காவிரி நதி நீர்: கர்நாடக அரசியல்வாதிகளின் பேச்சு நாட்டின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்துவிடும்: நாம் தமிழர் கட்சி

35

காவிரியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தமிழ்நாட்டிற்கு தரக் கூடாது என்று கர்நாடக சட்டப் பேரவையில் காங்கிரஸைச் சேர்ந்தவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா பேசியிருப்பதும், அதனை ஆளும் பா.ஜ.க. உள்ளிட்ட உறுப்பினர்களும், அம்மாநில முதல்வரும் வழிமொழிந்திருப்பதும் நீதிக்குப் புறம்பான, பகைமை உணர்வைத் தூண்டுகிற பேச்சாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக நேற்று கர்நாடக மாநில சட்டப் பேரவையில் நடந்த விவாதத்தில் பேசிய அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சித்தராமையா, கர்நாடகத்தின் சில பகுதிகளில் வறட்சியும், மைசூரிலும், பெங்களூருவிலும் குடி நீர் பற்றாக்குறையும் நிலவிவரும் நிலையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிடக்கூடாது என்று பேசியுள்ளார். அவருக்கு பதிலளித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, கர்நாடக விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும் என்றும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் எண்ணம் ஏதுமில்லை என்றும் கூறியுள்ளார். இது அண்டை மாநிலத்தின் நலனை முற்றிலுமாக புறக்கணிக்கும் நியாயமற்றப் போக்கு என்பது மட்டுமின்றி, காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புக்கும் முரணானதாகும்.

காவிரியில் அளவிற்கு அதிகமான நீர் வரத்து ஏற்பட்டு, வெள்ள அபாயம் ஏற்படும்போது மட்டும் அணைகளைத் திறந்து நீரை வெளியேற்றும் கர்நாடக அரசு, நீர் வரத்து குறையும் காலத்திலெல்லாம் இப்படிப்பட்ட அடாவடித்தனமான பேச்சுகளைப் பேசி, தமிழ்நாட்டிற்கு உரிய நீர்ப் பங்கை அளிக்க மறுத்து வருகிறது. காவிரியில் உபரியாக நீர் வரும் காலத்தில் திறந்து விடுவதைப்போல், நீர் வரத்து குறையும் காலத்திலும் அதற்குத் தக்கபடி உரிய நீர் அளவை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்பதை காவிரி நடுவர் மன்றம் அளித்த இரண்டு தீர்ப்புகள் மட்டுமின்றி, உச்ச நீதிமன்றமும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நியாயமான இத்தீர்ப்புகளை கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மதிப்பதில்லை. ஜூன் முதல் மே வரையிலான ஒரு நீராண்டில் ஒவ்வொரு மாதமும் எத்தனை டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்பதை காவிரி நடுவர் மன்றம் ஒரு அட்டவணையாகவே அளித்துள்ளது. ஆனால் அதனை ஒருபோதும் கர்நாடக அரசு நிறைவேற்றியதில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசும் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் உழவும், உற்பத்தியும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.
ஒரே நாட்டில் உள்ள இரண்டு அண்டை மாநிலங்களுக்கு இடையில் நதி நீர்ப் பகிர்வை முறைப்படுத்த முடியாத அரசாக மத்திய அரசு உள்ளது. 38 ஆண்டுக் காலமாக காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமை மறுக்கப்பட்டு, காவிரி முகத்துவார மாவட்டங்களில் நெல் சாகுபடி பன்மடங்கு குறைந்துள்ளது. ஆனால், அண்டை நாடான பாகிஸ்தானுக்கு உரிய நீர் அளவை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி அதன் கிளை நதிகளில் இந்திய அரசு உறுதி செய்து நீரிணை அளித்து வருகிறது. பக்ளியார், கிஷண் கங்கா ஆகிய இரண்டு அணைகளை கட்டிபோதும் கூட பாகிஸ்தானிற்கு செல்ல வேண்டிய நீரின் அளவை குறையாமல் பார்த்துக்கொள்கிறது இந்திய மத்திய அரசு. இந்த நீதி தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படுவது ஏன்? என்பதுதான் நமது கேள்வி.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் நீர் உரிமைகளை பறிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலை நீடித்தால் அது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைத்துவிடும் அபாயம் ஏற்படும். எத்தனை ஆண்டுகளுக்குத்தான் தமிழன் பொறுமையுடன் காத்திருப்பான்? தமிழ்நாட்டிற்குரிய உரிமையை மறுப்பதே அண்டை மாநிலங்களின் அரசியலாக இருப்பது கேவலமானதாகும். வார்த்தைக்கு வார்த்தை நாட்டின் ஒற்றுமை பற்றியும், இறையாண்மை பற்றியும் பேசும் காங்கிரஸ் கட்சி, கர்நாடகத்தில் தனது கட்சியின் தலைவர் இவ்வாறு பேசியதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது? அரசியலிற்காகவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும் தமிழ்நாட்டின் உரிமை விலை பேசப்படுமானால், அதனை எதிர்த்து தமிழனும் புரட்சி செய்யும் நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

முந்தைய செய்திதிருவள்ளூர் மேற்கு – திலீபன் நினைவேந்தல் 25-9-2012
அடுத்த செய்திஈழத்தமிழர் பிரச்சனைக்கு சிலையாய் உள்ள தலைவர்களிடம் மனு கொடுக்கிறேன்: புதுச்சேரியை கலக்கிய ரவீந்திரன்!!