியாக கரைசேர்க்கும் படியும், மத்திய அரசின் கடற்படையும் அதீத கவனம் செலுத்தி நாட்டின் குடிமக்களாகிய மீனவர்களைத் தேடி கண்டுபிடிக்கும் பணியில் உடனடியாக ஈடுபட வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமருத்துவர்கள் போராட்டத்தில் ஆதரவளித்து உரையாற்றிய சீமான் – சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை
அடுத்த செய்திகுமரி மாவட்டத்தில் தொடர்மழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்புப்பணிகளுக்கு அணியமாவோம்!