கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மறைவு தமிழ்ப்படைப்புலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் இரங்கல்

415

கவிதையின் பால்வீதியில் நம்மைத் தன் எழுத்துக்களால் கூட்டிசென்ற கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மறைவு தமிழ்ப்படைப்புலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் இரங்கல்

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மறையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எளிய நடையும், சிலேடை மொழியும் கொண்டு கூரியக் கருத்துகளும், சீரிய திறனும், மிகுந்து நெஞ்சுரத்தோடு சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டும் அமுதப் பாக்களை அழகுத்தமிழில் அள்ளித் தந்திட்டப் வானம்பாடி கவிதை மரபின் தனித்துவமான மூத்த படைப்பாளி பெருங்கவிஞர் ஐயா கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மறைவுச்செய்தியானது மிகுந்த மனவேதனையையும், ஆழ்ந்த வருத்தத்தையும் தருகிறது. அவரை இழந்துவிடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத்துயரில் நானும் பங்கேற்கிறேன்.

கவிதைக்குப் பொய்யழகு என்ற இலக்கணத்தைத் தகர்த்து உண்மையை நெஞ்சுரத்தோடு உலகறியச் செய்யத் தனது தனது பாக்களின் மூலம் போர்தொடுத்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். பெரும்பான்மைச் சமூகம் கொண்டிருக்கிறக் கருத்தோட்டமாக இருந்தாலும், அதனைச் சாடி முற்போக்கு முத்துகளை விதைக்கிற பாங்கினைத் தனது கவிதைகள் மூலம் தந்தவர். தம் கவிபாடும் வல்லமையாலும், தனித்திறனாலும் புதுக்கவிதைத் துறையில் புதுமையில் புகுத்தி நவீன இளைய தலைமுறையினரின் நெஞ்சம் ஈர்த்த இப்பெருங்கவிஞனின் இழப்பு என்பது தமிழ் படைப்புலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்! ‘பால்வீதி’ கவிதைத்தொகுப்பின் மூலம் தன்னைத் தலைசிறந்த படைப்பாளியாக நிலைநிறுத்திக் கொண்ட கவிக்கோ அவர்கள் நம்மைவிட்டு மறைந்தாலும் அவரது சீரிய பாக்கள் மூலம் தமிழ் படைப்புலகில் வாழ்ந்துகொண்டுதானிருப்பார். தமிழ் இலக்கிய உலகை ஆண்டுக் கொண்டுதானிருப்பார். கடைசி வரை கொள்கை உறுதியுடன் வாழ்ந்து மறைந்த படைப்பாளிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திசிகிச்சை பெற்றுவரும் ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் குடும்பத்திற்கு சீமான் நேரில் ஆறுதல்
அடுத்த செய்திமறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் உடலுக்கு சீமான் இறுதி மரியாதை